அன்புள்ள ஜெ
இருளின் வடிவாக தோன்றும் அம்பை பீஷ்மரை அழிக்கும் பொருட்டும்,அதை தடுக்கும் பொருட்டு ஒளியின் வடிவாக கங்கையும் பொருதும் போரில் தொடங்கும் நூல் போரின் இழப்பால் வஞ்சம் தீர்ந்த பின் எஞ்சும் பயனின்மையினால் ஒருவருக்கொருவர் ஆறுதலாக மாறும் நிலையில் முடிவுறுகிறது.கொள்கையின் பொருட்டு வாழ்ந்து அன்னையின் ஒளி பெற்ற பீஷ்மர் ஒளியை தொடரும் இருள் போல அம்பை உருவாக காரணமாகிறார்.கொள்கை எனும் அன்னையின் கொடைகளான நற் பண்புகளான சகோதர்களுடன் களமிறங்கும் ஒருவன் தான் உருவாக்கிய செயலின் விளைவால் அனைத்தையும் இழக்கும் மானுட துன்பியல் நாடகம் இது.
வசுக்களில் ஒருவரான பீஷ்மரைக் காக்கும் பொருட்டு தன் மைந்தரான எழுவரும் உடனிருக்க கங்கை ஆணையிடுகிறாள்.இங்கு நான் தரன், அனிலன்,ஆபன்,, அனலன், பிரபாசன் முதலிய ஐந்து வசுக்களையும் பஞ்ச பூதம் உறையும் உடலாகவும், மீதமுள்ள துருவன்,, சோமன்,பிரதியூசன் ஆகிய வசுக்களை மனம்,அறிவு ,ஞானம்ஆகவும் எண்ணிக்கொண்டு பார்க்கும் போது போரின் இழப்பால் உடலையும் உணர்வுகளையும் ஒன்றொன்றாக இழந்த பீஷ்மர் இறுதியில் தன் விடுதலையை எதிர்பார்பதாக எண்ணுகிறேன்.எட்டு வசுக்களும் பீஷ்மரை விட்டு விலகும் காட்சிகளைப்பார்க்கும் போது ஓளியின் வடிவாக இங்கிருக்கும் வசுக்கள் தங்களுக்கு முற்றிலும் இணையான எதிர் நபர்களை காணும் போது பீஷ்மர் மனம் சோர அவரை விட்டு விலகுகின்றனர்.
1.தரன்-புவி
பீமன் இரண்டாம் நாள் போரில் இளைய கௌரவர்களை கொல்லும்போது பீஷ்மர் அவனை கொல்லாமல் விட்டு செல்ல நாணி ஆணவம் கொள்ள விட்டுச் செல்லும் முதல் வசு.அடுத்த அத்தியாயத்தில் “அனைத்தையும் பொறுத்துக்கொள்பவன் என்பதனால் எனக்கு இப்பெயர். என் அன்னை புவிமங்கை. எழுவதனைத்தும் திரும்பிச்செல்லும் மடி அவள். சொல் பொறுப்பவள். செயல்கள் அனைத்தையும் ஏற்பவள்” என்றான் தரன்.
பீஷ்மர் விழியிமைகள் சரிய கேட்டுக்கொண்டிருந்தார். “நான் மானுடரின் எண்ணங்கள் ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ளவும் அவர்களின் துயர்களை ஆற்றவும் எப்போதும் உடனிருப்பவன். எங்கெல்லாம் உளம்விரிந்து மானுடர் துயரையும் சிறுமையையும் வலியையும் பொறுத்துக்கொள்கிறார்களோ அங்கெல்லாம் நான் உடனிருப்பேன்” என்றான். பீஷ்மர் “இன்று நான் பொறுத்துக்கொண்டதற்கு சினந்து நீங்கள் கிளம்புகிறீர்கள், மூத்தவரே” என்றார். “இல்லை” என்று தரன் புன்னகைத்தான். “பொறுத்துக்கொண்ட மறுகணமே அதன்பொருட்டு நீ நாணினாய். உன் ஆணவம் சினந்தெழுந்து மறுமுறை பொறுப்பதில்லை என்று முடிவு செய்தது. உன்னைவிட்டு அகலவேண்டுமென்ற முடிவை நான் எடுத்தது அப்போதுதான்” என்றான்
இங்கு பீமன் தரனை ஒத்தவன் தான்.அனைத்தையும் தாங்கி பொறுமையாக இருக்கும் அதே நேரம் அழிக்கும் போது எவ்வித வேறுபாட்டையும் கணக்கில் கொள்ளாமல் அழிக்கும் பூமிக்கு ஒப்பானவன்.தனக்கு இணையானவனை கண்டதும் விலகுகிறான்.
