Tuesday, December 4, 2018

எட்டுநிலை



ஜெ

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் எட்டு வசுக்களும் நீங்கியதன் கதைதான் திசைதேர்வெள்ளம். தரையில் பதிந்திருக்கும் அம்புகளைப் பார்த்து இத்தனை அம்புகளும் என் மகன் மேல் பெய்யப்பட்டவை என்று கொதிக்கிறாள் கங்கை. அந்த அம்புகள் அனைத்தையும் தடுத்துக் கவசமாக நின்றவை அந்த எட்டு வசுக்களும். அவர்கள் நீங்கியதும் அவை அவர் மேல் பாய்ந்துவிட்டன

அந்த எட்டு வசுக்களும் எப்படி எப்படி நீங்கின என்பதை வாசித்து எட்டு படிநிலைகளாக வகுத்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். அந்த எட்டு படிகள் வழியாக பீஷ்மர் இறக்கிறார்

யோக மரபில் எட்டு நிலைகள் வழியாகவே உயிர் பிரிகிறது என்பார்கள். பௌத்த யோகமரபிலும் அது சொல்லப்படுகிறது. அந்த எட்டு நிலைகளாக இவற்றைக்கொள்ளலாமா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.  வெட்டவெளி எல்லையற்றது என்று அறிதல், ஆத்மா எனும் சாரம் இல்லை என அறிதல் அப்படி எட்டு அறிதல்நிலைகளாகவே அதை பௌத்தமரபு சொல்கிறது

பீஷ்மர் மகாயோகி. ஆகவேதான் இந்த அம்புகள் வழியாக நீங்கிச்செல்கிறார். அப்படிப்பார்க்கையில் கிருஷ்ணன் தவமிருப்போர் துன்பங்கள் வழியாகவிடுதலை பெறுகிறார்கள் என்ற வரி பீஷ்மரைத்தான் குறிக்கிறது என்று தோன்றுகிறது

சுவாமி