Monday, June 19, 2017

விழியின்மை

 
 
அன்புள்ள எழுத்தாளருக்கு...

விழியின்மை என்பது புற உலகைக் காண இயலாத நிலை. 

பிறப்பிலிருந்தே என்றால், பார்த்தல் மூலம் அறிதல் என்பது நிகழாமையால் முகர்தல், சுவைத்தல், கேட்டல், தொடுதல் ஆகிய பிற புலன்கள் வழி விழியற்றவர் உலகைப் பற்றிய ஓர் உருவகத்தைத் தன் உள்ளத்தில் வரைந்து கொள்கிறார். இடையில் ஏற்பட்ட பார்வையின்மை எனில் முன்பு ஐம்புலன்களால் தான் அமைத்துக் கொண்ட உலகையும், பார்த்தல் தவிர்த்து இப்போது சேர்த்துக் கொள்கின்ற அனுபவங்களால் அம்மன உலகில் தொடர் மாறுபாடுகளையும் அளைந்து கொண்டிருப்பார். முன்னதற்கு திருதராஷ்டராரும் பின்னதற்குக் காந்தாரியும் உதாரணங்கள்.

நீதி வழங்கும் உச்சியில் அமர்ந்திருப்போர்க்கு விழியின்மை என்பது ஒரு வரம். அறிந்தோர், அறியாதோர், அயலவர், அருகினர், இயல்வோர், இயலாதோர் என்று எப்பிரிவும் அறியாமல் நீதி பரிபாலனம் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே நீதி தேவதை சிலைக்குக் கண் கட்டியுள்ளனர். அவளும் ஒரு காந்தாரியா, திருதரரா?

பிறவியிலேயே அரசரான திருதர், அவ்விழியற்ற நிலையாலேயே அறத்தின் சிகரத்தில் அமர்ந்திருக்கிறார். குந்தி சொன்ன சொல்லுக்காக அவளது மகன்களைத் தம்பி மகன்களாக ஏற்றுக் கொள்வதாகட்டும், குந்தி சொன்ன தர்க்கத்திற்காக முடியுரிமையைத் தருமனுக்குக் கொடுப்பதாகட்டும், திருதராஷ்டரர் விழியற்ற அறத்தினராகவே செயல்படுகிறார்.

ஆனால், ஒரு நிலையில் வெல்ல உதவும் ஒருவரது பலமாக இருப்பதே, மற்றொரு நிலையில் வெல்லவியலா பலவீனமாக ஆகி விடும். நீர்க்கோலத்தில் மாற்றுரு தேர்கையில், பீமன் சொல்வது அதுவே. பாண்டவர்களின் பலமான அவனது பேருடலே, அவன் கொள்ள வேண்டிய மாற்றுருவிற்கான வாய்ப்புகளை மிக மிகக் குறுக்கி விடுகின்றது.

அது போல அறம் பிழைக்காமல் நீதி வழங்க விழியற்ற நிலை என்ற திருரரது பலமே, அவர் ‘தன் மைந்தர் நலமே முக்கியம்’ என்று குறுகுகையில் பெரும் பலவீனமாகி விடுகின்றது. உலக நெறிகள், முன்னோர் சொற்கள், மூத்தோர் அறிவுரைகள், மனைவியின் அறிவுறுத்தல், விதுரரின் அழுகை எதுவும் அவ்விழியின்மையெனும் கற்கோட்டையைத் தாண்டி உள் நுழைய முடியவில்லை. தெரிந்தே அறிந்தே அவர் பாண்டவர்களை அறம் மீறி வனம் புகச் செய்கிறார்.

’வெய்யோன் - 27’ல் சுஜாதனின் முழக்கத்திற்குப் பின் கர்ணன் அவனிடம் சொல்கிறான். ’நீ விழியற்ற பேரறத்தின் மைந்தன் இளையோனே. பிறிதொன்றை உன்னால் எண்ணமுடியாது..’ என்று. அவ்விழியற்ற பேரறத்தான் அதனாலேயே வெளிவரவியலா பெருஞ்சேற்றில் சிக்கிக் கொள்வார் என்பதை அறிந்தவனா சூரியமைந்தன்?

நன்றிகள்.

அன்புடன்,
இரா.வசந்த குமார்.