2.துருவன் - துருவ நட்சத்திரம்
இரண்டாம் வசுவான துருவன் எச்சூழலிலும் நிலை பெயராது நிற்பவன். படைக்கலம் பயின்றோர் எந்நேரமும் அவனைநோக்கியே அறத்தை உணர்வர். தன் இயல்பெனும் ஞானத்தை அடைய நிலை தவறாக்கூடாத மனம் போன்றவன்.அவன் பீஷ்மரிடம் இருந்து விலகுவது அபிமன்யுவிடம் போர்புரிந்த போது அவர் தன் போர் குறித்தான அறத்தின் நிலைமாறி அதே உணர்வுடன் அர்ஜுனனுடன் போர்புரிய அதைகண்ட இளைய யாதவர் படையாழியுடன் எழ யாதவனை நிலை தடுமாற வைத்தோம் என்று எண்ணும்போது விலகுபவன்.எதிர்த்து படையாழியுடன் எழுந்தாலும் எந்நேரமும் நிலை தவறாத நிலைத்த சிந்தையுடையவன்தான் இளைய யாதவன்.
3. சோமன் - சந்திரன்
மூன்றாமவனான சந்திரன் களியாட்டன். ஞானியரில் ஆகாச கங்கையாய் பொழியும் அமிர்த தாரையின் வடிவன்.படைவீரனில் வெற்றி தோல்வி விளைவின் நீங்கியவனில் சிந்தனை அழிவதன் அமிர்தத்தில் வெளிப்படும் களியாட்டன்.எவ்வித விளைவின் பயனைப்பற்றியும் கவலை இலாது போர் புரியும் பால்ஹிகரை கண்டவுடன் விலகுபவன்.
4.அனலன் –நெருப்பு
நான்காமவனான அனலன் எரிபவன் தன்னை முழுமையாக எரித்து தான் அழிபவன்.நீர் ஊற்றி அணைக்கும் போது அதை மீறி எரிந்தும்,'வளர்,வளர்'என நெய்யிடும் போது அணையும் கணிக்க இயலா ஊழின் இயல்பினை உடையவன்.அனலன் விலகும் தருணம் சாத்யகி தன் மகன்களை இழந்த சூழலில் போர் புரிந்தவாறே பீஷ்மரிடம் ஆயுதத்தை விட்டு தலைகொடுக்க நிற்க்கும் போது.சாத்யகி பெற்று இருக்கும் நெருப்பு நரகத்தீயை விட பெருந்தீயான தன் சந்ததி அனைத்தும் இழந்து நிற்க்கும் நிலை.அதைப் பெற்று ,அன்றைய போரில் எரிவதும் தணிவதுமாய் போர் புரியும் சாத்யகி முற்றிலும் எரிந்து அணைய பீஷ்மரிடம் போர்புரிந்து கொண்டிருக்கும் போதே ஆயுதத்தை கைவிட, எரிய வேண்டிய தருணத்தில் அணைவது போன்ற இயல்பினால் தனக்கு இணையானவனை காண விலகுகிறான்.
5.ஆபன்-நீர்
எப்போதும் சமநிலை அடையும் வடிவமும் அதனாலேயே அலைவுகளும் கூடியவன்.புறத்தின் சிறு அசைவையும் பெரு அலைவாக மாற்றும் குணம் உடையோன்.கீழ்மையை பொறுத்து அதை மன்னிக்கும் தெய்வமானவன். பீஷ்மரிடமிருந்து வெளி யேறுவது பிரஹத்பலனை காணும்போது.சத்திரிய அரசர்கள் முதலில் போரின் நெறி என கூறப்பட்ட இணையான எதிரியுடன் தான் போராட வேண்டும் என்றதை மீறி பீஷ்மர் எதிரிகளின் இளவரசர்களை அழித்ததனால் தான் தங்கள் இளவரசர்களை பாண்டவர்களின் தரப்பு அழிக்கிறது என எண்ணுகின்றனர்.புகழுக்காகவும் நிலத்துக்காகவும் போரிடும் அவர்களுக்கு கடோத்கஜன் போன்ற அரக்கன் கையால் இளவரசர் இறப்பதால் புகழும் இன்றி இப்பெரும் போர் தங்களை முற்றிலும் அழித்து விடும் என்பதால் சமாதனம் ஏற்படட்டும் என்றும் எண்ணுகின்றனர்.இதை விவாதிக்கும் போதும் , அனைவரும் எடுக்கும் முடிவின் போதும் போரில் பீஷ்மரை தன் இணையரசர்களுடன் கைவிடும் போதும் பிரஹத்பலனின் நீர்மை வெளிப்படுகிறது.தன்னை சார்ந்தவரின் கீழ்மையை பொறுக்காமல் பீஷ்மர் பிரஹத்பலனை கொல்ல வில் தூக்க அவரை விட்டு ஆபன் விலகுகிறான்.
