Tuesday, June 5, 2018

இளைய யாதவரும் வேங்கையும்



அன்பின் ஜெ,

வணக்கம்!.

நைமிஷாரண்யத்தின்
சிறுகுடிலுக்குள் சிற்றகலின் துணைகொண்டு அகத்திருள் அகற்றும் இளைய யாதவர், களித்தோழனாய் மாறி யுயுதானரின் ஆடிப்பாவைகளோடு ஆடிக்களித்தபடியே தன்
கடமையையும் செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்.

விதுரர் நைமிஷாரண்யத்தில் சினத்துடன் சின்னகோனாரிடம் சொல்லும் வரிகள்...

********
"மெய்யாக சொல்லவேண்டுமென்றால் உங்கள்மேல் கடும்சினமே கொண்டிருந்தேன். இப்போரை மூட்டிவிட்டுச் சென்றது நீங்களே.”

இளைய யாதவர் “நானா?” என்றார். “ஆம், நீங்கள் வந்த மூன்று தூதுமே போரை மூட்டும் செயல்களே.” இளைய யாதவர் “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “யாதவரே, துரியோதனனும் அவன் அரசத்துணைவரும் உள்ளூர அச்சம் கொண்டிருந்தார்கள். 
.
.
.
“நீங்கள் தூது வந்ததே துரியோதனனை தருக்க வைத்தது” என்று விதுரர் தொடர்ந்தார். “மீண்டும் தூது வந்தபோது மேலும் ஆணவம் கொண்டான்.
.
.
.
“ஒருவேளை பாண்டவர்கள் இவர்களை முற்றழிக்க சற்றே தயங்கியிருக்கக்கூடும். அத்தயக்கத்தையும் இல்லாமலாக்கியது உங்கள் தூது. ஊசிமுனை நிலம்கூட மறுக்கப்பட்டதென்பதே பாண்டவர்கள் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்னும் உரிமையை அளிக்கிறது. அவர்கள் எது செய்தாலும் எதிர்காலத்தின் விழிகளில் சரியென்றாக்குகிறது. அவர்களைக் கட்டியிருக்கும் அனைத்துச் சரடுகளிலிருந்தும் விடுவித்துவிட்டீர்கள், யாதவரே. இப்போரை மிகச் சரியாக கொண்டுசென்று குருஷேத்ரத்தில் நிறுத்திவிட்டீர்கள்”.
********

இதோ.... மூட்டிய தீயை அணையாமல் காக்கும்பொருட்டு திரௌபதியிடம் சொல்லாடி  அவளின் வஞ்சம் வடிந்த மனதை போரின் திசைக்கு திருப்பியாயிற்று....

இன்றைய அத்தியாயம் படிக்க
பன்னிரெண்டை எதிர்நோக்கியபடி ,நேரம் கடத்த அருணா சாய்ராமின் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன்,  ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் "விஷமக்கார கண்ணனும்" அதில் ஒன்று.

பாடலின் பல்லவியின் இரண்டாம் பத்தி: 
********
"வேடிக்கையாய் பாட்டுப்பாடி விதவிதமாய் ஆட்டமாடி 
நாழிக்கொரு லீலை செய்யும் நந்தகோபல க்ருஷ்ணன் ".
*********
ஆமாம்....

நாழிக்கொரு லீலை செய்யும் நந்தகோபாலன்...

ஆனால் லீலைகள் அனைத்தும் குருஷேத்திரத்தை குறிவைத்தே  என்பதை நினைக்கையில் ஏற்ப்படும் அகப்பதற்றம் நிலைகொள்ள நெடுநேரமாகிறது.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.