Saturday, August 12, 2017

பிரீதை



வெண்முரசின் சிறப்புகளில் ஒன்று அதில் வரும் சிறு பாத்திரங்கள். பெயர் குறிப்பிடப்பட்டும், படாமலும் வரும் இச்சிறு பாத்திரங்களில் பெரும்பாலானவற்றிற்கு ஒரு முழுமையான கதை அமைவதை வெண்முரசில் மீண்டும் மீண்டும் கண்டு வருகிறோம். சற்றே வெறுக்கத்தகுந்த ஒரு பாத்திரமாக அறிமுகமாகும் பிரீதை கொள்ளும் வளர்ச்சி அபாரமானது. அவள் சிதையேறும் காட்சி முக்கியமானது. அவள் அவன் மீது கொண்ட காதல் காரணம் என்றாலும் அது மட்டுமே முழுமையான காரணம் அல்ல. அவள் போர்த்தி வரும் அந்த நீலப் பட்டாடை ஒரு முக்கியமான அடையாளம். அது கீசகன் சைரந்திரிக்குக் கொடுத்தது. சைரந்திரியே அவனது பட்டத்தரசி, உளம் நிறைந்தவள் என்பதால் அவன் சைரந்திரிக்கு அளித்தது. அதை பிரீதை அணிந்து கொள்வது என்பது அவனிடத்தில் அவளது இடத்தைத் தனக்கும், ஊருக்கும் உறுதிப் படுத்திக் கொள்ளவே. அவள் கீசகன் மீது பெருங்காதல் கொண்டவள். கீசகனும் அவளை விரும்பவே செய்திருக்கிறான். சைரந்திரியால் அவனிடம் அவளது இடம் பறிபோகும் என்பதே அவள் சைரந்திரி மீது கொண்ட அழுக்காறு. சைரந்திரியும் தன்னைப் போல ஒரு சேடி என்பதே இதற்குக் காரணம்.

எது எப்படியாயினும் அவள் கீசகனை விண்ணேற்றி விட்டாள். அவள் மட்டும் இல்லையென்றால் கீசகன் ஒரு பெண்ணிழிவு செய்த ஒரு கீழ்மகனாகக் கருதப் பட்டிருக்கக் கூடும். நீர்க்கோலம் 59 ல் வந்த பின்வரும் அபாரமான தரிசனத்துக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக இலங்குகிறாள் பிரீதை – ‘பெண்ணுக்கு அவள் கருவிலெழும் மைந்தரின் துணை என்றும் உண்டு. தான் அளித்த முலைப்பாலாலேயே அவள் மண்ணில் வேர்கொள்வாள். நீத்தபின் விண்ணில் இடம் பெறுவாள். ஆணுக்கு பெண் இல்லையேல் இப்புவியில் ஏதுமில்லை, விண்ணேறும் வழிகளுமில்லை.

அன்புடன், அருணாச்சலம் மகராஜன்