Sunday, June 18, 2017

அன்னை




அன்புள்ள எழுத்தாளருக்கு...

வாரணவதம் நிகழ்வுக்குப் பின், காந்தாரியரைச் சென்று சந்திக்கும் விதுரர் அந்நிகழ்வில் கெளரவரின் வஞ்சம் இருக்கலாம் என்று காந்தாரியிடம் கோடி காட்டுகிறார். ஆனால் செளபாலரின் தூண்டுதல் இருக்கலாமே ஒழிய தன்மகன் அச்சிறுமையைக் கொஞ்சமும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டான் என்கிறார் காந்தாரி.

விதுரர் இன்னும் கொஞ்சம் முன் சென்று, ‘துரியோதனர் அவமதிக்கப்பட்டிருந்தார் என்பதால் ஒருவேளை எரிக்கு ஒத்திருக்கலாம்’ என்கிறார். அப்படி இருப்பின் தான் திருதராஷ்டரரிடம் கொண்ட பற்றும் அமைத்த வாழ்வும் பொய்யென்றாகி விடும் என்று பதறிச் சொல்கிறார் காந்தாரி.

வெளியாள் யாருமற்ற அந்தப்புரம். காந்தாரியரும் கொழுந்தனாருமான விதுரரும் மட்டுமே அங்கிருக்கின்றனர். தன்மைந்தரை மன்னிக்கவும், தவறிழைத்திருப்பின் அதிலிருந்து தப்ப வைக்கவும் திட்டம் போட்டிருக்கலாம். மறைத்திருக்கவும் முயல முடியும். ஆனால், அத்தகைய தனித்த சந்திப்பிலும் காந்தாரி தன் மகன் மேல் கொண்ட பெரு நம்பிக்கையையும் தன் வளர்ப்பின் மீதான உறுதியையுமே வெளிக்காட்டுகிறார்.

பன்னிரு படைக்களத்தில் நகரும் நாடும் சூழ்ந்திருக்க, அத்தனை மக்கள் கண் முன் தன் மகன் இழைத்த பெருந்தீஞ்செயல், அவர் கொண்டிருந்த சுயோதனன் என்ற சிறு மைந்தனின் பிம்பம் மொத்தமும் கலைந்தழிந்து துரியோதனன் என்ற ஓர் ஆண் ஒருவனது இருள் பாதாளத்திற்குச் சரிந்த இழிந்த மனம் வெளிவந்ததைக் காண நேர்கின்றது. கொற்றவைக்கு ஏழு எருமைகளைப் பலி கொடுக்கும் அளவுக்குப் பெரும் கொந்தளிப்பை அடைகின்றார். தான் கொண்ட எண்ணங்கள் அனைத்தும் கைவிட்ட இறகுகளாகப் பறந்து சென்று விட்டன என்று அறிகிறார்.

துரியனைப் பற்றி அவரது அன்னை கொண்டிருந்த பெரு மதிப்பை அறிந்தவரான விதுரர் மட்டுமே அதை உணர்ந்து சொல்கிறார், ‘அரசருக்கு இனி அன்னை இல்லை’ என்று.

நன்றிகள்.

அன்புடன்,
இரா.வசந்த குமார்.