ஜெ
மிக எளிமையான யதார்த்தச்சித்திரமாகச்
சென்றுகொண்டிருக்கிறது செந்நாவேங்கை. இதில் ஊடுபின்னலான கதைகளும், மாயங்களும் வரப்போவதில்லை
என்பது தெரிகிறது. இந்த கதையோட்டத்திற்குள் குறிப்புணர்த்தப்படுவதையெல்லாம் தவறாமல்
வாசித்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் முக்கியமான சவால் என்று சொல்லிக்கொண்டேன். வெண்முரசின்
பழைய நாவல்களை இப்போது வாசிக்கையில் என்ன தோன்றுகிறது என்றால் எளிமையான கதையோட்டம்
என்றால் வேகமாக வாசித்துவிடுகிறோம். அதன் பல நுட்பங்கள் கண்ணுக்குப்படவில்லை.
உதாரணமாக
வெய்யோன். அதில் ராதைக்கும் கர்ணனுக்குமான தாய்மகன் உறவு உடைவது முக்கியமான இடம். மிக
நுட்பமாக அது நடக்கிறது. ஆனால் இருவருமே அதை வெளிக்காட்டாமல் கடந்துசெல்கிறார்கள்.
அந்த இடத்தை பிற்பாடு வாசிக்கும்போதுதான் கண்டுபிடித்தேன்.
இந்நாவலில் அப்படி கதைக்குள்
பல நுட்பமான தருணங்கள் வருகின்றன. உதாரணமாக சாத்யகியின் பிள்ளைகளைப் பார்த்ததுமே இளைய
யாதவர் அந்தப்போர் அவர்களின் தலைமுறைகளுக்காக நடப்பது என்றும் அது தத்துவத்தின்போர்
என்றும் சொல்கிறார். அவர் எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அந்தப்பிள்ளைகளை கொலைக்களத்திற்கு
அனுப்புகிறார் என்று சொல்லலாமா இல்லை குற்றவுணர்ச்சியால்தான் அப்படிச் சொல்கிறார் என்று
சொல்லலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்
சாரதி