Saturday, August 26, 2017

பலி கொள்ளும் பெருங்காமம்





சற்றே சிந்தித்துப்பார்த்தால் மனிதன் அடையும் காம இன்பமே ஒரு ஏமாற்று வேலை. பற்களற்ற பசு வெறும் புல்லை சப்பிச்சுவைப்பதைப்போன்ற அர்த்தமற்ற இன்பம் இதுவென்று தோன்றுகிறது. உணவின்பமும் மனிதனுக்கு கொடுக்கப்பட்டதுதான். ஆனால் உணவு ஒருவனுக்கு உண்ணும் இன்பத்தை மட்டும் அளிப்பதில்லை. உண்பவன் உயிர் வாழவும், பணியாற்றவும், உடல் வளர்க்கவும் அது பயன்படுகிறது. மற்ற கலைகளின் அடையும் இன்பங்கள் அவன் சித்தத்தை கூர்மையாக்க பயன்படுகின்றன . ஆனால் காமம் ஒருவருக்கு உடல் வன்மையை அல்லது நலனை மேம்படுத்துவதில்லை, சித்தத்தை கூர்மையாக்குவதில்லை. அதற்கு மாறாக உடல் நலம், அறிவு ஆகியவற்றை ஆகுதியாகக் கொண்டே காம நெருப்பு எழுகிறது. அந்த நெருப்பில் விட்டில் பூச்சிகளைப்போல் நாம் ஈர்க்கப்படுகிறோம். அந்த நெருப்பில் சிலர் வெந்துசாம்பாலாகிப்போவதை பார்த்துவருகிறோம்.காம இன்பத்தின் வழி உயிர்கள் பிறப்பெடுக்கின்றன என்று சொல்லலாம். ஆனால் உயிர்கள் காமத்திலாடும்போது இனப்பெருக்கத்திற்கான நோக்கம் பெரிதாக இருப்பதில்லை. பலசமயம் ஒரு விபத்தெனவே உயிர் உருவாதல் ஏற்படுகிறது.


காமம் உரிய முறையில் அனுபவிக்கப்பட்டாலும் அல்லது நெறிகளுக்கு மாறாக துய்க்கப்பட்டாலும் அதில் கரவுத்தன்மை இருக்கவே செய்கிறது. மற்றவர் காமத்தை அறிய விழையும் ஒருவர் தன் காமத்தை மறைத்தே வைக்கிறார். காமம் துய்ப்பது என்பதில் எப்போதும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டதாகவே வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு இருந்தும் ஒருவர் உள்ளத்தில் காமம் கட்டற்று பாயும் நதியாக, வீறு கொண்டு எழும் கனலாக, எண்ணமெல்லாம் நிறைந்து பெருகும் வானாக, தகர்க்கமுடியாத பெரும் மலையாக அகக்கண்ணை தன் புழுதியால் மறைக்கும் சூறைக்காற்றாக எழுகிறது. அதனால் ஒருவர் சமூக நெறிகளை மீறத் தூண்டுகிறது. அறத்தின் பாதையிலிருந்து ஒருவர் வழுவிச் செல்வதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாக காமம் இருக்கிறது.
ஒரு உயிர் பிறப்பு நிகழ்வை தோற்றுவிப்பதாக காம உணர்வு இருந்கிறது. ஆனாலும் ஒரு பெரிய முரணாக காம உணர்வின் காரணமாக உயிரிழப்புக்கள் நிகழ்கின்றன. சில பூச்சியினங்களில் புணர்வுக்கு பின் ஆண் பூச்சிகள் இறந்துவிடுகின்றன. விலங்குகள் காமத்திற்கான தன் துணையை அடைய தங்களுக்குள் சண்டையிடுவதில் உயிர்ப்பலி ஏற்படுவது நடக்கிறது. யானகள் அப்போது மதம்கொண்டு பெரும் அழிவை ஏற்படுத்துகின்ற்ன. தன்னுடன் கூடுவதற்கு இணங்காத பெண் யானையை ஆண் யானை கொன்றுவிட்ட செய்திகளை அறிந்திருக்கிறோம்.
ஆனால் மனிதன் சிந்திப்பவன், நன்மை தீமைகளை பகுத்தறிந்து நடந்துகொள்ளும் வாய்ப்புடையவன். தன் உணர்வுகளை கட்டுக்குள் வைத்து நெறிப்படுத்த பயின்றவன். இருப்பினும் அவனும் சில சமயங்களில் காம இன்பத்திற்காக பெரும் தவறுகளை செய்பவனாக இருக்கிறான். காமம் சார்ந்த குற்றங்கள் ஒவ்வொரு நாளும் நாம் தினசரிகளில் காண நேரிடுகிறது. அதில் பல உயிர்க்கொலைகள். நெறி தவறிய காமத்தின் காரணமாக தன் உயிரை இழப்பவர்களும், மற்றவர் உயிரை எடுப்பவர்களும் வரலாறெங்கும் இருக்கிறார்கள். மனிதன் பலவிதங்களின் தன்னை விலங்குகளிடமிருந்து மேம்படுத்திக்கொண்ட போதிலும் காம் உணர்வின் பொருட்டு விலங்கின் நிலைக்கு அல்லது அதைவிட கீழான நிலைக்கு இழிந்துவிடுவது நேரிடும் நிகழ்வுகளை அடிக்கடி நடக்கின்றன.


