Sunday, June 3, 2018

எங்கும் புதியவன்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

இனிது தொடங்கியது செந்நா வேங்கை.  இதுவரை வாசித்த வெண்முரசு நாவல்களில் பிற பாத்திரங்கள் போல் அல்லாமல் இளைய யாதவன் என்னும் கண்ணன் மட்டும் எங்கும் எந்த இடத்திலும் புதியவனாகவே இருக்கிறான்.  பிறர் பழையவர்கள் ஆகிவிடுகிறார்கள்.  எத்தனை முறை பார்த்தாலும் எத்தனை நினைவுப் பதிவுகள் இருந்தாலும் ஒரு ஞானி நேரிட்டுக் காணவும் நினைக்கும் தோறும் என்றும் புதியவரே. எல்லோரையும் தன்னில் கொண்டவன், அதனால் எல்லோரும் எவ்வகையிலேனும் ஈர்ப்பு கொள்ளும் விசை உடையவன், எனினும் எல்லாவற்றின் நடுவில் நின்றும் ஒட்டாது விலகி நிற்கும் ஒருவன் எனத் தோன்றுபவன்.  வெண்முரசில் அவன் அவ்வாறு துல்லியமாக அமைந்து கொள்கிறான்.  அவ்வாறு துல்லியமாக அமைக்கிறீர், ஏனெனினில் அவனியல் என்னவென்று தாங்கள் அறிந்துள்ளீர்.

சத்யாகி முறைமைகள் பேசுவது, கண்ணன் அன்பில் இளையோரை அருகில் கொள்வது இரண்டும் வேதிய சடங்கு - வேதாந்த வித்தியாசத்தை மெலிதாக தொட்டுச் செல்வது போல் உள்ளது.

சத்யாகி கண்ணனிடம் அன்பு கொண்டவன், தன் தலைவனாகிய அவனிடம் அடிமை பூண்டவன்.  ஆனால் உண்மையில் பெண்கள் கண்ணனை அறிந்துள்ளதில் அவனினும் மேம்பட்டு உள்ளனர்.  அடிமைகள் என்றேனும் தங்கள் அடிமை சுவர் கடக்காமல் மெய்மை கொள்வதில்லை. வைணவர்களுக்கு கடினமே.  நமக்கு பிரச்சினை இல்லை.  நான் வேறு அவன் வேறு அல்ல என்று சென்று கொண்டிருக்கிறோம், அதற்குத்தானே இவ்வளவு பெரும் போரைத் துவங்க இருக்கிறோம் ?.  ஒட்டுமொத்த வாழ்க்கையின் அத்தனை போராட்டங்களும் அதற்குத்தானே ?

நீண்ட நாள் கடிதம் எழுதவில்லை, என்றால் பல்லாயிரம் மானசீக கடிதங்கள் எழுதி இருக்கிறேன்.  24-மணிநேரமும் தங்களுடனும் நண்பர்களுடனும் மானசீக உரையாடலில் அல்லது உள்ளுறை உவகையென மௌனமாக எல்லோரிலும் இருந்தேன்.  ஒரு அத்வைதி என்ற முறையில் இதை நம்புவது உங்கள் தார்மீக கடமை.

என்றும் அன்புடன்,
விக்ரம்,
கோவை