Tuesday, August 15, 2017

சூதுகளத்தில் திறன் காட்டும் தருமன்.



வெண்முரசு மிகப் பெரும் விளைவுகளை, அவமானங்களை,, அழிவுகளை ஏற்படுத்திய இரண்டு சூதாட்டங்களை விவரிக்கின்றது ஒன்று தருமன் ஆடியது இன்னொன்று நளன் ஆடியது. இருவர் ஆடிய சூதாட்டங்களுக்கிடையே இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் தம்மை சூதில் வல்லவர்கள் என நினைத்திருந்தவர்கள். ஆனால் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டவர்கள். இருவரும் தோற்றது தங்கள் உறவினரிடம். இருவரும் அந்த ஆட்டத்தை தங்களின் நல்லெண்ணத்தினால் அனைவருக்குமான நன்மையை கருத்தில் கொண்டே ஆடினர். தமக்கும் தம்மைச்சார்ந்தவருக்கும் பெரும் இழிவும் அவமானமும் ஏற்படுத்திக்கொள்ளும்படி அத்தோல்விகள் அமைந்தன. இதுவரை வாழ்ந்த மேலான வாழ்வுக்கு நேர் எதிராக கீழான வாழ்வை வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சூதாட்டத்தின் பாதகமான விளைவுகளை வெளிப்படுத்தும் புராணங்களாக இவை விளங்குகின்றன.


சூதில் எல்லாவற்றையும் இழந்த சிலரை நாம் பார்த்திருப்போம். ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனும் விளையாடுவது என்பது மட்டுமல்லாமல் இப்போது அது பல பரிமாணங்களை அடைந்திருக்கிறது. பரிசுச் சீட்டு வாங்கும் ஒருவன் தான் அறிந்திராத பல்லாயிரம் நபர்களுடன் சூதாடுகிறான். சூதுகளமும் பல்வேறு விதங்களில் வேறுபட்டு நிற்கின்றன. அதில் வைத்தாடப்படும் பகடைக்காய்கள் பற்பலவாக இருக்கின்றன. குதிரைகள், விளையாட்டு வீரர்களின் வெற்றிகள், வணிக நிகழ்வுகள், உயர்பொருட்களின் விலைகள், வியாபரத்தின் பங்குகள் பெறும் மதிப்பு என ஒவ்வொரு நாளும் அவை பெருகுகின்றன.

ஆனால் இப்படிச் சூதில் சிலர் மட்டும்தான் ஆடுகிறார்கள் என நினக்கிறோம். ஆனால் ஒவ்வொரு மனிதனும் சூதாடுபவன்தான். அதுவும் ஒவ்வொரு நாளும் அவன் சூதாடிக்கொண்டிருக்கிறான். அவன் வாழ்வே ஒரு சூது களம் என இருக்கிறது. சூது என்பதின் வரையறை என்ன? சூது என்பது ஒரு பலனை வேண்டிதான் இப்போது கொண்டிருக்கும் ஒரு பலனை பணயம் வைத்து ஒரு செயலை அது நிறைவேறும் என்பதற்கான நிச்சயமில்லாத நிலையில் செய்யும் செயலெனக் கொள்ளலாம் அல்லவா? குழந்தை பாதுகாப்பாய் இருக்கும் தன் கருவறையில் இருந்து வெளிவந்தால் நலமுடன் இருப்போம் என்ற பலனை கருதிக்கொண்டு பிறந்து வருவதையே ஒரு சூதாட்டமெனக் கொள்ளலாம். மகிழ்ச்சியைத் தேடி தந்தை ஆதரவாக பற்றியிருக்கும் பிடியகற்றி செல்லும் சிறுவர் போவது ஒரு சூது அல்லவா? தம் எதிர்கால வாழ்வு நலனுக்கென பலவற்றை தவிர்த்து ஒரு துறையை தேர்ந்தெடுத்து பயிற்சிகொள்ளுதல், தன் இல்லத் துணைவரென ஒருவரைக் கைபிடித்தல் என அனைத்து நிகழ்வுகளிலும் நிகழ்வது சூதாட்டம் அல்லவா?


சாதாரணமாக ஒரு சாலையைக் கடப்பதில், ஒரு வாகனத்தில் பயணிக்கையில், ஏதோ ஒரு உணவகத்தில் எதோ ஒரு உணவை உண்பதில், எவர் ஒருவரையோ உறவென நேசம் கொள்வதில், எவர் ஒருவரையோ நமக்கு எதிரானவர் என்று பகைகொள்வதில் எல்லாம் நாம் சூதாடிக்கொண்டிருப்பதையே குறிக்கின்றன. பெரும்பாலான சூதுகளில் நமக்கு எதிராக விளையாடுபவர் யாரெனத் தெரியாமலேயே நாம் இந்த ஆட்டத்தை விளையாடிக்கொண்டிருக்கிறோம். சில சமயம் நாம் வெற்றி என நினைத்துக்கொள்வது தோல்வியென ஆகிறது. தோல்வியென அறிந்தது நன்மை பயப்பதாக மாறுகிறது. நம் எதிர் நின்று சூதாடுபவன் நாமறியாதவன். அவன் நமக்கு எதிராக அமைக்கும் பகடைக் காய்கள் நாமறியாதது. அந்தக் காய்களை நகர்த்தும் விதிகளை அவனே அமைத்துக்கொள்கிறான். அவன் எதை ஆடினாலும் அதுவே சரியானது என்று வாதிடுபவன். அவனுடனான இந்தச் சூதில் ஒவ்வொரு நாளும் நாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

நம் வாழ்வே ஒரு சூதுக்களன் என ஆகிவிட்டதால் நாம் சூதை எப்படி திறன்பட ஆடுவது என்பதை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சூதின் முக்கிய அம்சமே அதில் வெற்றி நிச்சயமில்லை என்பதுதான். ஆதலால் ஒரு சூதாட்டத்தில் இறங்குவதை கூடுமானவரை தவிர்க்கப்பார்க்கவேண்டும். வேறு வழியின்றி சூதில் இறங்கினால் அதை முழு மனதோடு ஆட வேண்டும். வெற்றி ஒன்றே இலக்கு. அந்த வெற்றியை பெறுவதற்கு எதை நாம் பணயம் வைக்கிறோமா அதற்கு நாம் வருந்துபவராக இருக்கக்கூடாது.

