Tuesday, August 1, 2017

நீலப்பித்து


உள்ளீடற்றதிலிருந்து புறப்பட்டது, அனைத்தும் சூன்யமயமான இரவு. நீலத்தின் இடைவிடாத விளி. கட்டற்று அலைபாயும் இருப்பு. அந்தகாரத் துளியில் கடம்பின் மகரந்தங்கள். அகாலம் பகலிரவுகளில் முரணிட்டு மருதக்கிளையில் முடிச்சிட்டது. புன்னகை மட்டுமே நிறைவுருத்தி உதிரும் பூக்களின் சுகந்தம். பிச்சி! பிச்சி! அலைக்கழிந்தேன். பயமுற்றேன். கரைந்து விடுவேனோ என்று துணுக்கிறுகிறேன். விட்டகலாது தாபம் கொண்டேன். மொழியின் பெருக்கில் திணறி சுவாசம் அற்று மூர்ச்சையானேன். சில சந்தடிகளில் என்னை ஒளித்துக் கொண்டு தப்பிக்க முயன்றேன். நீலம்! கரு நீலம்! வெளிர் நீலம்! மா நீலம்! தளிர் நீலம்! சென்னீலம்! தீ நீலம்! பசும் நீலம்! காட்சியின் கடைசியெல்லைவரை நீலத்தின் கண்கள். கட்டுக்கடங்கா காட்டு வெள்ள இழுப்பில் பாதங்கள் நடுங்க, தரை தொடும் வழிகள் ஏதுமின்றி பாறை முட்டல்களுக்கும், கூளங்களின் முழுகல்களுக்கும் திணறித் திணறி குவளையைக் கண்டேன், ஆம்பலை ஸ்பரிசித்தேன். அல்லியை நுகர்ந்தேன். கமலத்தை மொட்டவிழ்த்தேன். சங்குபுஷ்பத்தை தொடுத்தேன். மலர்க்குவியல்களுக்குள் அனாரதரவின்றி என் எல்லையின் சுவரில் உடைந்து நொறுங்கி சிதறினேன். காலமில்லாத பரப்பில் அனுபவத்துளிகளை சேமித்துவிட, என் நினைவின் கரையிலிருந்து, எண்ணங்களின் அலைகளை எண்ணத் தொடங்கினேன். எண்கள் கைவிட்டன. தலைக்கு மேல் குமிழியிடும் அறிதுயில் நீலம் சிமிட்டியது. நட்சத்திர உதடுகளால் கண்ணாடிக் குழாய்களாய் நிலத்தைப் பெய்து ஊற்றியது. சிறுதுளி உறைந்து பனியானது. வெம்மை மீதுற அனல் சொரிந்தது. கணக்கிடும் பொழுது ஆவியாகி ஒன்றுமில்லாது வெளியானது. எண்ணிலடங்கா உயிர்களின் தேகத்திற்குள் புகுந்து பிறப்பெடுத்தேன். ஆதியில் பூனையாய் பிரபஞ்சக் கடலை நக்கினேன். நாயாய் வெளிர் நிலாவைக் குதித்துப் பிடிக்க ஊளையிட்டேன். தேனீயாய் அமிழ்ந்து சொக்கி வீழ்ந்தேன். குஞ்சை உண்ணும் ஓநாயாய், கரு உமிழும் வாடையுடன் இரவைச் சவைத்தேன். போதாது! போதாது! எனும் ஏக்கத்துயரில் சொற்களின் கூட்டிலிருந்து கால அளவீடுகள் தெறித்து விட்டது. சபலம் கொப்பளிக்க நின்றேன்.
இரு கரைகளும் பாதாளங்கள். வெள்ளமோ நிலை நிறுத்த வழி செய்யாது இழுத்தடித்தது. முயற்சி செய்து தளர்வுற்று சோர்கையில் என் நிலம் மாறுபட்டிருக்கும். கண்களின் மிளிர்வு கூடியிருக்கும். அழகு ஒன்று மட்டுமே, ஆதியிலிருந்து உள்ளது. காணும் காட்சிகளனைத்தும் அதன் ஆடித்துளிகளே என்று அங்கலாய்த்தேன். என் நிர்வாணத்தை உணராமலானேன். என் அம்மணம் என்னை என்னிடம் காட்டியது. பிறிதொன்றிலாத லீலை, அது மட்டுமே நிகழும் வறனுரல் அறியாக் காடாய் சுற்றிலும் அணைகிறேன். வெளிச்சம் உமிழும், இரவினை அமிழ்த்தும், நேரம் காலம், அனைத்துமில்லா இருப்பு, இன்மையற்ற ஆதுரம் உடற்முழுதும் பொங்கிப் பெருக்கெடுப்பதைப் போல இந்த நாவல் முடியும் வரை இந்த கட்டற்ற சொற்களின் பைசாசத்தில் கரைந்தழிந்தேன்.
