Saturday, March 12, 2016

உச்சங்கள்

 
வேலைப் பளுவால் இந்தப் பக்கம் வந்து பல நாட்களாகிவிட்டது. இப்போதும் நேரம் குறைவுதான்.

எனக்கென்னவோ நீலத்தில் ஜெயமோகன் ஒரு எழுத்தாளராக அடைந்த உச்சத்துக்குப் பிறகு மிச்சப் பகுதிகள் எல்லாமே ஓரிரு மாற்று குறைவாகத்தான் தெரிகின்றன. இத்தனைக்கும் நான் நீலத்தை முழுதாக உள்வாங்கிக் கொண்டேன் என்று சொல்ல முடியாது. இனி ஜெயமோகனாலேயே அந்த உச்சத்தை அடைய முடியுமா என்று தெரியவில்லை.

வெய்யோனை நான் விட்டுவிட்டுத்தான் படிக்க முடிந்தது. கௌரவக் குழந்தைகளின் உலகம் இந்தப் பகுதியின் படைப்பூக்கத்தின் உச்சம் என்று கருதுகிறேன். இந்தப் பகுதி மட்டுமல்ல, எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் அது முதலிடத்திலோ இல்லை அதற்கு மிக அருகிலோதான் நிற்கிறது.

சுஜாதன் கலிங்க அரசியின் சேடியிடம் வஞ்சினம் உரைக்கும் இடம் இன்னொரு உச்சக்கட்டம். அனைத்தையும் இழக்க வேண்டி வரலாம் என்று தெரிந்தும் அஸ்வசேனனை அணைக்கும் தருணமும் இன்னொரு உச்சக்கட்டம்தான்.


பிரஹசன நாடகம் இன்னொரு பிரமாதமான இடம். 

என் கண்ணில் பீமார்ஜுனர்களின் கண்ணில் தெரியும் பகைக்கு சரியான காரணங்கள் இல்லை. துரியோதனன் விழுந்தால் அவர்கள் கை தூக்க ஓடி வந்திருக்க வேண்டும், அதுதான் அவர்களின் இயற்கையான எதிர்வினையாக இருந்திருக்கும். கௌரவர்களோடு ஆற்றில் குளித்த பீமனும் அரிஷ்ட நேமியை நேரில் பார்த்துப் பழகிய அர்ஜுனனும் வேறு என்ன செய்திருக்க முடியும்? உண்டாட்டுக்கு அழைத்துவிட்டு தருமன் எங்கே போக முடியும்? கண்ணனைத்தான் காணோம், பலராமன் எங்கே? கை தூக்கிவிட பலராமன் முன்வரவில்லையா? அப்படி முன்வராதவர்களை அடித்துத் துவைக்க பலராமனும் கிளம்பவில்லையா? 

ஆர்வி