Sunday, December 30, 2018

மதங்கநூல்




அன்பின் ஜெ,


நலம் விழைகிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும். இது கார்கடல் -1 (தோற்றுவாய்) பற்றியது. கடந்த ஐந்து நாட்களாக தயங்கி பின்,  இன்று அனுப்புகிறேன் 


"நீண்ட துதிக்கையும் துருத்தியென ஒலிக்கும் மூச்சும் கொண்டது உயர்ந்த வேழம். பொறுமையே அதன் இயல்பு. அரக்கர்குலத்து தெய்வங்களின் நகைப்புபோல நிரையாக அமைந்த பதினெட்டு அல்லது இருபது நகங்கள் கொண்டதும், குளிர்காலத்தில் மலையூற்றென மதம்பெருகுவதும், வலதுகொம்பு சற்றே நீண்டு உயர்ந்திருப்பதும், "


ஆனால் நாங்கள் படித்தது

 1. ஆசிய யானைகளுக்கு மொத்தம் 18 நகங்களே இருக்கும் ( முன்னங்கால்களில் 5+5; பின்னங்கால்களில் 4+4). எந்நிலையிலும் இருபது இருக்க வாய்ப்பில்லை. ஆப்பிரிக்க யானைகளுக்கு 14-16. 

2. வேறேதும் பிரச்சினை இல்லாத வரை இரு தந்தங்களும் சமநீளம் கொண்டதாகவே இருக்கும். 

சைதன்யாவிற்கு எங்கள் அன்பு வாழ்த்துகள். 

அன்புடன்
தங்கபாண்டியன்


அன்புள்ள தங்கபாண்டியன்

மேலே சொன்ன பகுதி மலையாள மதங்க சாஸ்திரநூல் ஒன்றிலிருந்து அப்படியே பிரதிசெய்யப்பட்டது. அக்னிபுராணத்தை ஒட்டி இந்த மதங்கநூல் எழுதப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே வரிகள் அக்னிபுராணத்தில் உள்ளன.

மகபாரதக்குறிப்பு என்பதனால் அதை அப்படியே கொடுத்தேன். நீங்கள் எழுதியபின் ஒரு யானைப்பாகனிடம் கேட்டுச் சொல்ல மின்னஞ்சலில் ஒரு நண்பரிடம் சொன்னேன். மிக அரிதாக இருபது நகங்கள் இருப்பதுண்டு என்றும் அதை அரசர்களுக்குரிய யானையாகக் கருதினார்கள் என்றும் யானையின் ஒரு தந்தம் எப்போதுமே கொஞ்சம் நீளமானதாகவே இருக்கும் என்றும் அந்த யானை வலப்பக்கப் பழக்கம் கொண்டது என்றால் வலத்த்ந்தம் சற்றே பெரிதாக இருக்கும் என்றும் சொல்கிறார். நவீன ஆவணங்கள் என்ன சொல்கின்றன என்று தெரியவில்லை. நீங்கள் சொல்வதே சரியாக இருக்கலாம்

ஜெ