Sunday, May 3, 2015

குதிரைக்காரன்


அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

அனல் அலையடிக்க  தோன்றிய வெண்முகில் நகரம்,  நதியலை அடிக்கும் கரையில் முடிந்தது அற்புதம். அனல் வெம்மை என்றதும் ஒரு பயம் தோன்றும், விளகத்தோன்றும். புனல் தண்மை என்றதும் ஒரு மகிழ்ச்சித்தோன்றும். அதற்குள் விழுந்து நீந்தத்தோன்றும். இந்த தோற்றம் ஒரு மாயம்தான். அனலில் இருந்து இருள்விளகி ஒளிக்கிடைக்கிறது.அடுத்தப்பயணத்திற்கு பாதைக்கிடக்கிறது. புனலில் உள்ளக்குளிர் உடலின் அணைத்து உறுப்புகளை உறையவைத்து செயல் இழுக்க வைத்துவிடும் அல்லது கொன்றுவிடும். அந்த மாயத்திற்கு அப்பால் உண்மை இது. ஆனால் அந்த குளிர் நீர் ஒரு சிறுவயலில் தேங்கி கனியும்போது குடிநீராகும் வாழவைக்கும். வெண்முகில் நகரம் அவ்வளவுதான். சின்ன ஓவியம் எத்தனை பெரிய முப்பரிமாணம்.

கங்கையின் வடிவான திரௌபதியை ஒவியமாக்கி செல்லும் இந்த வெண்முகில் நகரம். முதலில் அக்கினையை அள்ளி ஊத்தி வரைய ஆரம்பித்தது. புனலை அள்ளி ஊத்தி நிறைவு செய்கின்றது. அக்கினியும், தண்புனலும் தாகம் தீர்க்காது என்று இந்ததிரபிரதஸ்தம் என்னும் சிறுவயலில் தேங்கும் நீராகிறது. கங்கையின் வடிவான திரௌபதி அவளுக்கு உரிய குளிர்ச்சியோடு இங்கு வந்து உள்ளாள். எத்தனை மகிழ்ச்சி கொண்டாட்டம். அந்த சார்வகன் மட்டும் அறிவான் அதற்குள் உள்ள சூட்டை. அவன் பெரும் சடையும் மூழ்கடித்து ஓடும் பெரும் பயணத்தை. தாகம் தீர்க்க வந்த நதி  எத்தனை உயிர் குடித்து தனது தாகம்தீர்க்கும். சார்வகன் மட்டும் அறிவான். 

வெந்நீர்தான் மிகவும் குளிர்த்த நீராகும். அந்த வெந்நீரா இது என்று எண்ணவைக்கும். வெண்முகில் நகரம் தோன்றியபோது இருந்த வெம்மையை இன்று நினைத்தால் அந்த வெண்முகில் நகரமா இது என்று ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாவில்லை.

ஜெ நீங்க அறிந்த போட்டதா அல்லது அறியாமல் வந்து விழுந்தச்சொல்லா தெரியவில்லை. வெண்முகில் நகரம்-90ல் வண்ணக்கடல் என்ற சொல் வந்து உள்ளது. வெண்முகில் நகரத்திற்கு வண்ணக்கடல் என்றுதான் பெயர் இருந்து இருக்கவேண்டும். இதற்குள்தான் எத்தனை எத்தனை வண்ணங்கள்.

வண்ண வண்ண முதலிரவு, வண்ண வண்ண உடற்புனைவுகள். வண்ண வண்ண சூதர்ப்பாடல்கள். வண்ண வண்ண காதல் மயக்கங்கள். வண்ண வண்ண காமங்கள். வண்ண வண்ண கனவுகள். கனவுகளின் தந்தை பூரிசிரவஸும் இதற்குள் தான் வந்து உள்ளான். வண்ண வண்ண  கண்ணன் பக்தி. கண்ணதாசன் சாத்யகியின் பக்திதரிசனமும் இதற்குள்தான். வண்ண வண்ண மருமகள்கள். காந்தாரியின் கட்டப்பட்ட கண்களில் எத்தனை வண்ணங்கள், இதற்கு முன்னும் இதுபோல் இருந்தது இல்லை இனியும் இருக்குமா? கண்ணன் காணும் வண்ண வண்ண வாணிபவீதிகள் இதற்குள்தான். வண்ண வண்ண மலைகள். வெண்முகில் நகரத்திற்கு வண்ணக்கடல் என்ற பெயர் இருக்கவேண்டும் என்று உங்கள் அகமே நினைத்து இதற்குள் வண்ணக்கடல் என்ற சொல்லை பெய்ததா?

