Tuesday, December 18, 2018

எதிர்வினை



       

நான்   சிறுவனாக இருக்கும்போது ஒருவன்  பள்ளியில் ஒரு கதைப்புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தால்  அவன் பின்னால் ஒட்டி நின்று எட்டிப்பார்த்து இன்னும் இரண்டு மூன்று மாணவர்கள் படித்துக்ககொண்டிருப்போம்.  வெண்முரசு என்ற பெருங்காவியத்தை படிப்பதும் அதைப்போன்றே இருக்கிறது.  ஆனால் இங்கு ஒருவர் கதையை எழுதிக்கொண்டிருக்க அவரை சூழ நின்று நாங்கள் வாசித்து வருகிறோம்.  
        
அனைவரும் ஒன்றிணைந்து எழுதும்போதே  படிக்கும் இதைப்போன்ற வாய்ப்பு மற்ற எந்த ஒரு நாவலுக்கும் ஏற்பட்டிருக்காது.  உலகில் இது ஒரு முதன் முதலில் நடக்கும் அரிய நிகழ்வு என்று கருதுகிறேன்.  ஒரு பெருங்கதைசொல்லி அமர்ந்து கதை சொல்ல அவர் எதிரமர்ந்து கூட்டமாக கதை கேட்டுக்கொண்டிருக்கும் இனிய பரவச உணர்வை நான் ஒவ்வொருநாளும் அடைகிறேன்.  (இதில் கதை என்பது  தத்துவம், இலக்கியம், உளவியல்,  வரலாறு இந்திய தேசத்தின் புவியமைப்பு தொழில்நுட்பம், வணிகவியல், அரசியல் போன்ற பல நுணுக்கங்களை உள்ளடக்கிய ஒரு தொடர் பேருரை)  சென்னை வெண்முரசு வாசகர் வட்டம், புதுவை வெண்முரசு வாசகர் வட்டம் போன்றவை மிகத் தீவிரமாக வெண்முரசைப் படித்துக்கொண்டு அதை விவாதித்து புரிந்துகொள்ள முயல்பவர்களால் நிறைந்தவை.  அவர்கள் மட்டுமல்லாமல் வெண்முரசை  தினமும் விடாது வாசித்துக்கொண்டிருக்கும் பலரை நான் அறிவேன்.   என்னைப்போன்றோர் பலர் காலையில் கண்விழிப்பதே வெண்முரசில் தான்.  இதை ஜெயமோகன்.இன் தளத்தை படிப்பவர்கள் கணக்கைக் கண்டும் சரி பார்த்துக்கொள்ளலாம்.
   

ஆனால் மாறாக சுதாகர் என்பவர் எழுதி  வெண்முரசு விவாத தளத்தில் ஊக்கம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள பதிவு மிகவும் தவறான  கருத்தைக்கொண்டிருக்கிறது.  அவர் எப்படி இந்த கருத்தை அடைந்தார் எனத் தெரியவில்லை. எதாவது இணைய வம்புச் செய்தியின் மூலம்  இதை அவர் அடைந்திருக்கலாம்.  
    

மேலும் வெண்முரசு பற்றி எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. நமக்கு மிகவும் பிடித்த செயலைச் செய்வதற்கான சூழல் அமைவது ஒரு வரம். சிலசமயம் அது கிடைக்காமல் போய்விடுவது  வருத்தமளிக்கும் ஒன்று. பலர்  வெண்முரசு விவாதள் தளத்தில்  மிக அருமையாக எழுதிவருவதை படிக்கையில் என் வருத்தத்தைத் தேற்றிக்கொள்கிறேன். ஆனால் இப்படி எழுத இயலாமல் போனவர்கள் வெண்முரசு வாசிப்பை நிறுத்திவிட்டார்கள் என்று கருதுவது சரியானதல்ல.
  

தண்டபானி துரைவேல்