ஜெ
அறுபடாத தொடர்ச்சியுடன் கதை ஓடிக்கொண்டிருக்கிறது. பாண்டவர்களின் தரப்புக்குள்ளேயே அசுரர்களுக்கும் பிறருக்குமான வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. சமானமாக நடத்தினால் அதைக்கொண்டே அசுரர்கள் புண்படக்கூடும் என்ற இடம் இந்த ஒருங்கிணைவு என்பது எத்தனை கடினமானது என்பதைக் காட்டுகிறது. அசுரர்கள் நிஷாதர்களின் அறம் ஷத்ரியர்களின் ராஜதந்திரம் ஏதும் இல்லாமல் நேரடியாக உள்ளது. அவர்களால் எல்லாவற்றையும் உணர்ச்சிக்கொந்தளிப்பாகவே காணமுடிகிறது. அவர்களுடன் தான் என்னால் அடையாளம் காணமுடிகிறது. சபைகளில் அவர்கள் தயக்கமில்லாமல் கூச்சலிடுவதுகூட பிடித்திருக்கிறது.
அதேவிஷயம்தான் சாத்யகி திருஷ்டதுய்ம்னன் சந்திப்பிலும் வெளிப்படுகிறது. சாத்யகிக்கு கொஞ்சம் தாழ்வுணர்ச்சி. திருஷதுய்ம்னன் கொஞ்சம் மனம் குன்றியிருந்தாலும் சாத்யகிக்கு அது தெரிந்திருக்கும். அவன் ஆழமாக மனம்புண்பட்டிருப்பான். அது நிகழாமல் இருந்ததும் அந்த காட்சி உணர்ச்சிகரமாக இருந்ததும் அழகாக இருந்தன. அவன் தன் மைந்தர்களைக்கூப்பிட்டு அறிமுகம் செய்வதும் அழகு
மனோகர்