அன்னையின் விரல்கள் யாழ்விறலியர்களுக்குரியவைபோல மிக மெலிதாக நீண்டிருந்தன. விழிகள் நீலமணிகள். அவள் இமைப்பீலிகளும் பெரியவை. அவள் ஆடை குளிர்ந்திருந்தது. மகள் பற்றிஎரிந்துகொண்டிருப்பவள் போலிருந்தாள். அவள் விரல்கள் நாகக்குழவிகள்போல. எரித்துளிகள் போன்ற கண்கள்.
இந்தவரிகளில் கங்கை அன்னைக்கும் மகளாகிய அம்பைக்கும் இடையேயான வேறுபாடு கவித்துவமாகச் சொல்லப்பட்டுள்ளது. அன்னை குளிர்ந்தவள். மெல்லிய விரல்களால் நீரலைகளில் யாழ்மீட்டுபவள். [நீரில் அவள் யாழ் மீட்டுவது அற்புதமான கற்பனை] மகள் தீயாலானவள். நீரில் எழுந்த நெருப்பு அவள்
இந்த வர்ணனை வேறொருவகையில் முன்னரே வந்திருக்கிறது. படகில் அம்பை அமர்ந்திருப்பதை நிருதன் பார்க்கிறான். அவள் அலைகளின்மேல் செல்லும் ஒர் அகல்விளக்கிலிருக்கும் சுடர் போலிருக்கிறாள். அகல் ஆடினாலும் சுடர் நிலைகுலையாமல் இருக்கிறது என நினைக்கிறான்
ஆரம்பம் முதலே அம்பை அனல் என்றே சொல்லப்பட்டிருக்கிறாள். முதற்கனல் அவள்தானே?
ராஜேஷ்