அன்புள்ள ஜெ,
நலம்தானே? வெண்முகில்நகரம் முடியும்போது இந்திரப்பிரஸ்தம் கட்டிமுடிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தேன் ஆனால் அதற்குப்பதிலாக திரௌபதி அஸ்தினபுரிக்குள் நுழையும் காட்சியுடன் முடிந்தது. ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இயல்பானது என்ற எண்ணம் அதற்குப்பிறகு வந்தது. ஏனென்றால் அவளுடைய மனதுக்குள்தான் அவள் அந்த நகரத்தைக் கட்டிவைத்திருக்கிறாள். இந்திரப்பிரஸ்தம் இருப்பது அவளுக்குள்ளேதான். அது மண்ணிலே கட்டப்படுவதெல்லாம் இரண்டாம்பட்சமான விஷயங்கள்
திரௌபதியை வரவேற்க நகரம் அலங்கரித்துக்கொள்வதும் அவள் வரும்போது கூச்சலிட்டுக் கொந்தளிப்பதும் அவளை அத்தனைப் பெண்களும் சேர்ந்து கொண்டாடியபடி கூட்டிச்செல்வதும் அற்புதமனா அனுபவமாக இருந்தன . திரௌபதியை அத்தனை பெண்களும் ஆண்களும் கொண்டாடுகிறார்கள். அதற்கு அவளுடைய charm மட்டும் காரணம் இல்லை. அவள் woman of destiny. நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவள். அப்போது ஷாவின் man of destiny நாடகத்தைப்பற்றிச் சொல்லும்போது நாயர் சார்[அமெரிக்கன் காலேஜ்] அற்புதமாக இதைச் சொன்னார். அந்த வகையான மனிதர்கள் விதியின் கருவிகள். அவர்களுக்குப்பின்னால் விதியே பெரிய கொடுங்காற்று போல நின்றுகொண்டிருக்கிறது. புயலில் ஒரு பெரிய மரம் வந்து வீட்டின்மேல் விழுந்து வீட்டை உடைக்கிறது. அது அந்த மரத்தின் சக்தி இல்லை. புயலின் சக்திதான். அதேபோன்ற மனிதர்களை மற்றமனிதர்கள் ஆராதிப்பார்கள். ஹிட்லருக்கு எப்படி அந்தக் கரிஷ்மா வந்தது என்பது இதனால்தான்
எஸ்