அன்பின்
ஜெ,
நலமா
? வெண்முரசு நீர்க்கோலத்தில் மாற்றுருக்கொள்ளல் அத்தியாயம் ஒரு புதிய திறப்பாக
எனக்கு அமைந்தது. ஒருவர் மீது ஒருவர் கல்லெறிவது போல பிறிதொருவரின் அடியாழத்தில் அமைந்த
ஆள் யார் என்பதை சொற்களால் இட்டு நிரப்பும் தருணம் முழுமையாக ஆகி வந்திருக்கிறது.
ஒரு மனிதனின் அடியாழத்தில் அமைந்திருக்கும் core fabric வெளிப்படும் தருணங்களை முனைப்போடு வென்றெடுக்கும்
முயற்சிகளில் பல முறை ஈடுபட்டிருக்கிறேன். மேலாண்மை பட்டமேற்படிப்பு படிக்கச்
சென்ற போது பேராசிரியர்கள் முதலில்
சொல்வது தன்னையறிதல். அதற்கு பல்வேறு தேர்வுகளை எழுதினோம். ஓரளவுக்கு அவை நாம்
யார், நமக்கு எந்த மாதிரி பணிகள் நன்றாக வரும், எது வராது என்று சொல்லிவிடும். அவற்றுள்
Belbin’s
team test குறிப்பிடத்தக்கது. தனி மனிதனாக யாருமே
முழுமையான ஆளாக இருக்க முடியாது, ஆனால் ஒரு முழுமையான அணி என்பது சாத்தியமே. ஒவ்வொருவரின்
குறைகளையும் மற்றொருவரின் நிறைகள் பூர்த்தி செய்யும் என்பது கூற்று. அந்த தேர்வை
எழுதும் போது அதில் கூறப்பட்டிருக்கும் ஒரு அணியின் எட்டு ஆளுமைகளில் ஒன்று நமக்கு பொருந்திப்
போகும். அது உண்மையாகவும் இருந்தது. என் பேராசிரியர் கூறியது, நமது ஆளுமையில் 80% வரை சூழ்நிலை, பயிற்சி மூலம் மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
அதுவும் மிகக் கடினமே. ஆனால் மிச்சம் உள்ள 20% ஒன்றுமே செய்ய முடியாது என்றார். நானறிந்தவரை
அது இருபது சதவிகிதத்தை விட மிக அதிகமே. பல நாட்கள் பள்ளித்தேர்வுக்கு படிக்காமல் போவது,
வீட்டுப்பாடம் எழுதாமல் அடி வாங்குவது, வகுப்பில் அவமானப்படுவது போன்ற கனவுகள்
வந்துகொண்டே இருந்தது. அதைப் பற்றி தேடியபோது, நம் ஆளுமையை மறுபரிசீலனை செய்து கொண்டே இருக்கும்போது அந்த மாதிரி கனவுகள்
வரலாம் என்று இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் நாம் யார் என்பதை ஒத்துக்கொண்டு தானே
ஆக வேண்டும்? சில காரியங்களை ஒரு தவத்தைப் போல செய்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் நம்
மனம், உடல் நமக்கு முட்டுக்கட்டை போடுமோ என்று தோன்றுகிறது. உடல் மனதை கவனிக்கிறது,
மனம் உடலை கவனிக்கிறது. இரண்டின் பேச்சுவார்த்தை தானே நாம். Core Fabricன் வண்ணத்தை முழுமையாகக் காண்பது ஒருபுறம்
இருந்தாலும் அதன் வண்ணத்தை மாற்ற நினைப்பது எப்படிப்பட்ட காரியம்? நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள் ஜெ.
அன்புடன்
கிஷோர்
ஸ்ரீராம்