Sunday, May 3, 2015

வருபவள்

 
 
திரு. ஜெ,

"வரும்வழிகள் முழுக்க நம்மால் அலங்கரிக்கப்படவேண்டும். காந்தார மாளிகைக்குச்செல்லும் வழியும் அணிசெய்யப்படவேண்டும். நகரின் அனைத்துத்தெருக்களிலும் அணிச்செயல் நிகழ்ந்திருக்கவேண்டும் என்பது அரசாணை.” 

"நெற்றிச்சுட்டியில் நீலவைரம். காதுகளில் ஆடின விண்மீன் தொகுதிகள். தோள்களுக்கும் கொண்டைகளுக்கும் அப்பால் அவள் முகம் தெரிந்து மறைந்தது. கரும்பளிங்குச் சிலைமுகம்.  யுகயுகங்களாக ஒற்றை நோக்கும் உணர்வுமாக உறைந்த தெய்வமுகம்."

"முதுமங்கலைகள் இருவர் பொற்தாலத்தை அவள் காலடியில் வைத்தனர். அவள் வலக்காலை அதில் வைத்ததும் சேடியர் குரவையிட்டனர். மங்கல இசை சூழ்ந்தொலிக்க பொற்குடங்களில் இருந்து மஞ்சள்நீரை ஊற்றி அவள் கால்களை கழுவினர்.  பின்னர் முதுமங்கலை “எங்கள் மண்மேல் உங்கள் பாதங்கள் பதியட்டும் அன்னையே” என்றாள். திரௌபதி புன்னகைசெய்து நிமிர்ந்த தலையுடன் கைகளில் ஏந்திய தாலத்தில் எண்மங்கலங்களுடன் தன் வலக்காலை எடுத்து மலர்பூத்த அஸ்தினபுரியின் மண்மேல் வைத்தாள்."

நாடே அணிக்கோலம் பூண்டு இப்போது வரவேற்கும் இந்த அன்னையைத் தான், எதிர்காலத்தில் அஸ்தினாபுரம், அங்கங்கள் தரையில்பட, அணியிழந்த கருங்கூந்தல் கைப்பிடியில் சிக்கிக் கதறிப் பரிதவிக்க, நாடே பார்த்து நின்று நாணித் தலைகுனிய, ஒற்றை ஆடையதில் ஒருவரும் உதவாமல், காலம் திகைத்து நிற்க, காலனின் அவைதன்னில், மானம் இழக்கவைக்க மாபெரும் முயற்சி செய்யும் என்பதை நினைக்கும்போது, அடிமனதில் எழும் ஆற்றாமை என்ன சொல்வேன். 
நகரம் தன் அழகை மென்மேலும் மெருகேற்ற மெருகேற்ற, அது செல்லப் போகும் கீழான நிலையே நம் மனதில் ஆறாத ரணம் ஏற்படுத்துகிறது.
கணபதி கண்ணன்