Monday, August 14, 2017

அணியாடை






அன்புநிறை ஜெ,

நலமாக இருக்கிறீர்களா?

மாநாகங்களின் தழுவலென இணைந்து  பிண்ணிச் செல்கிறது நளதமயந்தி கதையும் விராட பருவமும். இன்னும் பின்னகர்ந்து நோக்கினால் வெண்முரசின் ஒட்டுமொத்தச் சித்திரத்துள்ளும் மிக நேர்த்தியாக இழையோடுகிறது இதன் அத்தனை சரடுகளும்

// விழைந்த ஒன்று எதிர்வரும்போது அதன்மேல் ஐயம் கொள்ள மானுடரால் இயல்வதில்லை.// இதுவே நளனுக்கும் தமயந்திக்கும் நிகழ்கிறது. தூது சென்ற அன்னத்திடம் இருவரும் பெற்றுக் கொள்வது அவரவருக்கான கனவுகளை. ஒவ்வொருவரும் அவரவர் கனவுகளில் ஒழுகி, அனைத்தும் ஒன்றிணையும் மாபெரும் பெருங்கனவை - கரவுக்காட்டை வாழ்க்கை என்கிறோம்

வழக்கமாக நளன் கதைகளில் அவனைத் தீண்டிய கார்க்கோடகன் அவனது உருவை மீளப்பெற உதவும் ஒரு ஆடையைத் தந்து செல்லும். அந்த ஒற்றை வரியை உளவியல் கூறுகளோடும் இலக்கிய நேர்த்தியோடும் விரித்திருக்கிறது வெண்முரசு.

ஒருவனது உருமாற்றம் என்பது அகவயமாக நிகழ்வதிலேயே முழுமையடைகிறது எனும்போது  மீட்சிதரக் கூடிய அந்த ஆடையும் எடை கொள்கிறது

அன்னப்பறவை மாலை கொண்ட அணிக்கரைப் பின்னல். அன்னம் அவர்கள் கண்ட கனவு. அந்த ஆடை - கலியின் அருளால் பிறந்த நளனது விழைவு; சின்னஞ்சிறு நிஷதபுரியிலிருந்து அவன் காணும் பெருங்கனவு. அவனது 
முடிசூட்டன்று அவனுக்கு விலைமதிப்பற்றதாகத் தெரிந்த ஒன்று அந்த ஆடை. பேருருக் கொண்டெழும் தமயந்தி அருகில் சிறிதாக உணரும் அவன் தன் உள்ளாழத்தில் புதைத்து வைத்து மறக்க முயலும் தன்னகங்காரம் அது. சத்ராஜித்தென முடிசூடும் அவளது முழுமுதல் வெற்றியின் தினத்தில் அவனது உள்மனம் தான் இழந்துவிட்ட தன்மதிப்பைக் கனவில் காண்கிறது.   தன்மதிப்பை இழந்துவிட்டவர்கள் அதை உலகுக்கு அறிவிக்கத் தவறுவதே இல்லை - மறைக்க முயன்றாலும். குங்கன் ஒப்புக்கொள்வது போல தோல்வியை உள்ளாழம் விரும்பி ஏற்கும் சூதுக்களம் அது.

எனில் அரசனென்றும் கணவனென்றும் ஆணென்றும் அணிந்திருக்கும் ஒவ்வொன்றையும் அவன் அகத்தினின்று உரித்து, கான் நெருப்பில் எரித்த பின்னர் கார்க்கோடகன் அந்த ஆடையை, அவன் கருவூலத்திலிட்டுக் காத்த அகங்காரத்தை நினைவுறுத்துகிறான். அவனது ஆழ்மனப் பொதியில் கனவென அதைச்சுமந்து  நளன் பாகுகன் ஆகிறான். பாகுகன் நள உருப்பெற அவன் தனது சுயமதிப்பை சூடுவதே மீட்சியாக இருக்க முடியும்

எனில் பேருருக்கொண்டு நின்றிருந்த பெருங்காடு ஒன்றுமில்லையென எரிந்து தணிந்ததை வாழ்வெனக் கண்டவன் அவன். பேரிழப்புக்குப் பின்னர் மீண்டெழுவதில் மானுடருக்கு உள்ள பெருந்தடை அவர்கள் இழந்தவை அல்ல - எழுந்து பெறும்பயனென்ன எனும் வினாவே.  
//அன்றன்று இருத்தல் என்பதற்கப்பால் வாழ்வதற்கென ஏதேனும் பொருள் இருக்க இயலுமா என்றான். இறப்பை அணுகுதல் என்றல்லாமல் இளமை முதிர்வதற்கு என்ன இலக்கு என்றான்.//

அதையே காளாமுகரிடம் (கருமையெதிர்வோர்- அருமையான சொல்கேட்கிறான்.  விடை ஒன்றை அறிந்ததும் ஆழப் புதைந்த விதையும் முளைத்தெழும்.

மிக அழகாக அந்த ஆடையைக் கதையில் நெய்திருக்கிறீர்கள்

மிக்க அன்புடன்,
சுபா