Friday, August 11, 2017

ஒருங்கமைவு







நீர்க்கோலத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் தன்னளவில் நிறைவுடையதாகத் தோன்றுகிறது.   குங்கன், விராடர், சுதேஷ்ணை, உத்தரை, திரௌபதி, கீசகன், பிரீதை என சொல்லப்பட்டு வரும் நிலையில் கதை புஷ்கரன், நளன் என்று திரும்ப அந்த மாற்றம் வாசிப்பின் வேகத்தையோ சுவையையோ எங்கும் குறைக்கவில்லை.  சுவையாக சொல்லிவந்து இதை இங்கே நிறுத்தினாரே என்று எண்ண, மேற்கொண்டு சற்றும் ஓய்வு தராமல் மற்றது தனக்கே உரித்த ஒருங்கமைவுடன் உள்ளே ஈர்த்துக் கொள்கிறது.  அரண்மனையில் கீசகன், பிரீதைக்கான பூச்செய்கையின் போது சேடிப்பெண்கள் அனைவரும் உருக சுபாஷிணி வந்து கந்தர்வன் புகுந்ததாக சாமியாடுகிறாள்.  ஒருபுறம் தன் தலைவி சைரந்தரி மீதான பற்று, அவள் அந்நிகழ்விற்கு வராதது-அதன் காரணம், மற்றொருபுறம் சேடியரை மோசமாக நடத்திய கீசகன் மீதான வெறுப்பு, உயிர் மாய்த்துக் கொண்ட பிரீதையின் மீதான கழிவிரக்கம் எல்லாவுமாக சேர்ந்து தன் விருப்பங்களை "கந்தர்வனாக" நின்று முன்வைக்கிறாள் சுபாஷிணி.  குடும்பத்தின் வயதில் மூத்த ஆண்கள்  உட்பட யாரையும் "டேய்" என்று அழைத்து தங்கள் விருப்பங்களை உத்தரவாக பிறப்பிக்க இப்படி ஒரு வழி - பயன்படுத்தும் பெண்கள் இருக்கிறார்கள் தானே?. 

நாற்களத்திற்காக குதிரைகளை அமைத்து கலியை நீக்கி இந்திரனை வைத்தபோதே சூதாட்டம் தொடங்கி விட்டது.  செஸில் ராஜாவை விட ராணி சக்தி வாய்ந்தது, ஆனால் ராஜா வீழ்ந்தால் ஆட்டம் முடிந்து விடும், ராணியை மட்டும் வைத்துக் கொண்டு ஆடமுடியாது.  நீ விழைந்தது மட்டுமே நினக்கு நிகழ்கிறது நான் வேறொன்றும் செய்யவில்லை என்கிறான் கலி.  நான் ஊழை புதிதாக வகுத்தளிப்பதில்லை, முன்பே அமைந்த ஊழுக்கு உட்பட்டே விளையாட்டு.  உன் விழைவே உன் ஊழ் என்கிறான்.

தோல்வியை விரும்புகிறேன் என்று சொல்லிக் கொள்ளும் மனம், உள்ளே வெற்றியை விருப்புவதும், வெற்றியை விரும்புவதாக எண்ணி இருக்கும் போதே உள் ஆழம் தோல்வியை விருப்புவதும் - இதை எண்ண திகைப்பு ஏற்படுகிறது.  பதவியை விரும்பிக் கொண்டிருக்கும் போதே "நாங்க பார்க்காத ஜெயில் இல்ல" என்று சொல்லி அவ்வாறே அமைந்தும் விடுவது, உண்மையில் ஆழத்தில் மனம் அதைத்தான் விழைந்தது என்பதைத் தான் காட்டுகிறதோ? "ஆமாம். அதைத்தானே உண்மையில் விழைந்தாய்? அதனால் தானே அதற்குரிய செயல்களைச் செய்தாய்? "- அவ்வாறாயின் எல்லோருக்குமே உள்ளும் புறமும் ஒன்றாகவே இருக்குமாறு காய்களை நகர்த்துகிறது அந்த உள்ளே இருக்கும் ஏதோ ஒன்று.


அன்புடன்,
விக்ரம்,
கோவை