Tuesday, December 4, 2018

புனைவுத்தர்க்கம்

 
அன்புள்ள ஜெயமோகன் சார்,

பீஷ்மர் என்னும் வயோதிகர் களத்தில் அம்புபட்ட பின் எப்படி உயிரோடு இருப்பார் என்பதை குறித்து நீங்கள் எப்படி எழுத போகிறீர்கள் என்பதை வாசிக்க மிகவும் ஆவலாக இருந்தேன். ஏனென்றால் இதற்கு முன் வாசித்து மனதில் இருக்கும் மகாபாரத்தில் கூறப்பட்ட புறவய மீபுனைவுகளான துகில் உரியப்படும் திரௌபதிக்கு சேலை கிடைப்பது, திருதாஷ்டிரருக்கு சஞ்சயன் போர்களத்தை பற்றி கூறுவது, கர்ணனின் கவச குண்டலங்கள், என சிலவற்றை வெண்முரசில் அற்புதமான தர்கங்களோடு கடந்துவிட்டீர்கள். ஆனால் பீஷ்மனின் நிலை உயிர் குறித்தது..எங்கும்,எப்படியும் மரணம் காத்திருக்கும் என்பதை அறிந்த நகர மனதிற்கு.. எப்படி தர்க்கபூர்வமாய் நிருபிப்பீர்கள் என ஒரு ஆவல். ஆனால் அதை அசால்ட்டாக கடக்கும்போது உங்களின் புனைவு திறனின் மீது கொண்ட நேசத்தால் அழுதபடி சிரித்துக்கொண்டே வாசித்தேன்.

ஒரு கதையை யார் வேண்டும் என்றாலும் தொடங்கலாம் ஆனால் கதை இரண்டு வரி எழுதியதுமே முன்னால் வந்து நிற்பது தர்க்கம். அதை உடைக்காமல் அடுத்தவரி எழுதவே முடியாது என்னும்போது எத்தனை லட்சம் வரிகள் எழுதி தள்ளி இருக்கிறீர்கள். விமர்சகர்களுக்கும் வாசகர்களுக்கும் முதலில் தெரியும் பிழையே தர்க்கம் குறித்துதான். ஆனால் நீங்கள் எழுதும் கதைகளில் தர்க்க பிழை கூட கண்டுபிடிக்க முடியாமல் தான் கடுப்பில் உங்களை திட்டுகிறார்கள் போல.

சார் புனைவுக்குள் தர்க்கத்தை எப்படி அனைவரும் ஏற்று கொள்ளும்படியான சம்பவங்களை கொண்டு புறவய தெளிவுகளோடு அமைப்பது ,அதற்கு நமக்கு தேவையான கச்சா பொருட்களை எப்படி அடைவது, எப்படி தேடுவது என்பதை கொஞ்சம் கற்றுதரமுடியுமா? 

ஸ்டீபன் ராஜ்