Wednesday, December 5, 2018

திசைதேர்வெள்ளம்




அன்புள்ள ஜெ

வெண்முரசில் பல நூறு முறைநிறைவடைக’, ‘விண்புகுகஎன்ற சொற்கள் வந்துள்ளன. நம் மரபில் இன்றுவரை குறிப்பிட்ட பொருளில் புழங்கிவருபவை இவை. திசைதேர்வெள்ளம் இறுதிப்பகுதி படிக்கும்வரை அவற்றின் மொத்த import எனக்கு உறைக்கவில்லை. உங்கள் வேறு சில பதிவுகளுடன் சேர்த்து படித்தபோது சில விஷயங்கள் திறந்துகொண்டன. (அவை தவறாக இருக்கலாம், மீதமுள்ள வெண்முரசிலோ அல்லது வாழ்க்கையிலோ உணரலாம்).

அம்பை ஏன் அழுகிறாள்தன் மகனை வைத்து தன் காதலனை வீழ்த்தியதாலா? இல்லை அதனாலும் நிறைவடையாத தன் கையறு நிலையை வைத்தா? அவளுக்கு ஆறுதல் சொல்பவள் விண்ணிலிருந்து மண்ணில் விழுந்த கங்கை. பெண்மை எனும் தத்துவத்தின் அர்த்தமே நிறைவடையாமை தானா? அதன் மேல் பரிதாபமும் பெரும் மரியாதையும் பயமும் ஒரே நேரத்தில் வருகிறதுஏனென்றால் அதுவே இதையெல்லாம் உருவாக்குகிறது.

சிகண்டி வடிவிலிருந்த எமனுக்கு அறம் என்ற சொல்லே விடையாக கிடைத்ததுஅது கிருஷ்ணன் அவனுக்கு அளித்த விளக்கம். நிஜ சிகண்டி இங்கிருந்து எப்படி நகர்கிறார் என்று பார்க்கவேண்டும்

பீஷ்மர் ஒன்றை ஒன்று சமன் செய்யும் வாழ்க்கைப்படுக்கையை அவதானித்துக்கொண்டிருக்கிறார். அதை அவருக்கு அளித்தது தமிழ் நிலத்து மருத்துவம் என்பது அழகான இணைப்பு. தைத்ததும் பிழைத்ததும் என்று ஒவ்வொரு அம்புக்கும் ஒருஆனால்சொல்லி முடிக்கும்போது தன் வாழ்க்கையை புரிந்துகொண்டு நிறைவடைவார் போலும்

துண்டிகன் அற்புதமான சிறு பாத்திரம். அவனும் விசோகனும் தேர்ப்பாகன் என்பதன் நிறைவடிவத்தை அடைகிறார்கள். இப்படி ஒவ்வொரு பாத்திரத்தையும் அவர்கள் குணாதிசயங்களையும் உருவகமாக பார்த்துக்கொண்டே செல்லலாம் என்பதே வெண்முரசின் தீராத இன்பம்.

பொருண்மை நிலையிலும் சூட்சும வடிவிலும் உக்கிரமான போர் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதுசஞ்சயன் போல அதை அவதானிப்பவர்கள் பெருக்கிகொண்டே இருக்கிறார்கள். அந்த பெருக்கினுள் லக்ஷ்ம்ணன் பார்பாரிகனை வாழவைப்பது போன்ற சிறு செயல்கள் கவனிக்கப்படாமல் நடக்கின்றன.

எனக்கு இந்தக்கதையின் இரண்டாம் நாயகன் லக்ஷ்மணன் தான். அவன் தந்தையை போல அவனும் magnificence, magnanimity இரண்டும் ஒரே வேர்கொண்டவை என்கிறான்.

அன்புடன்
மது