அன்புள்ள ஜெயமோகன் சார்,
வெண்முரசை திரும்ப திரும்ப படிப்பதற்காக நான் கையாளும் ஒரு வழி ஒவ்வொரு நூலிலும் ஒரு கதையை படிப்பது என வகுத்துகொண்டது.அதிலிருத்து முன்னோ பின்னோ சென்று படிப்பது.
முதற்கனலுக்கு பீஷ்மர்-அம்பை கதை [எவ்வளவு பெரிய ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பெண்ணின்மீதோ ஆணின் உடம்பின் மீதோ நேசமும் பாசமும் காமமும் வருகிறது. ஆனால் அவர்கள் அதை சந்திக்கும் புள்ளிக்கு கொண்டுசெல்லும்போது அங்கு அகங்காரமோ நெறிகளோ எழுவது அவர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையை அழிக்க கூடியது. பீஷ்மனின் காமநோன்பு இன்னொரு பெண்ணின் காமத்தையும் வாழ்வையும் அழித்தது. காமம் மறுக்கபட்ட ஆண் மட்டும் அல்ல பெண்ணும் கர்ப்பப்பை நிறையாமலே பேயாக மாறுவாள். ]
மழைப்பாடலுக்கு குந்தி-கம்சன்-கர்ணன் [ஒவ்வொரு குலத்திற்கும் இனத்திற்கும் ஒரு பண்பாடு,கலாச்சாரம் இருக்கிறது. ஆனால் ஒரு குல,இனத்தில் இருந்து வேறொன்றுக்கு உறவாய் சென்றவர்களை சுதந்திரமாக இருக்க விடாமல் தங்களின் கருத்துகளை, பண்பாடுகளை அள்ளி திணித்தால் அந்த உறவு சென்ற இனத்துக்கு அழிவையே கொண்டு வர நினைக்கும்.ஏனென்றால் தனிமனிதராக யாருக்கும் எந்த அளவுகோலும் இல்லை. இங்கு குழந்தைக்கு தாயான ஒரு பெண் தனது கணவனுக்கும் தாயாகிறாள்.அவனின் விருப்பபடி வேறு ஆட்களிடம் குழந்தை பேறுகளை வாங்கிகொன்டாலும் தான் விரும்பிய ஒருவன் மூலம் தனக்கு ஒரு குழந்தை உண்டு என்பதை அவன் இறக்கும் வரை அவளால் கூறவே முடியவில்லை. என்ன ஒரு இக்கட்டு?.ஆனாலும் அவனுக்காகதான் தனது மகன்களுக்கு அனைத்தையும் செய்வதாக சொல்லிகொள்கிறாள்.ஆனால் அது அவளின் வஞ்சம் தான்.முக்கியமாக இன்னொரு இனத்திற்கு ராணியாக செல்லவேண்டும் என்று அவள்தான் முடிவெடுத்து தனது காதலில் விளைந்த ஒரு குழந்தையை உதறி செல்கிறாள். கர்ப்பபை நிறைந்த ஒரு பெண் அந்த கனியை ருசிக்காவிட்டால் பேயாக மாறுவாள்]
வண்ணக்கடலுக்கு துரோணரிடம் அர்ஜுனன்- அஸ்வத்தாமன் கல்வி பயில்வது, ஒருவன் உண்மையான கல்வி என்றால் என்ன என்பதற்கு இதை படித்தால் போதும். பிறகு ஒட்டு மொத்த வித்தையையும் தனது துறையில் காட்டலாம். இதில் கல்வி பயிலும் மாணவனாகிய அர்ஜுனன் காண்டீபத்தில் ஆசிரியராக மாறி சித்ராங்கதனுக்கு ஆற்றின்கரையில் அமர்ந்து நாரைகளை கொண்டு கல்வி சொல்லிகொடுப்பதையும் கணக்கில் கொண்டால் கல்வியின் வீச்சு புரியும்.[ இது ஒரு ஆசிரியன் அல்லது ஒரு ஆண் தனது கர்ப்பத்தின் கனியின் மீது வைக்கும் பற்று மாணவனுக்கும் மகனுக்கும் மோதலை வஞ்சத்தை உண்டாக்குகிறது. மகனின் முடிவுக்கும் காரணமாய் அமைகிறது. ஆசிரியன் யார்மீதோ கொண்ட தனது தனிப்பட்ட வஞ்சத்தை தனது மகன் மீது இறக்காமல் தனது மாணவன் மீது இறக்கிவைப்பது எவ்வளவு பெரிய விளைவுகளை உண்டாக்கும் என்பதும் முக்கியமான அம்சம்]
மாமலருக்கு வைத்திருக்கும் கதை கசன்-தேவயானி- யயாதியின் கதை.முதற்கனலில் தண்டகர் என்ற நாகசூதன் கரியநிற தைலத்துக்குள் தன்னை பார்க்க விரும்பும் பீஷ்மருக்கு யயாதியை காட்டுவார். மாமலரில் முண்டனாகி வந்த அனுமன் பீமனுக்கு ஒட்டுமொத்த கதையையும் கூறுவார். யயாதி-தேவயானி-சர்மிஷ்டை கதைகூறலுகுள்ளே ஒட்டுமொத்த மகாபாரதம் வேறொருவடிவில் சொல்லபட்டிருக்கும். [ ஈகோ கொண்ட ஒரு மாணவன்[சுக்ரர்]-ஆசிரியன்[பி ரகஸ்பதி] உறவில் ஆரம்பிக்கிறது. பிறகு தனது மாணவனிடம் தனது மகனை[கசனை] கல்வி கற்க அல்ல கல்வியை திருட அனுப்பும் ஒரு தந்தையினால்[பிரகஸ்பதி] நீள்கிறது.வண்ணகடலில் வந்த ஆசிரியர்[துரோணர்] தாழ்வு மனப்பான்மையினாலும் வஞ்சத்தாலும் மாணவனுக்கு கற்றுகொடுக்கும்போது இதில் அன்பில் கனிந்த ஆசிரியர் வஞ்சமாய் வந்தவனுக்கு தனது கடைசி வித்தையை கற்றுகொடுக்க அவரது கர்ப்பத்தின் கனி பாதிக்க படுகிறது. அது வஞ்சம் கொண்டு தனது வாழ்கையை ஒரு நேர்கோட்டில் வாழ்ந்து தான் தொடங்கிய இடமான வனத்தில் குடிலுக்குள்ளே போய் முடங்கிகொள்கிறது. கறை படிந்த மனங்களினாலும் கனிந்த அன்பினாலும் சுழல்கிறது வெண்முரசு.
ஸ்டீபன் ராஜ்