Wednesday, March 9, 2016

வினையாகும் விளையாட்டு (வெய்யோன் - 77]

        ஒரு பெரும் துயரம், ஒரு பெரும் பகை, ஒரு பெரும் இழப்பு,  பெரும்பாலும் ஒற்றை விதையில் முளைத்தெழுந்ததாக இருக்காது. அது உண்மையில் பல விதைகளில் முளைத்தெழுந்தவை ஒன்றை ஒன்றை தழுவி வளர்ந்து ஆனால் ஒற்றை மரமென கண்ணுக்கு தெரிபவையாக இருக்கும்.   அதற்கு விதையென என எதாவது ஒன்றை மற்றும் சொல்வது சரியென ஆகாது.

       துரியோதனன் உணரும் அவமதிப்பு, அதன் காரணமாக அவன் அடையும் மனத்துயரம், என்பது ஒற்றை விதையில் முளைத்ததல்ல. அதில் பல்வேறு காரணிகள் இருக்கின்றன  என நினைக்கிறேன்.

        தருமன் அந்த நேரத்தில் அவையில் இல்லை. என்றாலும் அவன் இத்தகைய மாய மாளிகைக்கு விருந்தினரை அழைத்துவருவதற்கு அனுமதித்தது மிகவும் தவறு. விருந்தினர்கள், மோப்பக் குழையும் அனிச்சம் போன்றவர்கள். அவர்களை முதலில்  மனமயக்கத்தில் ஆட்படுத்தி மாய பிம்பங்களை தோன்ற வைத்ததே தவறு. அதை அனைவரும் ரசிப்பார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும். மற்றும் அதற்கான முன்னறிவிப்பு இல்லாமல் இதை செயல் படுத்துக்கிறார்கள். நெருங்கிய நண்பனே இத்தகைய விளையாட்டுக்கு கோபித்துக்கொள்ளக்கூடும்.  அல்லது மாளிகையில் இப்படி மாயப் பொறிகள் உள்ளன. அவை மதி மயக்குபவை. அதை சோதித்து பார்க்க விருப்பமிருப்பவர்கள் வரலாம் என அதை ஒரு விளையாட்டாக ஆக்கியிருக்க வேண்டும். உண்டாட்டுக்கு போகும்கூடத்தில் இப்படி ஒரு நீர் நிலை இருக்கிறதென்றால் அங்கு அரச விருந்தினர்கள் தடுமாறாமல் இருக்க சேவகர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதில் துரியோதனன்தான் என்றில்லை, பலராமர் , விழுந்திருக்கலாம். முதிய அரசர்கள் விழுந்திருக்கலாம். இப்படி எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் இவ்வரங்கினில் விருந்தினரை அழைத்தது மிகப் பெரிய தவறு. இதற்கு  தருமன்தான்  பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்.  ஒருவேளை அவனுக்கே இந்த மாளிகையைப்பற்றி தெரியாமல் இருந்திருக்கக் கூடும்.  அவன் அரங்கில் இருந்திருந்தால் உடன் ஓடிச்சென்று துரியோதனனிடம் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்த முயன்றிருப்பான்.

       விழுந்த ஒருவனைக்  கண்டு நகைப்பது மற்ற அரசர்கள் என்றால் கூட தவறில்லை. ஆனால் மற்ற பாண்டவர்களைப்  பொருத்தவரை துரியோதனன் இவர்கள் விருந்தினன், மூத்தவன். ஆயிரம் கோபங்கள் அவர்களுக்கிருந்தாலும் அவை ஒருவேளை நியாயமானதாக இருந்தாலும் கூட ஒரு அழைக்கப்பட்ட விருந்தினன் மிகச்சிறிய அளவில் கூட சங்கடப்படும்படி நேர்வது விருந்தோம்பலின் பெருந்தவறென ஆகும்.  பாண்டவர்கள் ஏன் இப்படி நடந்துகொண்டார்கள் என்பது  எனக்கு வியப்பளிக்கிறது. ஒருவேளை திகைத்துப்போய் நின்றுவிட்டார்களோ? துரியோதனனின் இயல்பறிந்த அவர்கள், உதவவோ அல்லது சமாதானம் செய்யவோ சென்றால் அவன் இன்னும் பெருங்கோபம் அடையக்கூடும் என அஞ்சி இருந்தார்களோ? எதுவாக இருப்பினும் அவர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தது பெருங் குற்றம். ஒருவன் தான் செய்யும் தவறுகளுக்கு மட்டுமல்லாமல் தன்னைச் சார்ந்த நபர்கள் மற்றும் பொருட்கள் மூலமாக நடக்கும் தவ்றுகளுக்கும் அவர்கள்தான் பொருப்பேற்க வேண்டும். எனக்கு இதற்கும் தொடர்பில்லை என வாளாவிருக்கமுடியாது.

