அன்புநிறை ஜெ,
இன்றைய பகுதியை வாசித்ததும், பார்திவப் பரமாணவில் உயிரென கருவில் சுஜயன் கொண்ட வினாவென்ன?; அவன் அறிந்த விடையென்ன எனக் கேள்வி எழுந்தது.
சுஜயன் சிற்றகவையில் அச்சம் மிகுந்தவன், கனவுகளால் அலைக்கழிக்கப்பட்டவன். தன் அச்சத்திலிருந்து மீட்சி தரும் குருவென அர்ஜுனனை வரித்துக்கொண்டவன். எனில் மாவீரர்கள் அனைவரும் தங்கள் உள்ளுறையும் பேரச்சம் ஒன்றின் ஒளி வடிவுதானே, அவ்விருளிலிருந்து விடுபடத்தானே பெருஞ்செயலில் ஈடுபடுகிறார்கள்! சுஜயனும் அதன் வழியே சென்று கௌரவர் நிரையிலும் ஓர் வில் கற்ற பெருவீரனாகிறான்.
எனினும் இறையென, குருவென, தந்தையெனத் தான் வகுத்துக் கொண்ட இளைய பாண்டவன் தடுமாறுவதும், போர் தொடங்கிய நாள் முதல் பீஷ்மரை எதிர்கொள்ளத் தயங்குவதும் அவனுள் ஐயங்களை எழுப்பியிருக்கும். தோல்வியற்ற பெருவீரன் என்பதும், வாழ்நாள் பயிற்சி என்பதும், பொருளற்றதுதானா, தன் உயிர் குடித்த அம்புக்குரிய பார்த்தனுக்கும் கடக்க இயலாத இருள் வெளி இருக்கிறதா என அவன் அலைவுற்றிருப்பான்.
பீஷ்மருக்கும் பார்த்தனுக்குமான இறுதிப்போரில் கைகள் பதற அர்ஜுனன் தயங்கியபோது அருகிருந்த சுஜயனும் தவித்திருப்பான். தன் உளநடுக்கம் கடந்து இறை ஆணையென இளைய யாதவர் சொல் பணிந்து அர்ஜுனன் தன் முதல் அம்பை எய்ததும் தனக்கான விடையை சுஜயன் அடைகிறான்.
அம்பு அதற்குரிய கைகளில் எழுந்து முழுதமைகையிலேயே உரிய இலக்கை அடைகிறது. வீரம் தனை முழுதாளும் தலைவனுக்கென எழும்போது.
மிக்க அன்புடன்,
சுபா