Tuesday, August 29, 2017

விழி திறப்பு (நீர்க்கோலம் - 86)



ஊரில் புதிதாக கோயில் கட்டும்போது அதில் சுதை சிற்பங்களை அமைப்பார்கள் . அது உருவாகி வருவதை அருகிருந்து பார்ப்பது சிறுவனாக இருக்கும்போது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். சிமென்ட் கலவைகளால் சிறிய செங்கற்களை ஒட்டி ஒட்டி உருவாக்குவார்கள். பின்னர் அச்சிலைகளின் மேற்பகுதி வழவழப்பாக்கப்பட்ட பின்னர்தான் அவை ஏன்ன என்ன சிலைகள் என்று விளங்கும். அதன்பின் சிலைகளுக்கு வண்ணம் பூசுவார்கள். எல்லாம் முடிந்த பிறகும் ஒரே ஒரு வேலையை முடிக்காமல் வைத்திருப்பர்கள். சிலைகளின் விழிப்படலம் வெண்மையாக இருக்கும். அதில் இன்னும் கருவிழி வரையப்பட்டிருக்காது. கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஓரிரு நாட்கள் முன்புதான் விழிளை முழுமை செய்வார்கள். அதற்கு முன்பு வரை வெறும் பொம்மைகளாக இருந்த அவை விழி திறப்புக்குப் பிறகு தெய்வாம்சம் குடிகொன்ட வழிபாட்டுக்குரிய சிலைகளாக ஆகிவிடுகின்றன. எங்கள் கண் முன்பு உருவாகிவந்த வெறும் சிலைகள் கைகூப்பி வணங்கவேண்டியவையாக அந்த விழி திறப்பின் பின்னே மாறிவிடுகின்றன.


மனிதர்களில் சிலர் மக்களின் போற்றுதலுக்கு உரிய நபர்களாக உருவெடுக்கிறார்கள். கோடிக்கணக்கான மக்களில் ஒரு சிலர் மட்டும் எப்படி அந்த நிலைக்கு ஆளாகிறார்கள் என்பது யாராலும் சொல்ல முடியாது. அவர்கள் இருந்த சூழல் மட்டும்தான் காரணம் என்று கூற முடியாது. ஏனென்றால அதைப்போன்ற சூழலில் இருந்த மற்றவர்கள் அவரளவுக்கு சிறப்படைய முடியாமல் போவதைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் தாம் சிறப்புற்ற துறையில் செல்வதற்கான சரியான தூண்டல் அல்லது வழிகாட்டல் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அது புறத்தே மட்டுமல்லாமல் அவர்கள் அகத்திற்குள்ளும் நடந்திருக்கும். தங்கள் தன்னறத்தை கண்டுகொள்வதற்கான அவர்களின் விழி திறக்கப்பட்டிருக்கும். அந்த விழிதிறப்பு ஒரு ஆசிரியரால் கொடுக்கப்படிருக்கலாம். அல்லது ஒரு நிகழ்வால் எற்படுத்தப்படிருக்கும். அந்நிகழ்வு சிலசமயம் பெரும் துன்பம் தந்த இழப்பாகக்கூட இருக்கலாம். பெரும் அச்சத்தை ஏற்படுத்திய ஒன்றாகவும் இருக்கலாம். அல்லது பெரும் ஐயத்தை ஏற்படுத்தியதாகவும் இருக்கலாம். அதற்கு முன் மற்றவர்களைப்போல் மிகச் சாதாரணமானவர்கள். இப்போது அவர்கள் தன் தன்னறத்தை கண்டுகொண்டு அதில் மேம்பட்டு சிறப்புறப்போகிறவர்கள். ஒரு விளக்கில் திரியும் எண்ணெயும் இருப்பதைப்போல ஒவ்வொருவருக்கான் தன்னறம் இருந்துகொண்டு இருக்கிறது, எதோ ஒரு தீக்குச்சியின் நெருப்பு அவ்விளக்கில் தீபத்தை ஏற்றிவிடுகிறது.

