Saturday, December 15, 2018

ஓவிய முகங்க்ள்




ஆசானுக்கு வணக்கம். 


என்னையோத்த வாசகர்கள் வெண்முரசை வாசிக்கும் பொழுது, உங்கள் எழுத்தின் வீரியத்தில் திறக்கும் புத்துலகை காண்கிறோம். கற்பனைக்கு எட்டாத உவமைகளும், உயிர் கொண்டிருக்கும் கதை மாந்தர்களும் உலவும் உலகம் அது. 



இடையிடையே சிற்சில ஐயப்பாடுகள் எழுகின்றன. அதனை கடந்து சென்றுவிட எத்தனிக்கும் பொழுது,. வாசகனின் சொற்களுக்கும் செவிமடுக்கும் உங்கள் குணம் கேள்விகளை உங்கள் பார்வைக்கு  அனுப்பி விடைபெற விளைகிறது.

வெண்முரசின் ஓவியர்கள் ஏன் எந்த மனிதருக்கும் முகத்தினை தருவதில்லை. பொங்கும் இருளில் முகம் புதைத்தோ, பின்பக்க அழகை காட்டியோ அனைத்து கதாபாத்திரங்களும் இருக்கின்றன. மாடமாளிகைகள், விலங்குகள், அணிகள், ஆடைகள் என எல்லாவற்றையும் காண இயன்றாலும் முகங்களை காண இயலாதது வருத்தம் அளிக்கிறது. 


இதன்பின்னால் ஏதேனும் உளவியல் உத்தி உள்ளதா? ஆசானே
- அன்புடன்

 மதுமிதா

அன்புள்ள மதுமிதா

மகாபாரதக் கதாபாத்திரங்களின் முகங்களை நாமே கற்பனைசெய்து வளர்த்துக்கொள்வதே நல்லது. முகங்கள் வரையப்பட்டால் நம் மனம் அந்த முகத்தை நமக்கு தெரிந்த முகங்களுடன் ஒப்பிக்கொள்ளும். அந்தக்கதாபாத்திரங்களின் ஆழம் இல்லாமலாகும். ஆகவே ஓவியர் திட்டமிட்டே அந்த முகங்களைத் தவிர்த்திருக்கிறார்

ஜெ