Friday, June 2, 2017

வாழ்க்கைதான் கதை



அன்புள்ள ஜெ. வணக்கம்.

வாழ்க்கைதான் கதையாகுகின்றது. கதையில் வாழ்க்கை முகம் காட்டுகின்றது. இது ஒரு ஸ்தூல நிலைப்பாடு. ஸ்தூலத்திற்குள் மறைந்து நிற்கும் ஆனால் உயிராக இருக்கும் ஒரு சூக்குமநிலை ஒன்று உள்ளது. அது கதைமட்டும் இல்லை பாடமும்கூட, வாழ்க்கை மட்டும் இல்லை நம்பிறப்பின் அர்த்தம்.. நீர்க்கோலம்-7 கதையின் வழியாக வாழ்க்கையின் சூட்சுமத்தை படம் பிடித்து காட்டுகின்றீர்கள். யதார்த்த உலகத்தை ஒரு புரணஉலகத்தில் நுழைந்து வடிவமைக்கின்றீர்க்ள. 

வாழ்க்கையில் முரண்கள் உள்ளது அந்த முரண்கள் வாழ்க்கையை கவிதையாக செய்கிறது. முரண்கள் புரிந்தவர்கள் அதை கவிதை என்று ரசித்து முன் செல்கின்றார்கள். முரண்கள் புரியாமல் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து அதில் அழுந்திப்போவர்கள் வாழ்க்கையை  பெரும் போராட்டம் ஆக்கி அதில் சிக்கி வாழ்க்கையின் அர்த்தத்தை இழந்து தனக்கு தானே சுமையாகிப்போகின்றார்கள்.

உடலால் உள்ளத்தால் அறிவால் மனிதன் வளர்ச்சி அடையும் ஒவ்வொரு படியிலும் தடையாக  ஒரு திருப்புமுனை வந்து மனிதனை திரும்பிப்போ என்கிறது, அந்த திருப்பு முனையை திருப்பி பாலமாக்கி வழியாக்குபவன் மட்டும் வாழ்க்கையில் உயர்ந்தவனாக உன்னதமானவனாக ஆகுகின்றான்.

மானிட மனத்தின் அக  ஆழங்களாய் அமைந்திருக்கும் காமம் குரோதம் மோகம்  லோபம் மதம் மாச்சர்யம் என்னும் ஆறுவகை இயல்புகளும் மானிடனுக்கு திருப்புமுனைகளை ஏற்படுத்தும் தடைக்கற்களாக நிற்கின்றன. காமம் உடலுக்கு திருப்புமுனையை ஏற்பத்த தடையாக காத்திருக்கிறது. மோகம் உள்ளத்திற்கு திருப்பு முனையை ஏற்படுத்த தடையாக  காத்திருக்கிறது. மதம் அறிவுக்கு திருப்பு முனையை ஏற்றபடுத்த தடையாக  காத்திருக்கிறது. குரோதம் உயிர்களின் இணைப்புக்கு திருப்பு முனையை ஏற்படுத்த தடையாக  காத்திருக்கிறது. லோபம் புகழுக்கு திருப்புமுனையை ஏற்படுத்த தடையாக  காத்திருக்கிறது. மாச்சர்யம் வளச்சிக்கு திருப்பு முனையை ஏற்படுத்த தடையாக     காத்திருக்கிறது.

காமம் உடல் சார்ந்து எழும் திருப்பு முனை என்பதால் மனிதன் முதலில் சந்திக்கும் பெரும் தடையே அதுதான். அந்த தடையை சரியாக கையாண்டு தடைதாண்ட முடியாதவன் மற்ற   ஐந்துதடைகளையும் தன்னை நோக்கி தானே இழுத்து மடிகின்றான்.

நீர்க்கோலத்தில் நளன் அறியும் காமம் உலகில் உள்ள அனைத்து ஆண்குழந்தையும் பதின்பருவத்தில் அறியும் முதல்தடை என்பதை  உணர்ந்து, அதனால் ஆண் குழந்தையின் இளம்  உள்ளம்படும்பாட்டை விளக்கி அதில் இருந்து கரையேற நீர்க்கோலம் காட்டும் வழி மிகமிக அற்புதமானது. நீர்க்கோலம் இன்று கதை அல்ல வாழ்க்கை என்று தன்னை நிருப்பித்து காட்டுகின்றது.

