Thursday, August 24, 2017

வெண்முரசும் பக்தியும்





அன்புள்ள ஜெ சார்,

வெண்முரசு காவியத்தில் அனைத்து விதமான உணர்ச்சி கொண்ட மனிதர்களும் வந்து கொண்டேயிருக்கின்றனர் ஆனால் பக்தி பாவமாக ஒருவரும் அமைவதில்லையே, அது ஏன்? இராதையை இதில் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் இராதா மாதவம் மகாபாரதத்திற்கு வெளியே நிகழ்வது அல்லவா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், வெண்முரசில் தெய்வங்களுக்கும், கொற்றவைக்கும் ஒழியாமல் பூசனைகள் செய்கிறார்கள். "அறிக தெய்வங்கள்" என்று சூளுரைக்கிறார்கள், ஆனாலும் இறை பக்தி பாவமாக யாரும் இருப்பதில்லை. அது பக்தி காலகட்டம் அல்ல என்றாலும் காமம், வீரம், கருணை போல பக்தியும் ஒரு மானுட உணர்ச்சி தானே.

இதைப் பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்.

அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

அன்புள்ள ரவிக்குமார்
இது முக்கியமான கேள்வி. மகாபாரதத்தில் நீண்ட பக்திப்பேச்சுக்கள் வருகின்றன. ஆனால் அவையனைத்துமே பிற்சேர்க்கைகள். அனைத்தும் கிருஷ்ணனை நோக்கி கைகூப்பி பேசப்படுபவை. கிருஷ்ணனை அவதாரம் எனப்போற்றுபவை. வேறு தெய்வங்கள் மீதான பக்தி மகாபாரதத்தில் காணப்படவில்லை.

ஆனால் கிருஷ்ணண் பெருந்தெய்வமாக, அவதாரமாக ஆனது மகாபாரதத்திற்கு மிகப்பின்னால். பாகவத காலகட்டத்தில். மகாபாரதக் கிருஷ்ணன் போரிடும் அரசன், தத்துவஞானி- அவ்வளவுதான்.

நாம் இன்றுபார்க்கும் பக்தி எல்லாம் பாகவதகாலகட்டத்திற்குப்பின்னால் உருவானதாக இருக்கலாம். பக்தி இயக்கம் கிபி ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது. அதன்பின் வலுப்பெற்றதாக இருக்கலாம். மகாபாரதத்தின் அசல்பின்னலில் பக்திப்பெருக்கு இல்லை


ஆனால் பின்னர் உருவான பக்தி மனநிலையின் வேர்கள் அங்கே உள்ளன. மகாபாரதத்தில் மட்டும் அல்ல வெண்முரசிலும்கூட.


ஜெ