அன்புள்ள எழுத்தாளருக்கு...
குருக்ஷேத்ரத்திற்கு
 வருகின்ற துரோணன் இளையவன். இன்னும் மணமாகவில்லை. வாழ்வில் குலமில்லை என்ற 
ஒரே ஒரு துயர் மட்டுமே கண்டவன். அக்னிவேச குருகுலத்தில் அவரது முதன்மை 
மாணவன். இளமையின் நிறைந்த தன்னம்பிக்கையும் எதையும் அலசி ஆராய்ந்து 
புரிந்து கொள்ள முடியும் என்று நம்பும் வயதினன். அவ்வாறே குருகுலத்தில் 
கற்றும் வந்தவன். 
குருக்ஷேத்ரக் களத்தின் 
செம்மண்ணுக்கும் அங்கே புற்கள் கூட விளையா உலர் தன்மைக்கும் சூதர்கள் ஒரு 
கதை சொல்கிறார்கள். அதை ஏற்றுக் கொள்ள மனமிலா இளந்துரோணன் 'குனிந்து அந்த 
மண்ணை அள்ளி நாவிலிட்டு “உவர்மண்”' என்கிறான். 
சூதர்கள்
 தலைமுறை தலைமுறையாக அங்கே வந்து தங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றவர்கள்.
 அவர்களுக்கு அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று என்ன செய்யலாம், 
என்ன செய்யக்கூடாது என்பதெல்லாம் கற்பிக்கப்பட்டிருக்கும். ஒட்டியிருக்கும்
 விருத்திராசுரனின் குருதி ஊறிய மண்ணை உதறித்தான் அங்கிருந்து 
கிளம்பியிருப்பர்.
ஆனால் அங்கே புதிதாக வரும் 
துரோணன் துளி மண்ணை வாயிலிட்டு விடுகிறான். அப்போது அவனுடன், அவன் நாவுடன்,
 அவன் சொல்லுடன் கலந்து விடுகின்றது போர்க்குருதி. அங்கிருந்து கிளம்பியவன்
 உரைத்ததே துருபதன் மேல் கொண்ட வஞ்சமும், அதன் விளைவாக மீண்டும் எழுந்த 
பெரும்போரும்.
குருக்ஷேத்ரத்தில் முடிந்த 
விருத்திராசுரப் போரில் மிஞ்சியிருந்த துளிக்குருதி மற்றுமொருப் பெரும்போரை
 அதே களத்திற்கு இழுத்து வருகின்றது.
நன்றிகள்,
இரா.வசந்த குமார்.

