அன்புடன் ஆசிரியருக்கு
வாசிப்பின்
வெற்றி பதிவினை படித்துவிட்டு கடுமையான ஏமாற்ற உணர்வு எழுந்தது. ஏனெனில்
அது வேறொரு வகையில் நான் சொல்ல நினைத்தது. பெரும்பாலும் இது அடிக்கடி
எனக்கு நடக்கும். தாமதப்படுத்துவதால் எழும் ஏமாற்றம்.
ரங்கப்பரின்
பாத்திர உருவகம் ஒரு வகையில் டால்ஸ்டாயின் பீயர் தான். டால்ஸ்டாய்
உயர்குடிகளின் மீது வெறுப்பும் தானும் அதைச் சேர்ந்தவன் என்பதால் மெல்லிய
குற்றவுணர்வும் கொண்டவர். பீயர் நெஹ்லூதவ் என அவரை பிரதிநிதித்துவம்
செய்யும் பாத்திரங்களில் அந்த குற்றவுணர்வையும் ஏளனத்தையும் காண முடியும்.
அதிலும் நெஹ்லூதவில் அது மிக அதிகம். ஆனால் ரங்கப்பரிடம் அது இல்லை.
வெற்றி
வாசித்த போது நான் எண்ணிக் கொண்டது இதைத்தான். டால்ஸ்டாயின்
எழுத்துக்களிலும் இந்த "பெண் கைப்பற்றல்கள்" நிகழ்கின்றன. அது குறித்த
விளையாட்டுத் தனமான விவாதங்களும் நிகழ்கின்றன. ஆனால் வெற்றி மட்டும் ஏன்
கொந்தளிக்கச் செய்கிறது. ஏனெனில் அது "இங்கு" நிகழ்கிறது என்ற எண்ணம்.
இப்படித் தோன்றியதுமே மனம் எளிமையடைந்து விட்டது.
நவீன
சமூகத்துக்கு பெண்கள் பழகவே இல்லை என்பது என் எண்ணம். அல்லது
பழகவிடப்படவில்லை.நன்கு படித்து நன்றாக சம்பாதித்து ஒரு வார்த்தை மறுசொல்
உரைக்காமல் தன் ஊதியத்தை வீட்டில் அளிக்கும் பெண்கள் பலரை எனக்குத்
தெரியும்.
ந.பிச்சமூர்த்தியின்
கருப்பி புதுமைபித்தனின் அம்மாளு அசோகமித்திரனின் ஜமுனா ஜெயகாந்தனின்
கங்கா உங்களின் தேவகி விமலா இப்போது லதா போன்றவர்களை மேற்சொன்னவர்களின்
வரிசையில் வைக்க முடியாது. அவர்கள் ஜனநாயக யுகத்துக்கு தன்னை பழக்கிக்
கொள்ளும் சமூகத்தின் பலியாடுகள். சுயம் என ஒன்று உருவானவர்கள். அதனால்
நிலைகொள்ள முடியாமல் தடுமாறுகிறவர்கள்.
மரபான
இந்திய ஆண் மனம் பெண்ணுக்கு சுயம் உருவாவதை மூர்க்கமாக எதிர்க்கவே
செய்கிறது. அவளுக்கென அரசியலோ சமூகப் பார்வையோ இருப்பதை அது விரும்புவதே
இல்லை. ஆண்கள் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளும் "ஆபத்து" இல்லாத சித்தாந்தம்
பெண்ணியம் தான். ஏனெனில் அது ஒரு மோஸ்தர் மட்டுமே. பேராசிரியர் டி.தருமராஜ்
சொல்வது போல அதுவொரு "விடலைத்தனம்". அது இந்தியப் பெண்ணிடத்தில் எந்த
மாற்றத்தையும் உருவாக்கிவிடாது.
கோடிக்கணக்கானவர்களை
கொன்றழித்திருந்தாலும் மேற்கு ஜனநாயகத்தின் வாயிலை நோக்கி நம்மை இழுத்துச்
சென்றிருக்கிறது. அமெரிக்கா அதை வலுப்படுத்தி இருக்கிறது. ஆகவே
அச்சிந்தனைகளின் தாக்கம் இன்னும் கால் நூற்றாண்டாவது நம்மிடம் நீடிக்கவே
செய்யும்.
வெண்முரசின் பெண்கள் குறித்து மட்டுமே தனியே எழுத வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது.
சத்யவதி
தொடங்கி இன்று வாசித்துக் கொண்டிருக்கும் தமயந்தி வரை பெண்களின் நிமிர்வை
சுயத்தை தான் சொல்கிறது வெண்முரசு. எம்.டி. வாசுதேவன் நாயரின் திரௌபதி
மிகச் சிறியவள்.கணவருக்கென கானேகிய எளிய மனையாட்டி. ஆனால் வெண்முரசின்
திரௌபதி அந்த ஆடலை நிகழத்தும் கரம். இந்த வேற்றுமை தான் வெண்முரசை நோக்கி
என்னை ஈர்த்ததென இப்போது தோன்றுகிறது.
சகுனிக்கு
இணையாக அரசு சூழும் சௌபாளினி கருவை கலைக்க வேண்டிய சூழலிலும் அரசியென
நிமிரும் குந்தி பேரரசியன்றி பிறிதொன்றென தன்னை எண்ணாத திரௌபதி கதை பயிலும்
சுபத்திரை போருக்கெழத் துடிக்கும் சத்யபாமை ஆணென்றே வாழும் சித்ராங்கதை
நூறு குழந்தைகளை தூக்கிப் பிடித்து விளையாட நினைக்கும் துச்சளை ஒற்றைச்
சொல்லில் துரியனை நிறுத்தும் பானுமதி என ஒரு பக்கம் அவர்களின் நிமிர்வைச்
சொல்லும் அதே நேரம் அம்பை தொடங்கி திரௌபதி வரையிலான அவர்களின்
வீழ்ச்சியையும் பிரம்மாண்டமாகவே சித்தரிக்கிறது வெண்முரசு. வேழம் சரிவது
போல ஆலொன்று அடித்தூர் பறித்து எறியப்படுவது போல.
அம்பை தொடங்கி திரௌபதி அவர்களின் அத்தனை வீழ்ச்சிகளுக்கும் தங்களை சுயத்தை மதிக்கும் காத்துக் கொள்ளும் நிமிர்வே அடிப்படையாகிறது.
நன்றி
அன்புடன்
சுரேஷ் பிரதீப்