Saturday, December 15, 2018

மேலாடை



ஐயா, 

வான்மீன்கள் போல உங்கள் பல  வாசகமீன்களில் ஒரு துளி நான். வெண்முரசு நடைபெறும் காலம் 5ம் நூற்றாண்டு எனக் கொள்கிறேன். மகாபாரதம் அப்போது நடந்ததாகவே கூறுகிறார்கள். 



முதற்கனலில் முதல் பகுதியிலேயே மானசாதேவி வருகிறாள். ஓவியர் சண்முகவேல் அவளை கச்சையுடன் வரைந்துள்ளார். வட இந்திய சமூகத்தில் 5ம் நூற்றாண்டு வாக்கிலேயே கச்சையணியும் வழக்கம் வந்துவிட்டதா? இலங்கை மன்னர்கள் மக்களை வரையும் பிரசனா பெண்களை மேலாடையின்றி வரைகிறார். நிறைய பண்டைய ஓவியங்களும் அவ்வாறே மேலாடையின்றி, கச்சையின்றி உள்ளன. ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்புதான் இந்திய பெண்களுக்கு மேலாடை அணிவது வழக்கத்திற்கு வந்தது என்கிறார்கள். 

ஓவியங்களிலும், எழுத்துகளிலும் அந்த காலக்கட்டத்தின் ஆடையலங்காரமும் முக்கியமானதன்றோ? 

- ஈஸ்வர மூர்த்தி

அன்புள்ள ஈஸ்வர மூர்த்தி,

பழங்காலத்தில் பெண்கள் மேலாடை அணிந்திருக்கவில்லை என்பது சில ஆய்வாளர்களால் சொல்லப்படுவது. தமிழக வரலாற்றை ஆய்வுசெய்த வெள்ளையர் அப்படி எழுதியிருக்கிறார்கள். ஆனால் கச்சு, வம்பு என பெண்கள் அணியும் மேலாடைக்கு மட்டுமான பல பெயர்கள் நம் தொல்மரபில் உள்ளன

மகாபாரதத்தில் பல இடங்களில் பெண்களின் மேலாடை பற்றிய குறிப்புகள் உள்ளன. உத்தரீயம் என்னும் சொல் மேலாடைக்குப் பொதுவானது. அந்தரீயம் கீழாடை. கண்ணீரில் மார்புகளின்மேல் ஆடை நனைந்தது பற்றியும் மேலாடை விலகியது பற்றியும் பல குறிப்புகள் உள்ளன

மேலாடை அனைவரும் அணிந்திருக்கவில்லை என்று வேண்டுமென்றால் கொள்ளலாம். ஆனால் அதற்குக்கூட சான்றுகள் இல்லை. 

ஜெ