இது இரவுக்கான நாவல். இரவினை, இருளை மட்டுமே படிக்கத் தேர்ந்தேன். பகலின் பட்டவர்த்தமான கவர்ச்சி, சொற்களை ஆபாசப்படுத்தி விடுமோ என அஞ்சினேன். அன்பின் நடனம் இரவில் மட்டுமே நிகழும். கண்ணன் வாசிக்க இயலாது திணறும் தருணத்தில், கேலியுடன், வியப்புடன், மென் நகையுடன் கடம்பில் தொங்கிக் கொண்டே பார்க்கும் ராதைக்கு, அவன் எப்பொழுதும் மழலைதான். கபடற்ற காதல் மழலையிடம்தான் நிகழும். என் ராதைக்கு கிருஷ்ணனே வேண்டாம். தன்னளவில் அவள் பூர்த்தியானவள். ஆம்! பிச்சியின் நறுமணம், மதுவேறியதைப்போல கிறக்கத்தில் ஆழ்த்துகிறது.பெண்களை நிர்வாணப்படுத்திய கண்ணனை பிச்சி அறிவாளா? ஆம். நிச்சயம் அறிவாள். ஆனால் அவளது கண்ணன் யார்? நிச்சயம் அந்தக் கண்ணனை கண்ணனுக்கே தெரிய வாய்ப்பில்லை. அவன் பிச்சியின் கண்ணன். பேதையின் விழிகளில் ரசம் பொங்கும் அனிச்ச பாவமாய் இங்கங்கிலாது நீக்கமுற நிறைபவன்.
கலையும் சொப்பனத்தைப் போல வெவ்வேறு கண்ணன்கள். வேறு வேறு குணாதிசயங்களுடன், எத்தனை இரவுகளைக் கழித்தாள். தாபம்! தாபம்! காதலுக்கு முடிவேயில்லை. திருப்தியுற வழியின்றி கோபம் கொள்ளும், இரக்கம் பாவிக்கும், வெறுக்கும், அலைக்கழியும், அலைக்கழிக்கும், அனுமதிக்கும், துரத்தும், துன்புறுத்தும், காத்திருக்கும், ஸ்தம்பித்து திகைக்கும், தேடும், ஒதுக்கும், பூணும், அணைக்கும், கலவும், கரையும், சூன்யமாகும். பின் அவனை தன் உந்திச்சுழியிலேயே பெற்றெடுக்கும். அவன் பிறந்ததும் ருதுவான அம்மை. அந்தப் பெண்மை அவனுக்கானது. அவன் ராதை மட்டுமே பெற்றெடுக்க முடிந்த கண்ணன். கம்சனும் அறிவான் அதை. தேவகியிடம், யசோதையிடம் கிடைக்காத, பெறமுடியாத பேரிருப்பினை ராதை தருகிறாள் தன் வெறிப்பித்தினால். அதனாலேயே அவள் பிச்சி.
காணும் காட்சியெல்லாம் அவனன்றி வேறில்லா சரணடைந்த பக்தி. ஆழ்வார்களும், பாரதியும், சைதன்யரும் கரைந்துணர்ந்த திகட்டா இனிமை.இருந்தும் ஆண்டாளால் மட்டுமே ஆளப்படுவான் ராசமன்னார். சொற்களும், படிமங்களும் என் அனுபவப் புலத்திற்குள் காட்சிகளாய் வந்தமைய, அமைய கோகுலத்தில், பிருந்தாவனத்தில், மதுரையில், அதனை வடிவமைக்க முயலுந்தோறும், மொழியின் கனத்த கார்வை வலுக்கும். பின் அதன் ஆழிப்பாழில் தொலைதல் ஒன்றே சாத்தியம். தன்னுணர்வற்ற நிலைக்கு செல்வேன். அயர்ச்சியின்றி இன்னும் இன்னும் எனும் வெறி உந்த, பித்தாய் வாசித்தலே என்னால் முடிந்தது. காமம் தலை நனைய பெய்தது. மனது கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தது சுய இன்பம் செய்ய. உள்ளூற நொதிக்கும் மொழி, காட்சியின் பொங்குமாக்கடலின் அடர்த்தி கூடிக்கொண்டே போய் நரம்புகள் தந்தி அதிர்ந்தன.
