Tuesday, May 5, 2015

திருதராஷ்ட்ரன் என்னும் மானுடன்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

கர்ணனும், துரியோதனனும் திரௌபதிக்கு உடைவாள் ஏந்தி அகம்படி செய்வவேண்டும் என்று திருதராஸ்டிரன் கட்டளை இடுகின்றார். இதனை மன்னனாக செய்கின்றாரா? மனிதனாக செய்கின்றாரா? கட்டளை இடுவது மன்னன். கட்டளைக்குள் இருப்பவன் எளிய அன்புக்கொண்ட மனிதன். நேரடியாகப் பார்க்கும்போது திரௌபதிமீது கர்ணனுக்கும், துரியனுக்கும் இருக்கும் ஈர்ப்பை குறைக்கவும், வாழ்க்கையின் யதார்த்தத்தை கொண்டுவருவதற்காகவும் செய்ததுபோல்தான் உள்ளது. திருதராஸ்டிரன் அகம் அதைதான் நினைத்து செய்ததா?

இது திரௌபதிக்காகவோ நாட்டுக்காகவோ கர்ணன், துரியனுக்காகவோ செய்யப்பட்டதாக தெரியவில்லை. குந்திக்காக செய்யப்பட்டதாகவே தெரிகின்றது. தம்பியை இழந்த தம்பி மனைவிக்காக மூத்தவன் செய்வது.

வாரணாவத தீ விபத்திற்கு பிறகு பாண்டவர்கள் அஸ்தினபுரியை அடையாமல் விலகி சென்றதற்கு முழு காணரம் குந்தி. குந்தி அப்படி செய்ததற்கு காரணம் திருதராஸ்டிரன் மீது இருந்த வெறுப்பு. குட்டிக்குலைத்து நாய் தலையில் வைக்கும் என்ற பழமொழி. சகுனி செய்த சதிக்கு திருதராஸ்டிரன் பொறுப்பு. துரியனையும், துச்சாதனனையும் அடித்த திருதா கர்ணனையும் சூழ்நிலையால் அடித்தான். இதையும் குந்தி தவறாகவே புரிந்துக்கொள்கின்றாள். தனது மகன் கர்ணன் என்பதை அறிந்ததால்தான் அவனையும் கொல்ல திருதா நினைத்தான் என்று எண்ணுகின்றாள். இந்த எண்ணங்கள் எல்லாம் குந்தியின் இடத்தில் உள்ளது. இதைத்தான் திருதராஸ்டிரன் உணர்கின்றார். தருமனைப்பற்றி அவன் பேசினாலும் அவன் அகம் குந்தியைத்தான் நினைத்து இருக்கும். அவளுக்கு சொல்லும் பதில்தால் துரியனும், கர்ணனும் திரௌபதிக்கு அகம்படி செய்தல்.

திரௌபதிக்கு துரியனும், கர்ணனும் வாள் எந்தி அகம்படி செய்வதைப் பார்க்கும் குந்தியன் அகம் திருதராஸ்டிரன்மீது உள்ள அனைத்து ஐயங்களையும் கழுவி துடைத்திருக்கும். உனது மருமகளுக்கு எனது மகனையும், உனது மகனையும் சமமாக நிறுத்தி ஏவள் செய்கின்றேன். உனது மகனும், எனது மகனும் எனக்கு சமம்தான் என்ற குறிப்பு. திருதராஸ்டிரனும் தன்னை  மாசு சிறிதும் இல்லாத இளையவேழம் என பழைய ஆரம் அணிந்து, கனத்து நிறைகின்றான். அந்த பழைய ஆரத்தை அவன் கேட்ட இடத்தில் அவன் அகம் விரும்புவது அந்த மாசற்ற நிலை. 

குந்தியன் அகக்கேள்விக்கு, திருதாவின் அகத்தின் பதில்தான் இந்த திரௌபதி வரவேற்பு. ஊருக்கு இது மன்னனின் கட்டளை. குந்திக்கு இது மனிதனின் கட்டளை. திருதராஸ்டிரன் மீண்டும் தன்னை மனிதன் என்று காட்டிச்செல்கின்றான்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்