உச்சத்தின் உச்சமாக சாத்யகியையும், பூரிசிரவஸையும் தழுவ வைத்தீர்களே அந்த இடம் நெஞ்சம் கொள்ளைப்போகின்றது. கர்ணனும், துரியோதனனும் வாளேந்தி திரௌபதிக்கு அகம்படி செய்வது பெரியாதாக இருந்தாலும் அது பெரிதில்லை. இப்படி நடக்கவேண்டும் என்று நினைக்க நிறைய அகவிழைவுகள் உள்ளன. அந்த அகங்களின் விழைவால் அது விரும்பியோ விரும்பாமலோ நடக்கும். இப்படி மண்ணில் பிறந்த அகங்களின் விழைவின் காரணமாக ஒன்று நடப்பது பெரிதாக இருந்தாலும் பெரிதாக தெரியவில்லை, ஆனால் சாத்யகியும், பூரிசிரவஸும் தோள்தழுவுவது விண்ணில் வாழும் தெய்வம் நினைக்கும் ஒன்று என்று நினைக்கின்றேன். அது நாடா நட்பு, நாடாவிட்டாலும் நட்பு மட்டும்தான். அதற்கு விலை அது மட்டும்தான். அதை மனிதன் உருவாக்க முடிவதில்லை. மனிதனால் அப்படி உருவாக்கவும் முடியாது. இதை ரயில் நட்பு என்பதுபோல் தோணி நட்பு என்று சொல்லிவிடலாம். ஆனால் இது தோணிபோல நதியோடு நின்றுவிடக்கூடியதா? நின்றாலும் ஆடிக்கொண்டே இருக்கும் ஒன்று. அதை உருவாக்கிய அந்த கணம், அந்த அகம். வாழ்க்கைக்கு இதுபோல சில தருணங்கள் இருக்கின்றது. பூரிசிரவஸ் அப்படி ஒரு தருணத்தில் நின்றது அற்புதம். வாழக்கையின் கொடை என்றும் அதை சொல்லலாம். அது தொடரும் என்று சொல்ல முடியாது ஆனால் அந்த கணம் மட்டும் நிலைத்து நிற்கும்.

சாத்யகி தான் கண்ணனின் தொழும்பன் என்பதும், பூரிசிரவஸ் அப்படி ஆகமுடிந்தால் பிறவிப் பேறு என்பேன் என்று சொல்வதும். ஒரு அகத்தின் இருவேறு பயணத்திசை காட்டுகின்றது. ஒருவன் அகமும் புறமும் ஒன்றென வாழ்கின்றான். மற்றொருவன்  அகம் விரும்பவது ஒன்றாகவும், வாழ்வது மற்றொன்றகவும் இருப்பதைக்காட்டுகின்றது. மொத்த வெண்முகில் நகரமும் இதுதான் என்று சுட்டுகின்றது.

//பூரிசிரவஸ் அவன் விழிகளை சற்று நேரம் நோக்கியபின்அவ்வாறு அடிமையாக என்னால் முடியுமென்றால் அது என் பிறவிப்பேறென்றே எண்ணுவேன்என்றான். “அவ்விழைவு உண்மையானதென்றால் நீங்கள் இதற்குள் அடிமையாகியிருப்பீர்கள். நீங்கள் உள்ளூர எதுவோ அதுவாகவே ஆகிறீர்கள்.” பூரிசிரவஸ் புன்னகைத்துஉண்மைதான். நான் காற்றில் பறக்கும் முகில். வடிவமோ திசையோ அற்றவன்என்றான்// துரியோதனனும், கர்ணனும் அகம் படும்பாடு இதில் மின்னுகின்றது.

திரௌபதியின் அஸ்தினபுரி வருகையை அனைவரும் கண்டு மகிழ்கின்றார்கள். எங்கோ ஒரு முகம் தெரியாத இடத்தில் அந்த சார்வாகனும் கண்டு மகிழ்வான் என்ற இடத்தில், அவன் நெஞ்சம் உறைந்து குளிர்கின்றது என்பதை அறிய முடிகின்றது. அழல்வடிவ அண்ணலும், அவன் திருவடியில் இருந்து வரும் தண்புனல் கங்கையும் உயிர்களை கொல்வா தோன்றியது. அறியாத உயிர்கள் அல்லவா அருகில் இருக்கும் குளிர்ந்த முலைப்பால் அருந்தாமல், கரிய நீர் அறிந்தி சாகின்றது.

ஒரே நதிநீர்தான் ஆனால் எதை குடிக்கலாம், எதை குடிக்கக்கூடாது என்று சொல்ல ஒரு ஓடக்காரன் இருந்தால் நன்றாக இருக்கும். ஓடக்காரன் சொல்வது குதிரைக்காரனுக்கு தெரியும் ஆனால் குதிரைக்கு தெரியுமா? கண்ணன் என்னும் குதிரைக்காரன் சொல்கிறான் எத்தனை குதிரைகள் கேட்கும் பார்க்கலாம்.

இந்த குதிரைக்காரன் சிலகுதிரைகளை இழுத்துப்பிடித்துக் காக்கின்றான், சிலகுதிரைகள் குடிக்கட்டும் என்றே விடுகின்றான். இவன் குதிரைக்காரன் மட்டும்தானா? 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.