முடிந்துவிடுமோ என்று நடுங்கினேன். சொந்த அனுபவங்களால் பெற இயலா உச்ச சாகசம். போதையடிமையைப் போல மொழியை நாடினேன். திரும்ப படிக்கக் கூடாது என்றும் தோன்றுகிறது. அதன் ஓவியங்களை மட்டும் அச்சத்துடன் பார்த்து, மீளுருவாக்கம் செய்கிறேன். மனம் தாவித் தாவி குழலோசையின் நுனியில் பதிந்திருக்க எத்தனிக்கும். ஹரிப்ரசாத் சாருசியாவை இரு நாட்கள் இரவில் தொடர்ந்து கேட்க முயன்றேன். ஆனால் நிற்காமல் அலை பாய்கிறது. இசை காட்சிகளாய் பரிணமிக்கையில் திரும்ப உள்ளொடுங்கி விடுகிறேன். ஏன் எனத் தெரியவில்லை, முன்பை விட அதிகமாய் ஆபாசப்படங்களை பார்க்க தூண்டுகிறேன். பார்த்து முடித்த பின் கடம்ப மர நீலக்கண்களைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்.
எழுதும் பொழுது உங்களுக்கு முலைகள் தோன்றியதா? ராதையின் பைத்திய வெளியில் ஜெயதேவன் காணாமலானது போல, ஜெயமோகனும் எழுத்துச்சுழியில் உட்கிரகிக்கப்பட்டு உறைந்த பள்ளத்தாக்கு முகடுகளில் எதிரொலிகளால் எங்களுள் நிரம்பி வழிகின்றார். சொற்களின் கூட்டு நனவிலி, என் அன்றாடக் காட்சிகளை வரிக்கு வரி படிமமாக்க முயல்கிறது. ஒவ்வொரு தடவையும் கவனம் சிதறி எழுத்துக்குவியலுள் கண்ணி பொருத்தி கொழுத்தி விட்டதை போல உணர்கிறேன்.
பலராமன், கிருஷ்ணனை தன் இருப்பால் உணர்வது. சில நேரங்களில் அண்ணன் தம்பிகள் ஆடிப்பாவைகளாக மாறிவிடுகின்றனர். நான் உணர்ந்த சில விஷயங்களை என் தம்பி அதே உன்னதத்துடன் விளக்குவதைக் கேட்டிருக்கிறேன். காளிந்தியின் கரிய நதியின் நெளிவு அவளை பாம்பைப் போல உருவகம் செய்தது. அவளே நீலம் பூக்கும் கூந்தல் நெளிவாய், ராதையாய் உருமாறுகையில், காளிங்க நர்த்தனம் அவர்கள் முயங்கி ஊடாடுவதைப் போல பிரமை தோன்றியது.
ராதை வானத்தை எவ்வாறு பார்க்கிறாள்? அவள் ஆழியைக் கண்டிருப்பாளா? பகல் ஒவ்வமையாகிக் கொண்டே இருந்தது. இரவை எதிர் நோக்கி காத்திருப்பேன். முறை தவறிய வீணன், சொன்ன சொல் பழித்தவன் தாபத்தில் விம்மும் உளம். ஆனால் ஒரு ஆணாய் ராதையை அணுகி அறிந்திட முடியவில்லை. அணுக்கமானவளாய் அவளிடம் செல்ல பயக்கிறேன். கண்ணனின் சேஷ்டைகளில் என்னை உணர்ந்தேன். செய்யத்தவறிய, இயலாத காரியங்களை, சாகசங்களை அவன் வழி நடத்தும் த்ருப்தி சில நேரங்களில்.
குரங்காட்டம் போல நிலையின்றி நிகழுக்கும், சொப்பனத்திற்கும் ஊசல். கண்ணனுக்கு ராதை தேவையில்லை என்ற போது கனத்து வலித்தது. ராதையின் மனப்பிறழ்வுதான் கண்ணனின் தோற்றமா? அடங்காப் பித்தே அவளைக் கண்ணனை உருவாக்க செய்ததா? இளைஞன் ராதையை மறந்தே விட்டான். பிச்சியாய் மரக்கிளையில் தொங்கிக் கொண்டே தோள் கனத்து, இடை பெருத்த கண்ணனை காண்கிறாள். ராதைக்கு தெரிந்தது அந்த நாட்டின் மன்னன். ஆனால் மூங்கிலின் துளைகள் வழி இசையின் கமகங்கள் சூழும் லயிப்பில், அதன் மொழிக் கனலில், அரசனிடமிருந்து ராதையின் கண்ணன் பிளந்து வெளிவருவதைப்பார்த்தேன். இது நாள் வரைக் காத்திருந்த கீதம், தடையின்றி நிசப்தத்தைப் போர்த்த, பிச்சி மலரும் கண்களுடன் பீடத்தில் அமர்கிறாள். அவனை மடியில் இருத்தி மாயமாகிறாள். பின் கண்ணன் பிச்சியை தன் ராகங்களில் நித்தியமாய் இருத்தி தன்னுள்ளேயே வைத்துக் கரைந்திருப்பான்.
ஆனால் இனி ராதையைத் தேடிக் கண்ணன் வந்துதான் ஆக வேண்டும்.

நன்றி,
தங்கள் உண்மையுள்ள,

நந்தகுமார்.