Tuesday, December 18, 2018

வெண்முரசு வருகை



அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
        

வணக்கம் .தங்களின் இன்றைய அறிவிப்பான " வெண்முரசு நாவல்வரிசையின்
இருபதாவது நூலான கார்கடல் வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் இரவில் இருந்து
தொடர்ந்து  வெளிவரும் " - வெண்முரசு வாசகர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை
தருவதில் வியப்பேதும் இல்லை . வெண்முரசு நாவல்வரிசையின் நூல் பத்தொன்பது
– திசைதேர் வெள்ளம்  முடிவுற்ற நாளில் இருந்து ,அடுத்த நாவலுக்கான
தலைப்பு மற்றும் அது வெளியாகும் நாள் குறித்த செய்திகளின் அறிவிப்புக்காக
காத்து நின்றவர்கள் உங்கள் வெண்முரசு வாசகர்கள் .


ஒவ்வொரு நாவல் முடிவுற்றதும் அடுத்த நாவல் அறிவுப்பு செய்திக்காக
காத்துக்கிடக்கும்  வெண்முரசு வாசகர்களின் தவிப்பு அளவிடமுடியாதது
.‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 39 - அர்ஜுனன் “உன் ஆற்றல்
அச்சுறுத்துகிறது யாதவனே” என்றான். பீமன் “ஆம், இருமுனையும்
கைப்பிடியும்கூட கூர்மையாக உள்ள வாள் போலிருக்கிறாய்” என்றான். கிருஷ்ணன்
புன்னகையுடன் “மூத்தவரே, பாலைநிலத்தின் விதைகள் நூறுமடங்கு வல்லமை
கொண்டவை. ஏனென்றால் ஒரு விதைக்குப்பின்னால் வாழ்வை விரும்பி நீர்
கிடைக்காமல் அழிந்த ஆயிரம்கோடி விதைகளின் துயரம் உள்ளது. துளிநீருக்குத்
தவம்செய்யும் பல்லாயிரம் விதைகளின் துடிப்பு உள்ளது.நான் நூற்றாண்டுகளாக
நிலம் நிலமாகத் துரத்தப்படும் யாதவர்களின் கண்ணீரில் இருந்து எழுந்து
வந்திருக்கிறேன்.” 

ஆம் ஜெயமோகன் அவர்களே வெண்முரசு நாவலை தினமும்
அதிகாலையிலே வாசிக்கும் வாசகர்களின் தவிப்பும் ,ஏக்கமும் ,காத்திருப்பும்
,துடிப்பும் பாலை நில விதைகளின் துளி நீர் வேண்டி செய்யும் தவத்திற்கு
நிகர் .

கார் கடல் - இதுதான் மஹாபாரத போரில் பத்தாவது நாள் நிகழ்ந்த பிதாமக
பீஷ்மரின் வீழ்வுக்கு பின்பு நடக்கும் யுத்த நிகழ்வுகளை விளக்கமாக சொல்ல
வருகிறது .அகண்ட பாரத கண்டத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போர்களின் உச்சமென

இன்றுவரை திகழ்வது குருவம்ச பாண்டவ கௌரவரிடையே நடந்த குருஷேத்ர யுத்தம்தான் .அதனை நிகழ்த்தியவர் இளைய யாதவர் கிருஷ்ணன் .இது அவர் திட்டமிட்டது

.‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40  “நீ ஒரு பேரழிவைப்பற்றி
பேசிக்கொண்டே இருக்கிறாய் யாதவனே” என்றான் அர்ஜுனன். “அதை இங்குள்ள
அத்தனை அரசு சூழ்பவர்களும் அறிவார்கள். பாரதவர்ஷம் என்னும் ஆலமரம்
ஷத்ரியர்கள் என்ற பீடத்தில் வளர்ந்தது. இன்று அது அந்தப்பீடத்தை உடைத்து
எறிந்தாகவேண்டியிருக்கிறது. அந்தப் பெரும் அழிவைத் தடுக்கவே பீஷ்மரும்
விதுரரும் முயல்கிறார்கள். மாறாக நான் அவ்வழிவை நிகழ்த்த எண்ணுகிறேன்”
என்றான் கிருஷ்ணன்.ஆம் அந்த அழிவை தான் குருஷேத்திர யுத்தத்தின் மூலமாக
கிருஷ்ணர் நடத்தி காண்பித்து கொண்டிருக்கிறார் 
.
குருதி உடலில் உள்ள போதும் ,உடலில் இருந்து சிந்திய பின்பு சில
கணங்களுக்கு மட்டுமே அது செந்நிறம் .சிவப்பு வர்ணம் .ஆனால் உலர்ந்த
குருதி சென்றடைவது கருமை நிறம் தான் . கோவில் திருவிழாக்களில் ஆடுகள்
வெட்டப்படும்  இடங்களில்   சிறுகுளமென  தேங்கி  நிற்கும்  குருதி , சேறென
உலர்ந்த  பின்பு  அடையும்  வர்ணம் /நிறம் கருமை தான் .ஆம் ஆயிரக்கணக்கான
வீர்கள் சிந்தும் செந்நிற ரத்தமும் கடலென திரண்டு பின்பு  கார் கடலென
உலர்ந்த நிலம் தான் குருஷேத்திர யுத்தம் .பதினொன்றாவது நாள் தொடங்கி
,பதினெட்டாம் நாள் இரவில் அசுவத்தாமன் நிகழ்த்தும் இரவு அநீதி யுத்தம்
வரை குருஷேத்திர  போர்க்களம் வீர்களின் சிந்திய செந்நிற குருதி ,உலர்ந்த
பின்பு - உறைந்த ரத்தம் வந்தடையும் நிறம் கருமை .அதன் அளவில் பெரிதென
கார் கடலென இனிவரும் நாட்களும் குருஷேத்திர யுத்த களத்தை
நிறைக்கப்போகிறது .ஆம் ஒவ்வொரு நாளும் நிகழும் குருஷேத்திர யுத்த
பேரழிவின் எச்சமென எஞ்சுவது கார் கடலே . ஆகவே கார் கடல் தலைப்பு
பொருத்தமான தேர்வு தான் .உங்களின் உள்ளுணர்வு கண்டடைந்ததுவும் அதை தான்என எண்ணுகிறேன்

நன்றி ஜெயமோகன் அவர்களே !
தி .செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்