       இதே காரணத்தை திரௌபதிக்கும் சொல்லலாம். அவள் தன் தம்பி திருஷ்டத்துய்மனை படுகாயத்திற்கு உள்ளாக்கிய  தேவையற்ற போரை துவக்கிய துரியோதனன் மேல் கோபம் இருக்கலாம். ஆனால் விருந்தினன் என்று அழைக்கப்பட்ட ஒருவனிடம் இதை எதையும் காட்ட முடியாது.  . ஒருவேளை அந்த நேரத்தில் அவளையும் அறியாது வெளிப்பட்ட அவள் மனதின் உள்ளுறையும் வஞ்சமாக அந்த சிருப்பு இருந்திருக்கலாம். ஆனால் அடுத்த நொடியிலாவது அவள் விழிப்படைந்து  ன் கணவ்ர்களை அழைத்து ஆவண செய்திருக்க வேண்டும்.

     கர்ணன், துரியோதனை வலிந்து தடுக்க முயலாமல் ஏன் இருக்கிறான் என்பது தெரியவில்லை. அவன் நுண்ணுணர்வு கொள்ளும் எச்சரிக்கையுணர்வின்படி அவன் செயல்படாமல் ஏன் இருக்கிறான்?   இப்போது போகக் கூடாது என கண்டித்து திருத்தும் உரிமையும் கடமையும் அவனுக்கு இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவன் ஒரு சஞ்சலம் அடைவதோடு நிறுத்திக்கொள்வதால் என்ன பயன்? அவன் இன்னும் தாழ்வுணவிலிருந்து வெளிவரவில்லையோ என் நாம் ஐயுற வேண்டியிருக்கிறது.  துரியோதனனை  இடித்துரைத்து திருத்த வேண்டிய தருணங்களை தவற விட்டு விடுபவனாகவே இருக்கிறான். ஒரு தவறு நடந்து முடிந்த பின் உயிரைக்கொடுத்தாலும்  என்ன பயன்?

     

துரியோதனன், எவ்வித நியாயமுமின்றி  அவமதிக்கப்பட்டுள்ளான்.   உண்மையில் அவன் பண்டவர்களுடனான தன் உறவில் புது அத்தியாயத்தை துவங்க  முழு மனதோடு முயல்கிறான். ஆனால் மூடத்தனமாக அதை திரௌபதியிலிருந்து ஆரம்பிக்க எண்ணுகிறான். அவன் தருமனிடம் சென்று தன் உள்ளத்தை திறந்திருந்தால் அப்போதே அவன் பீமன் அர்ச்சுனன்களை கூப்பிட்டு தன் மேல் ஆணையிட்டு துரியோதனனுடனான  பகையை முற்றிலும்  நீக்கிவிட உத்தரவிட்டிருப்பான். அதையெல்லாம் விட்டுவிட்டு அவன் முதலில் பீமனிடமிருந்து ஆரம்பிக்க நினைக்கிறான். அதைக்கூட  விட்டுவிட்டு கண நேர உணர்ச்சியில் திரௌபதியிடம் செல்ல நினைப்பது ஒரு தவறாக ஆகிவிடுகிறது.  ஏற்கெனவே ஜராசந்தன், சிசுபாலன், ருக்மி போன்றோருடன் சேர்ந்திருப்பதன் மூலம்  ஒரு தவறான சைகையை காட்டியிருக்கிறான்.  முழுக்க முழுக்க  பாண்டவ்ர்கள் மற்றும் கண்ணனின் எதிரிகளாக் இருப்பவர்களின் நடுவில் தன்னை வைத்திருப்பதன் மூலம் அவன் சொல்ல வந்ததற்கு  எதிர்மாறான சித்திரத்தை பாண்டவர்கள் முன் காட்டுகிறான்.  இதன் காரணமாக துரியோதனன் முற்றிலுமாக தங்கள் மீது பகை கொண்டு போர்க்கூட்டணி அமைத்திருப்பதாகவே அவர்கள் நினைத்திருப்பார்கள். அதன் காரணமாக அவர்கள் மன வருத்தத்தமும் கடும்கோபமும் கொள்ளவைத்திருக்கிறான்.  அந்த நிலை அவர்கள் எடுப்பதற்கு பீமனுக்கு நஞ்சூட்டல் இருந்து,வாரணாவத எரிப்பு, காம்பில்யப் போர் என பல நியாயமான காரணங்கள் இருக்கின்றன.

   அத்தனைக்கும் மேலாக ஊழ் விளையாடும் விளையாட்டு இதில் முக்கிய பங்காற்றுகிறது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் அல்ல. யாரும் எதிர்பாராமல் நடந்த நிகழ்வு.
 
     இப்படி பல்வேறு காரணிகள் வழியாக பெரிய மனமாற்றங்கள், பெரும்பகை, பெரும் அறமீறல்கள்,  பேரழிவு,  பெருந்துயரம் எல்லாம்  பின்னிப் பிணைந்தவண்ணம் முளைத்தெழ ஆரம்பித்திருக்கின்றன என்றுதான் தோன்றுகிறது.

தண்டபாணி துரைவேல்