6. அனிலன் – காற்று
பேராற்றலும், நிலையில்லாமையும்,மென்மையும் ,வலிமையும் ,குன்றா உறுதியும் உள்ள காற்றின் தேவன்.குதிரை நில்லாமையினால் ,விரைவினால்,ஒடும் போதே குணமடையும் தன்மையினால் காற்றென்றே ஆனது.அடியவனிடம் பெருங்கருணையும்,எதிரிகளின் இரத்தம் குடிக்கும் பெரும் கோபமும் கொண்ட அனிலை பாஞ்சாலத்தை சார்ந்தது எனும்போது முதற் கனலில் தன் நிறைகாக்க அறைகூவும் அம்பையின் அடி பணிந்த பாஞ்சாலனை வாழ்த்தி அவன் கோட்டையில் அம்பை அணிவித்த அவளின் கோப வடிவமான செங்காந்தள் மாலை அங்கிருந்து அனிலையின் வடிவில் திரும்பி வந்து அவளின் சபதத்தை நிறைவேற்ற வந்தது போல் தோன்றுகிறது.அனிலை பீமனைக் காத்து துரியோதனர்களை எதிர்த்து பீஷ்மரை நோக்கி அறைகூவும் போது பீஷ்மரிடம் இருந்து அனிலன் விலகுகிறான்.
7. பிரத்யூடன்-கதிரோன்
எட்டு வசுக்களில் என்னை சோதித்த வசு இவன்தான்.பிரத்யூடன் விலகும் அத்தியாயம் தான் திருநெல்வேலி கட்டண உரை நாளின் போது வந்திருந்ததால் வந்தது யார் என்று எனக்கும் கிருஷ்ணனுக்கும் விவாதம் நடந்தது.கிரேக்க மன்மதன் வடிவம் என கிருஷ்ணனும் இல்லை சிகண்டி என நானும் பேசினோம்.அடுத்த நாள் உங்களிடம் பேருந்து பயணத்தில் கேட்ட போதுதான் நான் செய்த தவறு புரிந்தது.சிகண்டியின் பகுதி பின்னால்தான் வரும் என்றும் யாரைக் குறிப்பிடுகிறது என்பதை வாசகன் தான் கண்டடைய வேண்டும் எனவும் கூறினீர்கள்.ஐம்படைத்தாலியுடன் கிண்கிணி நாதத்துடன் வந்த குழந்தை எனும் போது ஐம்படைத்தாலியை ஆண் தன்மை எனவும் கிண்கிணி நாதத்தை பெண்தன்மை எனவும் தவறாக புரிந்ததால் சிகண்டி என எண்ணி விட்டேன்.கிண்கிணி இருபாலருக்கும் பொதுவானது என்பதை மறந்ததால் வந்த பிழை.இதைப்பற்றி கடலூர் சீனுவிடம் விவாதிக்கும் போது ஊழ் வந்து எதிர்நிற்க கடக்க வேண்டிய தந்தைமை என சொல்ல என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.இதற்கு நான் திருப்தி கொள்ளும் அளவுக்கான தர்க்க ரீதியான பதிலை தேடினேன்.ஐம்படைத்தாலியுடன் போருக்கு சென்றவர்கள் எனக்கு தெரிந்து முருகனும்,பாண்டியனான தலையானங்கானத்து செரு வென்ற நெடுங்செழியனும் . அவர்கள் இல்லையெனில் யார் எனும் போது நினைவுக்கு வந்தவன் சகாதேவன் மகனான சுகோத்ரன்.ஐம்படைத்தாலியை அகற்றிய பின் தான் போர்பயிற்சி ஆரம்பிக்கும்.சுகோத்ரன் போர் பயிற்சி அற்றவன்.