ஆண் குழந்தையின் உள்ளத்தில் பெண் அன்பாக வண்ணமாக நெகிழ்வாக   அன்னை என்றும் சகோதரி என்றும் ஒரு உருவம் இல்லா உணர்வாக இருக்கிறாள். அந்த உணர்வு உடைந்து பெண் முழுவதும் ஒரு உருவம் என்று ஆகும் தருணம் ஒன்று யாராலோ வந்து வாய்கின்றது. அன்று பெண் முழுவதும் சதையாக தெரிகின்றாள். அங்கு அந்த கணத்தில் மனதால் வழுக்கி விழுகின்றான் ஆண். வழுக்கி விழுந்தவன் எழமுடியாமல் கரையேறமுடியாமல் தவிக்கின்றான். வெளிச்சம் தேடித்தேடி இருட்டுக்குள் மூழ்குவதுபோல் இன்னும் இன்னும் ஆழத்தில் விழுந்தவர்கள் அதிகம். அறையிருட்டில் இருந்து எழுந்து சென்று கானக இருட்டில் விழுந்து துயிலும் நளன்போல அவர்கள்.
இருட்டில் விளக்கு வைத்ததுபோல, பாலையில் ஊற்று சுரப்பதுபொல சிலருக்கு அசனன் கிடைக்கிறார்கள். அசனன் கிடைத்தவர்கள் பெண் சதையால் ஆனவள் அல்ல என்று அறிகின்றார்கள். அசனன்கள் அவர்களுக்கு நீர்தெளித்து கழுவி விழிக்க  வைக்கிறார்கள். விழித்துக்கொண்ட நளன்கள் பெண் பேரண்ட அன்னை என்று பெண்ணுக்குள் காண்கின்றாார்கள். . உடலுக்கு தடைகம்பாக வந்து நிற்கும் காமம் அவர்களுக்கு உடலின் அர்த்தத்தை அர்த்தப்படுத்தும் கலைக்கொம்பாக எழுகின்றது.

காமம் ஒரு உணர்வு அதை யாராலும் புரிந்துக்கொள்ள முடியவில்லை அதை சொல்லாக்கும்போது புரிந்துக்கொள்ளக்கூடிய கருத்தாகிவிடுகின்றது. காமம் கருத்தாகும்போது அதை எளிதில் புரிந்துக்கொண்டு தாண்டிவிட முடிகின்றது. என்று விளக்கும் இன்றைய அசனமுனிவரின் வார்த்தைகள் வெறும் சொற்கள் அல்ல வாழ்க்கையின் பாடம். 

கூறுக, உரிய சொல்லாக்குவது மட்டுமே உணர்வுகளை வென்று செல்வதற்கான வழி. புரிந்துகொள்ளப்படாமலிருக்கையிலேயே அவை உணர்வுகள். புரிந்துகொள்ளப்பட்டவுடன் அவை கருத்துக்கள். உணர்வுகளுக்கு மாற்றும் விளக்கமும் இல்லை. கருத்துகளுக்கு அவை உண்டுஎன்று அசன முனிவர் சொன்னார். அத்தகைய சொற்களை அவன் கல்விச்சாலையில் வெறும் பாடங்களென கேட்டிருந்தான். அன்று அவை வாழ்க்கை எனத் திரண்டு நேர்முன் நின்றிருப்பதுபோல் தோன்றின

இன்றைய நீர்க்கோலம்-7 பகுதியை பதிமவயதில் ஒரு மாணவன் படித்து புரிந்துக்கொண்டுவிட்டான் என்றால் அவன் கையில் வாழ்க்கை வானம் தொட்டுவிடும் தூரம்தான்.

பெரும் உண்மைகளை புரிந்துக்கொள்ள பெரும் வயது வரவேண்டி இருக்கிறது. வயது வந்தால் மட்டும் அல்ல நல்ல நூல்களை படிக்கவேண்டியும் உள்ளது. 

கோதாவரி நதிக்கரையில் தொடங்கி அரண்மனைச்சென்று காட்டில் விழந்து நளன் இந்த மாபெரும் உண்மையை ஒருநாளில் தெரிந்துக்கொண்டு மீண்டு எழுந்து உயர்ந்து விடுகின்றான். அவன் கொடுத்து வைத்தவன்.

வாழ்க்கை என்னும் பெரும் நதியில் உருட்டப்பட்டு காலன்வரும் வரை அந்த உண்மை கையிக்கு தட்டுப்படாமலே உணர்வால் ஆட்டப்பட்டு உள்ளம் நோய்கொண்டு அழிந்து உலகு இருண்டு போன ஆண்களை எண்ணுவதற்கு காலம் பத்தாது.

இன்றைய பகுதி மாணவர்கள் உயிர்த்தெழ கிடைத்த சஞ்சீவினி மூலிகை. ஆண்மைக்கொண்ட ஆண்விருட்சம் விளைவதற்கான விதை விளையும் கனியாக  இன்றைய பகுதியில் உள்ளது. இதை கதையல்ல பாடம்.  நன்றி ஜெ.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.