Monday, May 4, 2015

சொல்லால் சுடுதல்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.


தேவிகையும், விஜயையும் பூரிசிரவஸை அவமதிக்கும் இடத்தில் அதிகப்பட்சம் என்பதுபோல் தோன்றியது காதுக்கு. தருமன் சொல்வதுபோல் நிறுத்துங்கள் என்றுதான் சொல்லவேண்டும் என்றுதான் தோன்றியது உணர்வுக்கு. பூரிசிரவஸ் நினைப்பதுபோல் அது காலில்லா முயல்குட்டியை புலிக்குருளைகள் தட்டிவிளையாடும் விளையாட்டுதான் என்று தோன்றியது கண்ணுக்கு. ஆனால் பூரிசிரவஸ் அகத்திற்கும், அந்த இருபெண்களின் அகத்திற்கும் தெரியும் அந்த நிர்வாணம். அங்கு தோன்றும் புதை குழியை, யுத்த களத்தை. அதை நாம் அறிவாலும்,அகத்தாலும் அறியமுடியாது.

தேவிகைக்கும், விஜயைக்கும் காது, கண், உணர்வு இல்லையா? அதன் மூலம் அவன்பாடும் பாட்டை அவர்கள் அறியவில்லையா? பின் ஏன் விளையாடுகின்றார்கள். எல்லாம் அகத்தில் இருந்து அகத்திற்கு எரியப்படும் எரியம்புகள்.

தேவிகையும், விஜயையும் கன்னியாக இருக்கும்போது விரும்பியது பூரிசிரவஸுடன் காதலுடன் கூடிய காமம். பூரிசிரவஸ் அவர்கள் இடம் தேடியது காமத்துடன் ஒரு காதல் அல்லது ஒரு உறவின்பம். அதை அவர்கள் அவர்களின் திருமணத்திற்கு பின்பே அறிகின்றார்கள். காதல் எது? காமம் எது? என்ற நுண்ணிய இடவெளியை திருமணத்திற்கு பின்’பு அறிகின்றார்கள் என்று நினைக்கின்றேன். அந்த ’நுண்ணிய இடைவெளியை கொண்டு பூரிசிரவஸை அறிகின்றார்கள். அவர்கள் இடம் பூரிசிரவஸுக்கு இருந்தது முழுக்க முழுக்க காமம். பெண்கள் மிக மிக நுண்ணுர்வு உடையவர்கள் அதனால்தான் அவனை இத்தனை வெளுத்து வாங்குகின்றார்கள். அவர்களைப்பற்றி காமம் உறைந்து இருக்கும் அவன் அகத்தை சொல்தீ வைத்து சுடுகின்றார்கள். அவர்கள் பேசியபோது தெரியவில்லை இந்த நுணுக்கம். இன்று பூரிசிரவஸ் காணும் கனவில் அந்த உண்மை தோல் உறிகின்றது. அவர்களின் சொல்தீயும், இன்றைய பூரிசிரவஸின் கனவும், எதிர் எதிர் நின்று எறியப்படும் எரியம்புகள். உண்மைகள் எத்தனை கொடூரமானவை.  

தேவிகையும், விஜயைம் பூரிசிரவஸை சந்தித்ததில் இருந்து, அவன் மீது உள்ள காதலால் தாங்கள் யாராலாவது கவரப்படுவோம் என்ற பயத்திலேயே இருக்கிறார்கள்.  ஆனால் பூரிசிரவஸ் அவர்களை சந்தித்ததில் இருந்து அந்த அபாயங்களை நினைக்காமல் இருந்துவிட்டான், அவன் நினைவு முழுவதும் அவர்களின் மீது உள்ள காமமாகவே இருந்து  இருக்கிறது. மலைப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு அவளோடு குடும்பம் நடத்தியது காதல்போல ஒரு மாயம் தெரிந்தாலும் அதிலும் அவன் இவர்கள் மேல் உள்ள காமத்தையே துழாவி துழாவி நீந்திச்செல்கிறான். அவனுக்குள் உண்மையான  காதல்  இருந்தால் அந்த அரசியல் அபாயத்தை, அதில் உள்ள தடைகளை அவன் அறிந்து இருப்பான். அவர்களை அடைய முன்னேற்பாடு செய்து இருப்பான். காமம் என்பதால் அது கனவோடு நின்றுவிட்டது. இ்ந்த தோல்விக்கு தான் காணரம் இல்லை என்று அவன் சொல்வது எல்லாம் தனது அகத்தை தானே ஏமாற்றும் ஒரு வித்தைதான். அந்த ஏமாற்று வித்தையை வெளிக்கொணரும் காட்சித்தான் இந்த கனவு. இன்று பூரிசிரவஸ் காணும் கனவு அர்த்தங்கள் நிறைந்த உண்மை. 

தேவிகை கனவில் குதிரைகள் வரும் ஓசை அறிவதும், பயம் கொள்வதும் எத்தனை நயம்  ஞாயம்.  எதையும் அறியாமல், கேட்காமல் செல்வதோடு இல்லாமல் விரைவாக விலங்கென அவளை புணர்ந்து செல்லும் வாழ்க்கை பூரிசிரவஸ் உடையது. கனவு ஆனால் நிஜம். கனவு என்பது எத்தனை உண்மை மனத்தின் வெளிப்பாடு. விஜயை நிர்வானணமாக வருவது அதன் உச்சம். இந்த ஆழ்மனத்தின் குப்பைகளைத்தான் அன்று தேவிகையும், விஜயையும் சொல்தீ வைத்து சுட்டார்கள்.

தேவிகையும், விஜயையும் அன்று சொல்லால் சுடும் கணத்தை அர்த்தப்படுத்திப்போகின்றது இன்று பூரிசிரவஸ் காணும் கனவு. ஆண்தான் எத்தனை பலகீனமானவன். இத்தனை அவமானத்திற்கு பின்பும் தனது அகத்தில் கிடக்கும் குப்பையை கிண்டி மோந்துப்பாக்கின்றான். அந்த குப்பை அங்கு இருக்கும் என்று தெரிந்தே பெண்கள் கூட்டிப்பெருக்கின்றார்கள். அவர்கள் சொல்தீ வைத்து சுட்டுவிட்டு அந்த காயத்தை நினைத்தும் தனிமையில் கண்ணீர்விடுவார்கள் காதலால், தாய்மையால். அதுதான் பெண்கள் இடம் இருக்கிறது, அதுதான் ஆண்கள் கண்களுக்கு கனவிலும் தெரியாமல் இருக்கிறது. 

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்-பாரதியார். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.