Monday, March 7, 2016

இளிவரல்




எண்ணி எண்ணி எதிர்பார்த்திருந்த கணம் இன்று வந்து விட்டது. ஒரு சிறிய புன்னகை, அத்தனை பெரிய போருக்குக் காரணமாக முடியுமா என்ற கேள்விக்குப் பதிலை இன்று வெண்முரசு தந்து விட்டது. மீண்டும் வெண்முரசில் உவமை என்பதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் ஜெ. திரௌபதியின் உதட்டு வளைவு, விழிகளின் நகைப்பு – அதை வெண்முரசு ‘ஒரு விழியொளி அம்புமுனை போல. ஒரு சிரிப்பு அணையாத தீ போல. ஒரு காலத்துளி மலையுச்சிக்கூர் போல. சுருளவிழ்ந்து எழும் நாகம். கோட்டெயிற்று அம்பு கரந்த நச்சுத்துளி. இக்கணம். இக்கணம். இக்கணம்.’ – அந்த புன்னகையின் கூர்மையே மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. ஏன் கூர்மை? இதற்கு அந்த கூர்மை சென்று தைத்தவனைப் பற்றி வெண்முரசு சொல்வதைப் பார்க்க வேண்டும். மயனீர் மாளிகையில் இருந்து வெளியில் வந்த துரியனின் முகம் ‘நீர்நிறைந்த தோற்கலம்போல’ எடை கொண்டிருந்ததாகச் சொல்கிறது வெண்முரசு. அந்த நகைப்பின் கூர்மை அந்த தோற்கலத்தை குத்தி துளையிட்டு விட்டது. இனி தேங்கிய வஞ்சமெல்லாம் அத்துளை வழியாக ஒழுகி ஓடுவது ஒன்றே வழி!! ஊழின் கணங்கள். இளிவரல் கொண்டாரைப் போல் பற்றி எரிவோர் யார்!! பாவம் துரியன். இன்றைய அத்தியாயம் முடிகையில் மனதில் ஏறிய பாரம் அவ்வளவு எளிதாக இன்று இறங்காது.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்