Friday, December 28, 2018

உவமை



ஜெ வணக்கம்

கார்கடல்-2ல், படைத்தோனின் ஐந்து மகன்களும், புவி தோன்றி இளங் கன்றாக இருக்கும் தருணத்தில், புவியை எது அலை களிக்கிறது என்று பிரம்மனிடம் தாங்கள் உய்த்து வந்ததை கூறுகிறார்கள்.

யமன் "அகம் அசையாமல்" இருக்கும் ஓரு உயிரை கண்டு வரும் படி பணிக்க படுகிறான். யமனும் அகுபாரனை கண்டுடைகிறான்.

பிரம்மன் அவனிடம் “மைந்தா, சுழலும் கதவு நிலைபெற்றமைவது அசையாக் குடுமிக்குமிழியிலேயே".

அத்தருணத்தில் புவியில் மனிதர்களும் இல்லை கதவும் இல்லை, பிரமனின் இவுவமை எப்படி சரியாகும்? அப்படியே இருந்தாலும் குளிர் கால தேசங்களில் குளிரை கட்டித்திற்க்கு வெளியே நிறுத்தும் கட்டிட உத்தி, இந்திய புராணத்தில் எப்படி கையாள முடியும்?

உவமை நன்றாக இருக்கிறது. அதை தாண்டி எனது கேள்வி, புனைவில் தர்க்கத்தின் இடம் என்ன?

அன்புடன்

சதீஷ் கணேசன்

அன்புள்ள சதீஷ்


அந்தக்கதை ஒரு பாட்டியால் மகனுக்குச் சொல்லப்படுகிறது. அன்றுள்ள உவமைகளை பயன்படுத்தித்தான் சொல்லமுடியும். பிரபஞ்சம் உருவாவதற்கு முன்னால் என்ன இருந்தது? அதைவைத்து இன்று எதையாவது சொல்லமுடியுமா? இந்த மொழியில் எதையாவது சொல்லமுடியுமா?

குடுமி என்பது மரக்குமிழி. கோயில்களில் கல்லில் இருக்கும். அதில்தான் அன்றைய கதவின் முனை பதிந்திருக்கும். [கீல் என்னும் அமைப்பு அன்று இல்லை] அதில்தான் கதவு சுழலும்

வருவார் கொழுநர் எனத்திறந்தும் வாரார் கொழுநர் என அடைத்தும் திருகும் குடுமி விடியளவும் தேயும் 

என்று கலிங்கத்துப்பரணி சொல்கிறது

ஜெ