எதிராடுபவர் தோல்வியடைவதற்கு வருத்தப்படுபவராக நாம் இருக்கக்கூடாது. எண்ணித் துணிந்தபின் வெற்றிக்கான பாதையில் ஏற்படும் இழப்புக்களை ஏற்றுக்கொள்பவராக இருக்கவேண்டும். தோல்வி அடைவதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ளன என்பதை மனதில் இருத்தி அதற்கான முன்னேற்பாடுகளுடனும் இருக்க வேண்டும். எதிராடுபவனின் நல்லெண்ணத்தை நம்புதல் மிகப்பெரிய தவறென ஆகிவிடும். முக்கியமான ஒன்று நமக்கு எதிராக ஆடுபவனின் திறன் மட்டும் நமக்கு எதிரானது அல்ல. தற்செயலாக விளைபவை இவ்விளையாட்டில் பெருமளவு பாதிப்பை விளைவிக்கக்கூடியவை. அதனால் எதிராளி திறன் குறைந்தவன் அதனால நமக்கு நிச்சயவெற்றி என இருப்பது மிகத் தவறு. விளையாடும்போது தம் மனநிலையை சிதறவிடக்கூடாது. சூதின் போக்கு தமக்கு பாதகமாக இருக்குமென்றால் நம் அகங்காரத்திற்கு இடம் கொடுக்காமல் அதை மேலும் தொடராமல் வெளிவருவதற்கான உள உறுதி கொண்டிருக்கவேண்டும்.


நளனும் தருமனும் சூதுகளத்தில் இவ்வாறு ஆடவில்லை என்பதைக் காணலாம். இருவரும் தாம் நிச்சயம் வெற்றியடைந்துவிடுவோம் என்ற மனநிலையோடு ஆடத் துவங்குகிறார்கள். எதிர்த்து ஆடப்போகும் புஷ்கரன் மற்றும் துரியோதனன் திறனற்றவர்கள் என்ற அலட்சியத்தோடு இருந்தவர்கள். அவர்கள் தோல்வியின் முடிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று யூகித்து அதற்கான முன்னேற்பாடுகளை சிந்தித்திருக்கவில்லை. அவர்கள் சூதின் வெற்றியைவிட போரைத்தடுப்பதே நோக்கமென ஆரம்பித்தவர்கள். தமக்கு எதிராடுபவரின் தோல்விக்காக வருந்தும் மனநிலை அவர்கள் தீவிரமாக சூதில் ஈடுபடுவதை தடுத்திருக்கலாம்.


தருமன் இப்போது சூது விளையாடுவதில் தன் குறைகளை களைந்து வருகிறான் என்றே தோன்றுகிறது. இப்போது அவர்கள் இருக்கும் தலைமறைவு வாழ்க்கையும் ஒரு சூதாட்டமே. இதுவும் கௌரவர்களுக்கு எதிரான ஆட்டம்தான். இதில் வெற்றி பெற வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய இலக்காக கொண்டிருக்கிறான். அதற்காக தன் மற்றும் தன் சகோதரர்கள், மனைவி அனைவருக்கும் ஓராண்டு அடிமைவாழ்வு என்பதை பணயம் வைத்து அவன் ஆடுகிறான். அவனுக்கு எதிராக ஆட்டத்தில் இப்போது ஒரு காய் நகர்த்தல் என திரௌபதியை கீசகன் அவமதிக்கும் நிகழ்வு நடக்கிறது. அவன் சற்று கோபப்பட்டு உளமிழந்து தன் சீற்றத்தைக் காட்டியிருந்தால் பாண்டவர்களின் தலைமறைவு வாழ்தல் முறியடிக்கப்பட்டு பாண்டவர்கள் தோற்கடிக்கப்பட்டிருப்பார்கள். தருமன் இதற்கு எதிராக அருமையான காய் நகர்த்தலை செய்கிறான். திரௌபதிக்கு பீமனின் உதவி கிடைப்பதற்கான கால அவகாசத்தை தரவேண்டும். அதுவரை அவளை கீசகனிலிருந்து காக்க வேண்டும். தன்னையோ திரௌபதியையோ யாரென்று வெளிப்படுத்திகொள்ளாமல் இதை செய்தாக வேண்டும். அதற்காக உத்தரையை திரௌபதிக்கு அரணாக ஆகும்படி செய்து ஆட்டத்தின் இந்தத் வெல்கிறான் தருமன். தருமன் சூதாட்டத்தில் நிபுணத்துவத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறான் என்றே நினைகிறேன். இன்னும் மேலும் இந்த தலைமறைவு வாழ்க்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கான ஆட்டத்திலும் பின்னர் தன் அரசை மீண்டும் பெறுவதற்கான ஆட்டத்திலும் அவன் வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கின்றன.

தண்டபாணி துரைவேல்