Wednesday, August 9, 2017

நீர்க்கோலம் – தருமனின் எரிச்சல்



அத்தியாயம் 71 ன் இறுதியில் தருமன் எரிச்சலுடன் திரௌபதியை மறு நாள் அவையில் வந்து அவள் சொற்களை விரிக்குமாறு சொல்கிறார். சற்றே தூக்கி வாரிப் போட்ட இடம் அது. மட்டுமல்லாமல் குங்கனாக அவைக்கு வந்த பிறகு நீர்க்கோலம் முதல் முறையாக தருமன் என அவரை அழைக்கிறது. திரௌபதியை சைரந்திரி என பிறர் மட்டுமே அழைக்க பெரும்பாலான இடங்களில் அவள் திரௌபதி என்றே அழைக்கப்படுகிறாள். மாறாக பிஹன்னளை எப்போதுமே அர்ச்சுனன் என அழைக்கப்படவில்லை. வலவனும் பீமன் என அழைக்கப்படவே இல்லை. சகாதேவனும், நகுலனும் அவரவர் பெயர்களில் சில முறை அழைக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக ஜெ ‘கதாபாத்திரத்தின் நோக்கில் கதை செல்லும்போது அவன் பெயரே இருக்கும்.’ என்று சொல்கிறார். அது உண்மை. இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் அக்காதாபாத்திரங்கள் எப்போதெல்லாம் தங்கள் சுயத்தை உணர்கிறார்களோ, மாற்றுரு களைந்து சுயமாக இருக்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்களது பூர்வாசிரம பெயரே வழங்கப்படும் எனலாம். நேமியனைக் காணும் கிரந்திகன் நகுலனாகவே அழைக்கப்படுகிறான். சைரந்தரி அரசியால் மட்டுமே அவ்வாறு அழைக்கப்படுகிறாள். மற்ற சமயங்களில் எல்லாம் அவள் திரௌபதியாகவே இருக்கிறாள். எனவே தான் அவள் பிற சேடியரோடு ஒட்டி உறவாடவில்லை.

தருமன் குங்கனாகவே இருந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் முன் திரௌபதியாகவே சைரந்திரி வந்து நின்ற போது தருமனாக மாறிவிடுகிறார். மீண்டும் ஒரு முறை அவர் முன் அவள் பெண்ணிழிவு செய்யப்படுகிறாள். அவர் திரௌபதியைக் காத்தாக வேண்டும். ஆனால் வெளிப்படாமலும் இருக்க வேண்டும். ஏனென்றால் சேடிப் பெண்டிருக்கு அவை நுழைய ஒப்புதல் இல்லை. அதையே அவர் கூறி திரௌபதிக்கு அவள் யார் என்பதை நினைவூட்டுகிறார். துலாவின் மறுபக்கமாக முன்பு துரியன் அவையில் அவளைக் காத்த கன்னியொருத்தியை நினைவு கொண்டு உத்தரையை வருமாறு பணிக்கிறார். உத்தரையை அங்கு வரச்சொன்னது தருமன். எனவே தான் ஏவலனிடம் உத்தரையை அவை புக ஆணையிடுகிறார். குங்கனுக்கு அவையில் என்ன இடம்? அரசனின் களித்தோழன், சூதன். ஆணையிட முடியுமா என்ன? ஆனால் அங்கு ஆணை இட்டவர் தருமன். சத்ராஜித்.

ஆயினும் திரௌபதி இதை அறியும் நிலையில் இல்லை. “அரசர் இருக்கும் இடமே அரசவை. அதை நம்பி நான் வந்தேன்” என தருமனை நம்பி தான் வந்ததைச் சொல்கிறாள். அவள் அரசர் என்றழைத்தது தருமனைத் தான். அதை உணர்ந்ததால் தான் தருமன் எரிச்சலுடன் அவர் வெறும் அரசனின் சூதுத் தோழன் என்பதை அவளுக்கு உணர்த்தி மறுநாள் அவைக்கு வருமாறு கூறுகிறார். முன்பு கானகத்துள் நுழைந்த காலத்தில் காலெல்லாம் முள் குத்தி குருதி வழிய இருந்தவளுக்காக ஒரு காலணியை உருவாக்கி அளிக்கிறான் பீமன். அப்போது தருமன் யாரும் காணாவிட்டாலும் நாம் அறத்தால் கண்காணிக்கப்படுகிறோம் எனக் கூறி அந்த காலணியை அவள் பயன்படுத்துவதில் இருந்து விலக்குகிறார். இப்போதும் கிட்டத்தட்ட அதையே செய்கிறார் அவர். சற்றே குனிந்திருக்கும் சைரந்திரி நிமிர்ந்தால் அனைத்தும் கலைந்து விடும். ஒரு நீள்மூச்சில் திரௌபதி தன்னைத் தொகுத்துக் கொள்கிறாள். முதலாமவர் கைவிட்டதால் தான் திரௌபதி இரண்டாமவரிடம் தஞ்சமடைகிறாள்.