மனித இனத்தில் பெரிய அளவில் இதுபோன்ற தவறுகளை செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருக்கிறார்கள். பெண்கள் தனக்கான துணையை தேர்ந்தெடுப்பதில் நிதானத்தை கடைபிடிக்கிறார்கள். அதற்கு தான் பிள்ளை பெற்று பேணிவளர்ப்பதற்கு உதவுபவனாக இருப்பவனாக இருக்க வேண்டும் என்பது ஒரு காரணமாகவும், தன்னிடம் தோன்றும் உயிரின் ஒரு பாதியாக விளங்கப்போகும் உயிரணுவை தருவதற்கான தகுதியானவனாக இருக்கவேண்டும் என்ற உயிரியல் சார்ந்த நோக்கம் மற்றொரு காரணமாகவும் இருக்கின்றன. இவை அவள் மரபணுவில் எழுதப்பட்டவை. பெண்ணைப்போல அல்லாமல் பல நூறு குழந்தைகளுக்கு தந்தையாகக்கூடிய வாய்ப்பிருப்பவன் ஆண். அதனால் கண்ணில காணும் பெண்கள் அழகாய் தெரிந்தால், (அதாவது அவன் உயிரணு இணைவதற்கான தகுதிகொண்ட கருவைப் பெற்றிருப்பதற்கான கூறூகளைக்கொண்டவள் எனத் தெரிந்தால்) அவள்மேல் அவனுக்கு காம எண்ணம் உருவாகிறது. அவனை அவளிடம் காமம்கொள்ள உந்துகிறது.

அது உயிரியல் சார்ந்தது. ஆனால் அவன் அடைந்துள்ள பண்பாட்டு மேன்மையினால் அந்த உணர்வை தனக்குள் மேலும் மேலும் வளர்த்துக்கொள்ளாமல் கட்டுப்படுத்திக்கொள்கிறான். அதே நேரத்தில் விலங்குகளைப்போல் அல்லாமல் உடலில் தோன்றும் காமத்தை உள்ளத்தில் பெருக்கிக்கொள்பவன் அவன். மேலும் பணம், பதவி அல்லது பலம் காரணமாக கொண்ட அகங்காரத்துடன் கூடிய காமம் நெறி மீறுதலுக்கான் இயல்பான தயக்கத்தை பெருமளவுக்கு குறைத்துவிடுவிடுகிறது. இப்படி கட்டுக்குள் அடங்காத அளவுக்கு தன் உள்ளத்தில் பெருங்காமம் கொண்ட ஒருவன் அனைத்து நெறிகளையும் மீறுபவனாக மாறுகிறான். இது அவனுக்கு தன் காமத்திற்கு இடையூறாக இருப்பவர்கள் மேல் பொறாமை, வஞ்சம், கடும் சினத்தை ஏற்படுத்துகிறது. அவன் விரும்பும் பெண் இணங்கவில்லையென்றால் பெரிய அளவில் வஞ்சமும் சினமும் அந்தப் பெண்ணிடம் ஏற்படுகிறது. இந்நிலையில் அவன் அப்பெண்ணைத் துன்புறுத்துகிறான் சிலசமயம் கொல்லவும் செய்கிறான். அல்லது அவனுடைய இத்தகைய முயற்சியில் அவனே சம்முக்கத்தில் தான் கொண்டிருக்கும் நிலையிலிருந்து வீழ்ந்து பெரும் இழிவுக்குள்ளாகிறான். சிலசமயம் அவனே கொல்லப்படுவதும் நிகழ்கிறது. சமூகம், அறிவியலிலும் பண்பாட்டிலும் இவ்வளவு முன்னேறிய நிலையிலும் இத்தகைய நிகழ்வுகள் இப்போதும் குறையாமல் தொடர்ந்துகொண்டே வருகின்றன.


