Monday, December 3, 2018

திசைதேர்வெள்ளம்




அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

தங்களின் ஆயிரக்கணக்கான வாசகர்களில் ஒரு வாசகன். ஒரு வருடம் முன்பு, நண்பன் ஒருவன் மூலம் அறிமுகமானது வெண்முரசு நாவல்.

தெரிந்த கதை, பலமுறை கேட்ட கதை, திரும்ப திரும்ப பார்த்தக் கதை, சலித்துப் போன கதை. இருப்பினும் வெண்முரசு படிக்கும் போது ஏற்படும் விறுவிறுப்புக்கு குறைவில்லை. வெண்முரசுக்கு முன், பொதுவாக அனைவராலும் விரும்பப்படும் கதாபாத்திரங்களே எனக்கும் பிடித்தமானவையாக இருந்தது. ஆனால் வெண்முரசுவிற்குப் பின் முற்றிலும் புதியதொரு எண்ணத்தை அடைந்தேன். மதயானைக் கூட்டமான கௌரவர்கள் மீது தனி ஈடுபாடு உருவானது. கௌரவர்களின் உண்டாட்டுக்கள், உப கௌரவர்கள் பற்றிய அத்தியாயங்கள் போன்றவற்றை திரும்ப திரும்ப படித்து மகிழ்ந்தேன்.

ஆட்சியின் மீது கொண்ட மோகத்தைக் காட்டிலும் தன் இளையவன் பாண்டுவிற்கு தன் இடத்தை விட்டுக் கொடுத்து என் மனத்தில் நீங்கா இடம் பிடித்தார் பெரிய வேழம் திருதராட்டிரர். "மூடா" என்ற வார்த்தை அன்பின் வெளிப்பாடாக உணர்ந்தேன்.

துரியோதனனை ஆசிரியர் மிகவும் சிறப்பித்த இடம் எதுவென்று என்னைக் கேட்டால், ருக்மியை தன் படையில் சேர்க்காத காரணத்தை உரைக்கும் தருணத்தை சொல்வேன்.

மகாபாரதத்தில் எனக்கிருந்த பல மாயத்திரைகள் தங்கள் எழுத்துக்களுக்குப் பின் விலகியது.

         1) கடவுளை      எதிர்த்து துரியனால் எவ்வாறு வெல்ல இயலும் என்ற எண்ணம் கலைந்தது. இளைய யாதவனை கடவுளாகக் காட்டாமல், மனிதனாக படைத்து வெல்லமுடியாதவனாக உணர்த்தியது சிறப்பு.

      2) திரௌபதி ஐவரை ஏற்பது. அக்கால அக்குடியின் முறைமையை சொல்லி எவ்வித முகச்சுளிப்பும் ஏற்படாமலும் சொன்ன விதம் மேலும் சிறப்பு.
  
ஒரு நேர்க்காணலில் தாங்கள், வெண்முரசில் அனைத்து கதாப்பாத்திரங்களும் பிடிக்கும் என்றாலும் பீஷ்மர் மீது தனி ஈடுபாடு என்று சொல்லி இருந்தீர்கள். நான் உணர்ந்த வரை கர்ணன் மீதும் ஒரு பிடித்தம் இருந்திருக்க வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் இளைய யாதவரைப் போல கர்ணனையும் சிறப்பிக்க மறக்கவில்லை. பலம் வாய்ந்த  கதாபாத்திரங்களான பீஷ்மர்,அர்ஜுனன், பீமன், துரியன்,ஜராசந்தன், கடோதகஜன், அரவான், பூரிசிரவஸ் போன்றவர்கள் வாயிலாகவே இளைய யாதவனோடு கர்ணனையும் இணைத்து வெல்லற்கரியவன் என்று குறிப்பிட்டு உள்ளிர்கள்.

இதுவரை நான் படித்ததில் நான் உணர்ந்த ஒரே ஒரு முரண், இளையவர்களான விருஷசேனன் மற்றும் பிரதிவிந்தியன் இவர்களில் யார் மூத்தவன் என்பதே. லக்ஷ்மணனுக்கு  பிரதிவிந்தியன் முன்னவன் என்பதில் ஐயமில்லை. "வெய்யோன்" பாகத்தில் அங்க நாட்டரசியர் இருவரும் கருவுற்ற செய்தியோடு, கௌரவ இளையோன் சுஜாதானோடு அஸ்தினாபுரம் செல்வான் கர்ணன். அங்கு உப கௌரவர் கூட்டத்தை கண்டு கர்ணன் மகிழ்வது, லக்ஷ்மணனை அடையாளம் கொள்வது என எழுதி இருப்பீர்கள். ஆனால் "எழுதழல்" பாகத்தில், தங்கள் எழுத்து பிரதிவிந்தியனுக்கும், லக்ஷ்மணனுக்கும் மூத்தவன் விருஷசேனன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கும்

தங்கள் நடையில் மகாபாரதத்தை படித்து வியக்கிறேன் தினமும். தங்கள் பணி மென்மேலும் சிறக்க கடவுளை வேண்டிகோள்கிறேன்.

சிரம் தாழ்ந்த வணக்கங்களுடன் தங்கள் அன்புள்ள வாசகன்

வெ.மோகன்ராஜ்

அன்புள்ள மோகன்ராஜ்
வயதுகளை பொதுவாகக் கவனித்துத்தான் போடுவேன். அறியாமல் முரண்பாடு வந்திருக்கலாம், பார்க்கிறேன். மகாபாரதத்தில் இவர்களின் வயதுகள் சொல்லப்படுவதில்லை

ஜெ