Friday, June 23, 2017

நீர்க்கோலம் – ஆக்கிய காதலாள்நள தமயந்தி கதையின் முக்கிய அம்சமே ‘ஹம்சம்’ தான். அது தான் நளனிடம் தமயந்தியைப் பற்றி முதலில் கூறுகிறது. தமயந்தியிடமும் அதுவே நளனைப் பற்றி அறிவிக்கிறது. இதை வெண்முரசு அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. ஒரு அன்னத்துடன் இருக்கும் ஓவியத்தின் மூலமாக நளனுக்குள் நுழைகிறாள் தமயந்தி. ஒரு வகையில் ராகவ ராமனுக்குப் பிறகு தன் நாயகிக்காகக் காத்திருந்து, அவளுக்காக மட்டுமே வாழ்ந்தவனாகக் காட்டப்படுகிறான் நளன். இவ்வாறு அன்னம் நளனிடம் வந்து சேர்ந்ததென்றால், தமயந்தியிடம் எவ்வாறாக அமைந்தது என்பதும் மிக அழகாக மறுஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

பொதுவான கதையின் படி அன்னம் தான் நளனைப் பற்றி தமயந்தியிடம் எடுத்துக் கூறி அவளைக் காதல் கொள்ள வைக்கிறது. வெண்முரசு அதை நளனின் ஒற்றர்கள் மூலம், தமயந்தியின் சேடிப் பெண்கள் வழியாக தமயந்தியிடம் கூறப்படுவதாக சொல்கிறது. அவர்கள் வாயிலாக அவளுக்குள் அவனைப்பற்றிய செய்திகள் நுழைக்கப்படுகின்றன. மிகப்பெரிய அடுமனைக் கலைஞன் அல்லவா அவன். காதலையும் ஆக்குகிறான். ஆனால் பிறப்பு, குடிமை, ஆண்மை, வயது, உருவழகு, விழைவு, அருள், செல்வம் என அனைத்தும் ஒத்துப் போனாலும் ஒரு காதலை ஆக்கிவிட முடியுமா என்ன? அதுவும் தமயந்தி போன்ற தன்னபிமானம் மிக்க ஒரு பெண்ணிடம்?

அதற்கும் மேல் ஒன்று தேவையல்லவா? அவள் காதல் கொள்ளத் தகுதியானவன் என்பதைத் தான் அவன் அணுக்கர்கள் மூலம் சொல்ல வைத்தான். அதன் மூலம் அவளை அவனைப் பற்றி எண்ண வைத்தான். எத்தனையோ அரச குமாரர்களை சீர்தூக்கிப் பார்த்து தூககி எறிந்தவள் தான் அவள். அத்தகைய ஒருவனாகக் கூட இல்லாமல் இருந்தவன் அவன். அவளது பார்வையை அவன் பால் ஈர்க்கவே அவன் கலியைத் துரத்தி இந்திரனை உயர்த்துகிறான். அவனது புகழை ஒற்றர்கள் மூலம் அவளிடம் கொண்டு சேர்க்கிறான். அச்செயல்களுக்கு அதற்கு மேல் எந்த மரியாதையும் இல்லை. இவையெல்லாம் காதலை உருவாக்கவும் இல்லை. அதற்கு இவற்றிற்கும் மேலான ஒன்று தேவை.  ஆயினும் அவள் உள்ளத்தில் அவன் மீது காதல் ஊறத் தேவையாய் இருந்த அந்த மேலதிக ஒன்று அந்த அன்னம்.

அதுவரை அவன் மீது, தன்னை வெல்ல முயன்றதன் மூலம் தன்னை சிறுமை செய்துவிட்டதாக உச்ச கட்ட கோபத்தில் இருந்த அவளுக்கு அவளது காதலை அவளுக்கே உணர்த்தியதாக அமைந்தது அந்த அன்னம். நளனைப் பற்றிய பேச்சுகள் அவளது காதில் விழத்துவங்கிய பிறகு இயல்பாகவே அவள் அன்னங்களோடு விளையாடுவதைக் குறைத்திருந்தாள், அந்த காதலில் இருந்து அஞ்சி விலகுபவள் போல. மூதன்னையர் முன் அவனை மறக்க சபதம் செய்யக் கிளம்பியவள் முன் தான் நளன் அனுப்பிய அன்னத்தூது வந்து சேர்கிறது. அவள் மனம் அவனை ஒப்புகிறது.

இதற்கு ஷண்முகவேல் வரைந்த ஓவியம் அபாரமானது. நிமிர்வுடன் ஓர் கை வாளைப் பற்ற, மற்றோர் கை அன்னத்தை தழுவி நிற்க அவள் முகமாக அந்த அன்னமே இருக்கிறது. தேவயானி, சத்தியவதி, குந்தி, திரௌபதி என எவரும் அடையாத ஓர் அருங்காதல் அவளுக்குள் பூத்திருக்கிறது என்பதையே, சற்று முன் குருதி கொள் கொற்றவையாக இருந்தவள், மனங்கனிந்த அன்னமாக, நளனுக்கு அன்னையுமாக மாறிவிட்டாள் என்பதையே அந்த ஓவியம் சொல்வதாக எனக்குப் பட்டது.

ஆனால் அக்காதல் அவளுக்குள் முழுமையானதா என்றால் இல்லை என்றே தமயந்திக்குத் தோன்றுகிறது. தான் நளன் மீது கொண்ட காதல் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே அவள் கருதுகிறாள். அதற்கு ஒரு முக்கிய காரணமாக, அவன் மீது அவள் கொண்ட காதலை அவளே அறியாமல் இருக்கக் காரணியாக அவளது தன்னுணர்வு இருக்கிறது. அவர்களின் முதல் கூடலில், அதன் முடிவில், அவள் அரசை ஏற்று வென்று செல்கையில், இறுதியில் நளனின் விலகலைக் கூட பொருட்படுத்தாத வகையில் அவள் இருக்க அதுவே காரணமாகிறது. அதுவே அவள் மீதான நளனின் விலகலுக்கும் காரணமாகிறது. பெரிதினும், பெரிது வேண்டுபவர்கள் சென்று அடைந்தே ஆக வேண்டிய இருள் தனிமை இது. அதையே தமயந்தி அடைகிறாள். ஆயினும் தேவயானி, சத்தியவதி, குந்தி, திரௌபதி என அனைவரிடமிருந்தும் அவள் ஒரு புள்ளியில் வேறுபடுகிறாள்.

ஒரு வகையில் நளன் தன் காதலை ஆக்கியதில் வென்று விட்டான். எனவே தான் அவனால் நிறைவுடன் அவளுடன் வாழ இயன்றது. ஒரு கணத்தில் விலகவும் இயன்றது. அவ்விலக்கம் மீண்டும் என்றுமுள காதலாகக் கனியவும்,  அவள் அந்தியில் தெய்வமேறியவளாக, நுவன்றது ஓர்க்காதவளாக, தூதினை போக்கி, வரும் வழியை நோக்கி நின்றவளாக  அக்காதலை குறைவற உணரவும் கலியின் உதவி தேவையாய் இருக்கிறது. ஆம், ஆக்கிய காதலாள் அல்லவா அவள்!!

நன்றி – கம்பனின் இப்பாடலை நினைவுபடுத்திய திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள்.

அன்புடன்
 அருணாச்சலம் மகராஜன்