வெண்முரசில் காமத்தின் காரணமாக சிறுமைப்படுத்தப்பட்டவர்களை, கொல்லப்பட்டவர்களைக் கண்டிருக்கிறோம். திரௌபதியின் சூதாட்ட கள அவமதிப்புக்கு துரியோதனன் மற்றும் கர்ணனுக்கு அவள் மேல் ஆழ்மனதில் கொண்டிருந்த காமம் நிறைவேற இயலாததனால் கொண்ட வன்மமே காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஜெயத்ரதன் இப்படி திரௌபதிமேல் கொண்ட பெருங்காமத்தின் விளைவால் இறப்புக்கு நிகரான இழிவுக்கு உள்ளானான்.


கீசகன் மனதில் சைரந்தறியின்மேல் காமம் தோன்றுவது இயல்பானது. தான் இணையத் தகுதியான பெண்ணுடல் என்பதை அவன் உடல் கண்டுகொள்கிறது. அது இயற்கையானது. ஆனால் சைரந்தரி தனக்கு கணவர் உள்ளனர் என்கிறாள். அந்தக் காமத்தில் தனக்கு இணக்கமில்லை என்பதை தெரிவிக்கிறாள். நெறிகளின்படி, அறத்தின் படி அவன் தன் காமத்தை கட்டுப்படுத்தி அவள் மேல் ஏற்பட்ட விழைவை தன் உள்ளத்திலிருந்து விலக்கி இருக்கவேண்டும் ஆனால் அவன் தான் வெல்ல முடியாதவன், அரச குடும்பத்தினன், என்ற அகங்காரத்தின் காரணமாக தன் காமத்தை கட்டுப்படுத்திக்கொள்ளாமல் பெருக்கிக்கொள்கிறான். முதலில் காமம் அவன் தன்மானத்தைக் குறைத்து அவளைக் கெஞ்ச வைக்கிறது. சைரந்தரிக்காக தன் எதிர்கால அரசு வாய்ப்புகளை பணயம் வைக்குமளவுக்கு அவன் அறிவை பீடிக்கிறது காமம். பின்னர் அவன் காமம் வன்மமாக மாறி சைரந்தரியை அவை நடுவில் அவமதிப்பு செய்து அற வீழ்ச்சியை அடைகிறான். ஒரு வீரனாக அரசியல் கனவுகளோடு இருக்கும் அவன் தன் உயிர் குறித்து எவ்வளவு எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதை அறிந்தவன். தான் அழைத்துவந்த ஒரு மாமல்லன் வீழ்த்தப்பட்டது தனக்கு எதிரான செயல் என்றவன் அறிந்திருக்க வேண்டும் அதற்கான முன்னெச்சரிக்கையோடு அவன் இருந்திருக்கவேண்டும். ஆனால் திடீரென்று சைரந்தரி மனமாறியதை சற்றும் ஐயப்படாமல் அவள் அழைப்புக்கு இணங்கி அறிவு மயங்கி தனித்து நள்ளிரவில் அவன் செல்ல அவன் கொண்ட காமமே காரணாமாகிறது. எப்படிப்பட்ட அரசு செல்வாக்கு பெற்றிருந்தாலும், எப்படிப்பட்ட பெரு வீரனாக அவன் இருந்தாலும், அவன் கொண்டிருந்த பெருங்காமத்திற்கு அவன் பலியாகிவிடுகிறான்.
சிறு தென்றலென மனதில் தோன்றி பெரும் புயலென உருமாறி தனக்கு அல்லது மற்றவருக்கு வீழ்ச்சியையும், இகழ்ச்சிகளையும், பெரும் இழப்புக்களையும் ஏற்படுத்தும் காமத்தின்பால் விழிப்போடு இருக்கவேண்டும் என்பதையும், அது பெரிதாக வளர்ந்து நம் மனதை ஆட்கொள்ளவிடாமல் தற்காத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் வெண்முரசின் இப்பகுதி நமக்கு அறிவுறுத்துவதாக நாம் கொள்ளலாம்.

தண்டபாணி துரைவேல்