Saturday, May 2, 2015

கண்ணன் நிற்கும் இடம்




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

வாழ்க்கை என்பது சிரிப்புக்கும் கண்ணீருக்கும் இடையில் ஆடும் ஊஞ்சல். அந்த ஊஞ்சலை வேறு யாரும் ஆட்ட நாம் ஆடலாம், நாமே ஆட்டிக்கொண்டு நாமே ஆடலாம். இந்த ஆட்டம் ஒரு மாயம்தான். மாயம் என்றாலும் உண்மை. உண்மை இருப்பதாலேயே இந்த மாயம் தேவைப்படுகின்றது. அந்த மாயம்தான் வாரணாவத சதியை உண்டாக்கியது. அந்த மாயம்தான் இன்று நீயும் நானும் வேறு அல்ல ஒன்றென்று தோள்தழுவி செல்கின்றது. இது மாயம் மட்டும்தான் என்று நினைப்பவன் ஆடும்போது ஆடியும், ஆட்டும்போதும் ஆட்டியும் செல்கின்றான். அவன் சிரிப்புக்கும் கண்ணீருக்கும் அப்பால் ஒதுங்கி நிற்கின்றான். ஆனால் அதில் இருக்கின்றான். பூரிசிரவஸ் நிற்கும் இடத்திலே, கண்ணன் நிற்கின்றான் என்பதுதான்  இன்றை உயர்வு. 

இங்கு என்ன நடக்கிறது என்பதை ஒரு நாடகமாகப்பார்த்துக்கொண்டு, அங்கு(வாரணாவதத்தில்) என்ன நடந்தது என்பது ஊகித்துக்கொண்டு நிற்கும் பூரிசிரவஸ் நிற்கும் இடம்தான் கண்ணன் நிற்கும் இடமும். ஆனால் அங்கு என்ன நடந்தது, இங்கு என்ன நடக்கிறது என்பதை முழுதும் தெரிந்துக்கொண்டு தெரியாததுபோலவே பூரிசிரவஸ் அருகிலேயே நிற்கும் கண்ணன் ஆடும் ஊஞ்சலுக்கும் அப்பால் நிற்கின்றான். 

கண்ணீரும், சிரிப்பும் கலந்தாடும் அஸ்தினபுரி ஊஞ்சலில் வேகமாக ஆடுகின்றார் திருதராஸ்டிரர். கண்ணன் ஆட்டுகின்றான். பாண்டவர்கள் மட்டும் திருதராஸ்டிரரை சென்று சந்தித்து இருந்தால் அங்கு கண்ணீர் மட்டும்தான் இருக்கும், அந்த கண்ணீரில் சிரிப்பைக் கலந்தவன் கண்ணன். இருதோள்களால் கௌரவர்களை அனைத்து அழைத்து செல்லுங்கள் யுதிஸ்டிரரே! என்ற இடத்தில் அதை செய்கின்றான். வாழ்க்கை அவ்வளவுதான் என்று கண்ணன் அறிந்து உள்ளான். அதற்கு மேலாக வாழ்க்கையில் எதுவும் இல்லை, ஆனால் வாழ்க்கையில் எதுவும் இல்லை என்பதை யாரால் எளிதில் அறியமுடியும்?. வாழ்க்கை இவ்வளவுதான் என்பதை யார் வரையறுக்க முடியும்? வாழ்க்கை அறிய விட்டுவிடுமா?

நானும் எனது பிள்ளைகளும் விழியற்றவர்கள், மூடர்கள் என்று தருமனிடம் திருதராஸ்டிரன் சொல்லும்போது வாழ்க்யின் யதார்த்த வடிவம் கிடைத்துவிடுகின்றது. வாழ்க்கை கண்ணற்றவன் கையில் கிடைத்த பனிப்பண்டம். தாமரையை மலர்விக்க எழும் சூரியன், பனிப்பண்டத்தை உருகி வழிந்தோட வைக்கிறது. பூரிசிரவஸ் பனிப்பண்டத்தின் சுவையை உணர்கின்றான். கண்ணன் தாமரை மலர்வதற்காக சுடர்விட்டுக்கொண்டு இருக்கிறான். பூரிசிரவஸ் இடத்திலேயே கண்ணன் நிற்பதுதான் அற்புத உயர்வு. 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்