Sunday, August 27, 2017

கலி ஆட்டம்.


அன்புள்ள எழுத்தாளருக்கு...

'நீர்க்கோலம்' முழுக்க முழுக்க பாண்டவர்களைப் பற்றி மட்டுமே சொல்கிறீர்கள். அஸ்தினபுரியிலோ இந்திரப்ரஸ்தத்திலோ பிற துணை நாடுகளிலோ என்ன தான் நடந்தது என்று கொஞ்சமும் சொல்லப்படவில்லை. ஜயத்ரதனின் பாஞ்சாலி அபகரிப்பு நிகழ்வு மட்டும் கொஞ்சம் வந்தது. பிறகு இப்போது வந்த கர்ணனின் நடுங்கும் உளச்சான்று சின்னதாக ஒரு கோடி காட்டியது. துரியோதனனோ சகுனியோ பதிமூன்று ஆண்டுகளாக என்னதான் செய்து கொண்டிருந்திருப்பார்கள் என்ற கேள்வி அவ்வப்போது தோன்றும். அதை நீங்கள் வாசிப்பவர் கற்பனைக்கே விட்டு விட்டீர்கள் என்றும் தோன்றியது. ஆனால் அவ்வாறு அல்ல.

நளன் மீண்டதும் சொல்லப்படும் புஷ்கரனின் செயற்பாடுகளை அப்படியே துரியோதனனுக்குப் போட்டுப் பார்க்கையில் மனம் நடுங்கி விட்டது. அவன் இவனே. அதிலும் புஷ்கரன் வெறும் கலி தேவனால் தீண்டப்பட்டவன் என்பதும் துரியோதனன் அந்த கலிதேவனே தான் என்பதும் துரியோதனன் செய்திருக்கக் கூடிய கொடூரங்களைப் பல மடங்கு பிரம்மாண்டப்படுத்தி விட்டது. மேலும் அஸ்தினபுரியில் நூறு கலிதேவர்கள்.

அவற்றை நீங்கள் நீர்க்கோலத்தில் எங்கும் நேரடியாகச் சொல்லாததிலேயே எங்கள் மன இருளின் ஆழத்தில் உறையும் தீச்செயல்களும் இதில் பங்கெடுத்துக் கொண்டு விட்டன.

நன்றிகள்,
இரா.வசந்த குமார்.