அன்புநிறை ஜெ,
"வானிலிருந்து
 உதிரும் அருமணிகளை அள்ளிப்பொறுக்கிச் சேர்ப்பதுபோல்" - ஒவ்வொரு நாளும் 
வெண்முரசை வாசிப்பவர்களுக்கு, தனக்கேயென எழுதப்பட்டதாக உணரும் வரிகளை 
நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொள்ளும் அனுபவம் இப்படித்தான் இருக்கிறது.
கதையின் பரபரப்புக்கிடையில்
எதிர்பாராமல்
 பூத்திருக்கும் கவிதை வரிகள்.  கதையின் வேகத்தில் கடந்து போன அவ்வரிகள் 
ஆழத்தில் காத்திருக்கிறது அதற்கான தருணத்தில் வெளிப்பட. 
பிள்ளையார் நிவேதனத்துக்கான மாவிலேயே பிள்ளையார் பிடித்து வைப்பது போல வெண்முரசின் வரிகளாலேயேதான் சொல்லத் தோன்றுகிறது. 
" மரத்திலிருந்து நீரில் உதிரும் சருகு ஆழத்திலிருந்து எழுந்து வருவதுபோல" வெளிவரும் என்றோ வாசித்த வரிகள்.
பாதி
 திறந்த கதவு வழியே உள்ளே நுழைந்துவிட்டு வெளியேற வகையறியாத சிறு வண்டு 
போல, பலநாட்கள் காலையில் மனதில் நுழையும் வரி பல மணி நேரம் மனதுள் 
சுழல்கிறது.  "கதிரவனேதான் என நடிக்கும் நீர்த்துளி போன்றவள் நான்" என்ற 
வரி நேற்றும் இன்றும் உள்ளே இருக்கிறது.
தனக்கான 
கதிரவனைக் கண்டுவிட்ட நீர்த்துளிகள் கொடுத்து வைத்தவை. மண்ணோடு புல்தலையில்
 இருப்பினும் வானோக்கி முகமெடுத்து நோக்கவும், முழுதாக
கதிரவனைத் தான் என உணர்ந்து அவனை முழுதடக்கி சுமக்கவும்,
கதிர்போல
 ஒளியுமிழ முற்படவும் செய்கிறது அச்சிறுதுளி; உலர்ந்து போதல் மரணமன்று - 
புலரியில் மீண்டும் உதிப்பதற்கே  என்றும் உணர்ந்திருக்கிறது. ஒரு நாள் 
துளியும் மறைந்து போகலாம் - கதிரவனும்தான்.
மேலும்,
 கதைப்போக்கில் ஒரு கருத்தை ஏற்றும் மறுத்தும் செல்லும் உரையாடலின் 
திசையில் மனமும் ஊசலாடி தனக்கு உவப்பான பக்கத்தில் நிற்க முயன்று, 
தன்னியல்பில் வந்து நிற்கும்போது நாம் உண்மையில் யாரென்பதையும் 
காட்டுகிறது.
உதாரணமாக - 
"நல்லூழ்
 கொண்டவர்கள் முற்றிலும் வெளிப்படாது இங்கு வாழ்ந்துமுடிப்பவர்கள்.” - 
படித்ததும், உண்மைதானோ என்று ஒரு குரல். உடன் அடுத்த வரிகளிலேயே "எஞ்சுவதென
 ஏதுமின்றி செல்வோமென்றால் இருப்பதற்கு ஏது பொருள்? பொருளின்மையை 
உணர்ந்தபின் நிறைவென்று ஒன்று உண்டா? நிறைவளிக்காதது உவகை என்றாகுமா என்ன" -
 இதுதானே உண்மையென ஊசல் மறு எல்லைக்கு. 
பனித்துளி
 விட்டுவிட்டு செல்வதென்ன! எரிந்து முடியும் போது கதிரவனும்தான் 
விட்டுவிட்டு செல்வதென்ன!! சுவடில்லாது கடந்து செல்வதாலேயே பறவைகள் 
பறக்கும் வரம்பெற்றிருக்கின்றன. தானென சுவடு பதிப்பதெல்லாம் மண்ணோடு 
பிணைந்தே கிடக்கின்றன. 
சில
 நிமிடங்கள் கதையில் முன் செல்ல மறந்து, சைரந்திரி முன் சுபாஷிணி என இரு 
குரல்கள் உள்ளே ஒலிக்க மீண்டும் மீண்டும் வாசித்து விட்டு, அதன் அதிர்வுகள்
 அடங்காமலேதான் அடுத்தவரி செல்ல முடிந்தது. 
அதற்குள் மின்னலோடு இடியும் பெருமழையுமென அடுத்த வரி மேலே பெய்திறங்கியது
"உனக்கு நல்லூழ்தான். ஏனென்றால் நீ வெளியே நிகழ்வதேயில்லை. உனக்குள் பிறிதொருத்தியாகி உலகறியாது வாழ்ந்து நிறைவாய்"
உள்ளே நிகழ்வுதானே வாழ்வு. 
வாழ்த்தப்பட்டதாக உணர்கிறேன். தினமும் நள்ளிரவில் நிகழும் சூரியோதயங்களுக்கான நன்றிகளுடனும்,
மிக்க அன்புடன்,
சுபா