குருதிச்சாரலில்"விஜயை பொருளற்ற வினாவாக “சுகோத்ரன் எப்போது வருவதாகச் சொல்லப்பட்டது?” என்றாள். “போரில் அவரை ஈடுபடுத்தும் எண்ணம் இவர்களுக்குண்டா என்று தெரியவில்லை. அவருக்கு படைக்கலப் பயிற்சியே இல்லை என்றார்கள்” என்றாள் அபயை. “ஆம், அந்தணன்போலவே இருந்தான் சென்றமுறை பார்க்கையிலும். நீ படைக்கலமே பயிலவில்லையா என்றேன். உள்ளத்தில் ஒரு பகுதியை அதற்கெனப் பகுக்கவேண்டாம் என்றார் ஆசிரியர் என்றான்.” அபயை சிரித்து “அவ்வண்ணமென்றால் காமத்திற்கும் பகுக்கமாட்டார் என நினைக்கிறேன்” என்பதிலிருந்து அது சுகோத்ரன் என்ற முடிவுக்கு வந்தேன்.இதைப்பலப்படுத்த குரு வம்சத்தின் சாபமும் துணை வந்தது.தேவாபி பால்ஹிகன் காலத்திலிருந்தே பலமில்லாத சகோதரனை தூக்கிக் கொண்டே செல்லும் பலம் வாய்ந்த சகோதரர்கள் குரு வம்சத்தின் சாபம்.தேவாபி-பால்ஹிகன்,விசித்ர வீரியன்-பீஷ்மர்,பாண்டு-திருதராஷ்டிரர்,தர்மன்-பீமன் வழியில் இளைய குரு வம்சத்தில் பலமென்பதையே அறியாதவன், சகோதரர்களால் காக்கப்படுபவன் சுகோத்ரன் . பீஷ்மன் தன் முழு விருப்புடன் உயிர் கொடுக்க தயாராவது தன் சகோதரனான விசித்ர வீரியனுக்கே.கத்தியை பிடிக்கக் கூட தெரியாமல் அம்பையின் பொருட்டு போரிட வந்தவனுக்கு தன் தலை தர தயாராகிறார்
பீஷ்மர்.திருதராஷ்டிரனோ,பால்ஹிகரோ,பாலஹஸ்க முனிவரோ யாருடனும் தோல்வியடையாமல் போர் புரியும் பீஷ்மனால் விசித்ர வீரியன் அவர் தலை கொள்ளும்போது கூட சத்ரிய தர்மத்திற்காக சிறு காயப்படுத்துவற்கு மட்டும் தான் முடியும்.ஏனென்றால் பீஷ்மர் விசித்ர வீரியனை தூக்கி சுமக்கும் சகோதரன். ஆயுதத்தை பிடிக்கத்தெரியாமல் வரும் சுகோத்ரனை பார்த்தால் பீஷ்மருக்கு நினைவுக்கு வருவது விசித்ர வீரியன் தான்.அவனை எதிர்க்க பீஷ்மரால் முடியாது வில் தாழ்த்தும் போது பிரதியூடன் விலகுகிறான்.பிரதியூடன் கதிரோன் என்பதால் எதிரே இருக்கும் சமமான எதிரியான ஞானத்தின் பொருட்டு அனைத்தையும் நீக்கிய சுகோத்ரனால் விலகுகிறான்.
8.பிரபாசன் –வைகறை
சிகண்டியால் விலகும் கடைசி வசு.பாவத்துக்கு தண்டனையும்,புண்ணியத்துக்கு பரிசும்தருபவன் எங்கும் பரந்த ,எதனாலாலும் அளக்க இயலா வானின் விரிவை கொண்டவன் எதிர்கொள்வது இருளின்,பாதளத்தின் ஆழத்தை கொண்ட சிகண்டியை.பீஷ்மராக பிறந்த வசு என்பதால் தன் தவறுக்கு தண்டனை பெற வந்து எல்லாம் இருந்தும் எதையும் அடையாமல் போகின்றவன் உருவாக்குவது தன்னைப்போன்ற ஆனால் இருளின் வாழுபவனை,அன்னையின் மாண்பைக்காக்க இவ்வுலகில் இழிவும் வஞ்சத்தின் பொருட்டு வாழும் நரகமும், அவ்வுலகில் நல்வாழ்வையும் இழந்து எச்சுகமும் அடையாதவனை.தந்தையரைப்போல் மகன் எனும் போது பீஷ்மரின் காமவிலக்கம் எனும் பெருநெறி நிற்றலால் விளைந்த மகன் வஞ்சம் எனும் பெருநெறியில் அவரேப்போலவே நின்று மற்றவைகளிலும் அவ்வாறே இருந்து பீஷ்மரைக் கொல்ல காரணமான மற்றொரு பீஷ்மனாகிறான்.விண்ணின் விரிவு என்றும் விலக எண்ணும் ஆனால் விலகவே முடியாத தன் மறுபாதியாகிய பாதாளத்தின் ஆழத்தைக் கண்டு திகைக்கும் போது பிரதியூடன் விலகுகிறான்.