அவர்களின் சிறப்பை நாம் அறிய சில நேரம் ஆகலாம். ஆனால் அவர்களுக்கன மாறூதல் அந்த விழி திறப்பின் கணத்திலேயே நடந்துவிட்டிருக்கும். அந்த நேரம் அவர் தன்னறத்தை கண்டுகொண்டதற்கான கீதா முகூர்த்தம் எனச் சொல்லலாம். அந்நிகழ்வு சிலசமயம் வெகு சாதாரன நிகழ்வாக அவரறியாமலேயே நடந்திருக்கலாம். அவர்கள் கருத்தறியாத மழலைப்பருவத்தில்கூட நேர்ந்திருக்கலாம். இரமணருக்கு ஒரு நாளில் இறப்பைப்பற்றிய தீவிர சிந்தனையில் அந்த விழித்திறப்பை அடைந்தார். அவர் அடைந்த அனைத்து ஞானமும் அந்தக் கணத்திலேயே நடந்ததாக கூறுகிறார். அதன் பின் தான் பெரிய தத்துவ நூல்களில் கண்டதெல்லாம், அந்நிகழ்வின்போது தான் அடைந்த ஞானத்தை சரியென்று காட்டுவதாக இருந்தனவேயல்லாமல் தாம் அதற்கபுரம் புதிதாக எதையும அறிந்துகொள்ளவில்லை என அவர் கூறியிருக்கிறார் . கணித மேதை இராமானுஜன் போன்றவர்கள் தம் மேதமைக்கான விழிதிறப்பை இளைய வயதிலேயே அடைந்துவிட்டிருகிறார்கள். அவையெல்லாம் எப்படி ஏற்பட்டது என்று நமக்கு தெரியவில்லை.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் நமக்கான துறையில் நம்மைத் திருப்பி சரியான வழிகாட்டலைக் கொடுக்கக்கூடிய விழிதிறப்பை அடையாமலேயே போய்விடுகிறோம் என்று நினைக்கிறேன். அதனால் பெரும்பாலானோர் வெறும் பிறந்து இருந்து இறந்துபோகும் வெற்று மானிடர்களாக இருந்துவிடுகின்றனர். அவர்கள் எல்லாம் விழி திறக்கப்படாத சிலைகள், தீபமேற்றப்படாத விளக்குகள். பொருள் நிரப்பப்படாத வெற்று பாத்திரங்கள். ஆனால் அதிலொருவருக்கு ஒரு கணத்தில் விழி திறக்கப்படலாம். அவர் தன்னறத்தை அறிவதற்கான தீபம் ஏற்றப்படலாம், சட்டென்று அருமணிக்குவியல் போன்ற திற்ன்களால் நிரப்பட்டு பாத்திரம் நிரப்பப்படலாம். எப்போதாவது மிக அரிதாக அனைவரும் அறிய நடந்த அத்தகைய நிகழ்வு ஒன்றை வெண்முரசு நமக்கு காட்டுகிறது. அது உத்தரனின் விழி திறப்பு. அவன் தன் தன்னறத்தை அறிந்து கொள்ளும் நிகழ்வு. வெற்று பாத்திரமாக இருந்த தன்னை வீரத்தாலும் விவேகத்தாலும் நிரப்பிக்கொள்வது கண நேரத்தில் நடக்கிறது. ஒரு கணத்திற்கு முன் வரை பெரும்கோழையாக அச்சத்தில் நடுங்குபவனாக, சிறிதளவும் ஊக்கமில்லாதவனாக இருந்தவன், ஆனால் கண நேரத்தில் அவனுக்கு விழிதிறப்பு நேரிடுகிறது. அணிஅணியாக ஆயுதங்களோடும் கவசங்களோடு தனக்காக உயிர் கொடுத்து போர் புரிய கடியிருக்கும் போர் வீரர்களால் அவன் விழி திறக்கப்பட்டிருக்கலாம். அல்லது பிருகந்நளையென உருமாறி இருக்கும் அர்ச்சுனன் என்ற வீறுகொண்டு எரியும் வீர நெருப்பின் பொறி பட்டு அவன் அகத்தினுள் தீபம் ஏற்றப்பட்டிருக்கலாம். இப்போதும்கூட அவனுக்கு போதுமான பயிற்கிகள் இல்லாமல் இருக்கிறது. போதுமான அனுபவங்களை அவன் அடையவில்லை. இருப்பினும் அவன் பெரு வீரன் ஆவதற்கான விதை அவனுள் அக்கணத்தில் ஊன்றப்பட்டுவிட்டது. தன் அக விழி திறப்பைப்பற்றி உத்தரன் இவ்வாறு கூறுகிறான்.


“எப்போது நீங்கள் உங்களை அறியத்தொடங்கினீர்கள் என்று நான் கூறவா?” என்றாள் பிருகந்நளை. “படைநிரைகள் முன் தேரில் வந்து நின்றபோது.” உத்தரன் சிரித்து “ஆம், முதற்கணம் என்மேல் ஓர் எடைமிக்க பொருள் வீசப்பட்டது போலிருந்தது. கால்கள் நடுங்கலாயின. எண்ணங்களில்லாமல் நெஞ்சு நிலைத்திருந்தது. பின்னர் நிலம் வில்லென்றாகி என்னை வானோக்கி எய்தது” என்றான். “நான் அணிவகுத்து படைக்கலம் ஏந்தி நின்றிருக்கும் போர்ப்படைத்திரளை அதுவரைக்கும் கண்டதில்லை… அது வெறும் காட்சி அல்ல… எப்படி சொல்வேன்? நான் அறியவேண்டிய ஒரு முதல் நூலின் பக்கங்கள் முழுமையாகத் திறந்துகிடப்பதுபோல. ஒரே கணத்தில் நான் அதை வாசித்துவிட்டதுபோல.” அவனுக்கு மூச்சிரைத்தது. சொல்ல வந்ததை சொல்ல முடியவில்லை என உணர்ந்தவன்போல “எப்படி சொல்வதென்று தெரியவில்லை… நாகத்தைக் கண்டால் புரவி சிலிர்க்குமே அதைப்போல ஒரு பதற்றம்… அப்போது விதையிலிருந்து கீறி எழுந்து ஒரே கணத்தில் மரமாக ஆனேன்” .
இத்தகைய விழித் திறப்பை தன் இளவயதிலேயே பெற்று இன்பமும் துன்பமுமாக பலவித அனுபவங்களைப்பெற்று, பயணங்களின் மூலம் பாரதப் பண்பாட்டை பயின்று, சிறந்த குருவை அடைந்து இந்திய ஞானங்களில் தேர்ந்து சிறந்திருக்கும் ஒரு எழுத்தாளரின் வழியே ஊற்றெடுத்து பொங்கிவருகிறது வெண்முரசு என்றப் பெருங்காவியம். அந்தப் பேரருவியின் கீழ் நின்று என் சின்னஞ்சிறு உள்ளங்கைகளில் ஏந்தி எடுத்து என் உள்ளத்தில் ஞானத்தை நிறைத்துக்கொள்ளப்பார்க்கிறேன் நான்.

தண்டபாணி துரைவேல்