தன் உள்ளத்தில் தூக்கி கொண்டிருக்கும் தம்பிக்காக பெண்ணை கவர்ந்து வந்த பீஷ்மர் அம்பையின் மாறுதலால், தான் கொண்ட நெறியினால் அவளை மணக்க முடியாது என மறுக்க ஏற்படும் வஞ்சத்து மகன் தான் சிகண்டி.'மறுப்போ விருப்போ எதுவும் ஒன்றே ; அதன் விளைவும் ஒன்றே' எனும் ஊழின் பெருநடனம் இந்த நூல்.
அன்னையும் மனைவியும் கொண்ட போரில் அலைக்கப்படும் ஆண் அனைத்தையும் விடுத்து சுதந்திரத்தை தேட அவர்கள் சமதானமாகி இருபுறமும் அழுது புலம்புகின்றனர். இந்நூலில் என்னைக்கவர்ந்தது வாழாத தன் சகோதரர்களின் ஆற்றலை கொள்பவன் பீஷ்மன் எனும் கருத்து.முன்னரே தன் சகோதரர்களை சந்திக்கும் இடத்தில் இடத்தில் வாழாத எங்களின் வாழும் வடிவம் நீ அதனால் எங்களின் சுமையையும் நீதான் தாங்க வேண்டும் என்று வந்த போது திறக்காத எண்ணம் இப்போது திறந்ததும் ஏற்பட்ட விரிவை என்னால் தாங்கவே முடியவில்லை. பிறந்தவுடனேயே இறந்ததால் அண்ணனை இழந்தவன் நான்.மேன்மையும் கீழ்மையும் இணைந்தவனாகவே இருக்கும் எனக்கு அம்மேன்மை என் குணமில்லை என்பதும் தெரியும்.வாழாத அவனின் மேன்மை அது என்று இப்போது தோன்றுகிறது.அவன் வாழ்வையும் வாழ்வதால்தான் இந்த அலைக்கழிப்பு எனும் போது மனம் சற்றே நிம்மதியடைகிறது.மகாபாரதத்தில் பீஷ்மரை போன்றே சகோதரர்களை இழந்தவன் கிருஷ்னண். ஏழு சகோதரர்களை இழந்து அவர்களுக்காக தான் ஒருவன் மட்டுமே வாழ வேண்டும் எனும் போது எட்டு மனைவிகளும் துவாரகை போன்ற அரசும் ஒருபோதும் போதுமானதல்ல.ஒட்டு மொத்த பிரபஞ்சமும் தனக்குரியது எனும் ஞானம் தான் நிறைவை அளிக்கும்.அந்நிலை அடைந்ததால் தான் கிருஷ்ணனால் நிலை தவறாதவனாக இருக்க முடிகிறது.ஏழு சகோதரர்களின் ஆற்றலை கொள்பவன் தனக்கு விடுதலையின் வழியை தன்னைப் போன்றவனிடம் ஆனால் நிலை தவறாதவனிடம்தான் கேட்க முடியும்.கிருஷ்ண பீஷ்ம சந்திப்பை இவ்வாறு புரிந்து கொள்கிறேன்.நாவலின் மற்றவர்களை பற்றி எழுதினால் திசைமாற வாய்ப்புள்ளது என எண்ணி மைய நாயகனை மட்டும் எழுதி உள்ளேன். இந்நூலின் மூலமாக நான் அடைந்த புரிதலுக்காக உங்களுக்கு என் நன்றிகள் .
இப்படிக்கு
அந்தியூர் மணி
அந்தியூர் மணி