Tuesday, June 6, 2017

பேரறத்தான்





அன்புள்ள ஜெ. வணக்கம்.

பேரறத்தான் ராமன். 

அறம் மட்டும் இருந்தால் ராமன் ஆகிவிடமுடியுமா? ராமனாதல் என்பது அறத்தால் மட்டும்  செதுக்கப்படக்கூடிய உயிர் சிற்பமா?

உலக வாழ்க்கை என்னும் பெரும்பாறையில் இருந்து ராமனை அறம்தான் செதுக்கி உலகுக்கு காட்டுகின்றது. அறம் செதுக்கும் சிலைக்கு தியாகம் இரத்தம் கொடுக்கிறது, மெய்மை உயிர் கொடுக்கிறது. அறம் ராமனின் வெளிவடிவத்தை செதுக்கி வைக்கிறது என்றால் உள்ளுயிரை மெய்மைதான் கொடுக்கிறது. ஒருவன்மீது விழுந்து செதுக்கும்  அறத்தை நாம் பார்க்கமுடியும் ஆனால் ஒருவனுக்குள் இயங்கி சக்தியளிக்கும் மெய்மையை நாம் பார்க்கமுடியாது உணரமுடியும் அதுவும் அவன் வெளிப்படுத்தும் விதத்தில்தான் உணரமுடியும். 

நளன் மாற்றம்தாய் மகன் புஷ்பாகரனை  சிறந்தவீரனாக உருவாக்கி தனக்கு வலதுகரமாக வைத்து உள்ளான். ராமனுக்கு லட்சுமணன்போல் உள்ளன். புஷ்பாகரனை லட்சுமண்போல் ஆக்கியது நளனின் அறம். புஷ்பாகரன் நளனுக்கு லட்சுமணன்போல் உள்ளது புஷ்கரனின் அறம். அண்ணன் என்னும் அறத்தையும், தம்பி என்ற அறத்தையும் உலகம் அறிகின்றது. ஆனால் அவர்களின் மெய்மை என்ன? காலம் ஒரு சோதனை வைக்கிறது, இது தம்பிக்கான சோதனை இல்லை அண்ணன் நளனுக்கான சோதனை. 

தமயந்தி சுயம்வரத்தில் நளனுக்கு சமமாக  புஷ்பாகரனுக்கு நளன் வாள் ஏந்தும்  இரண்டாம் இடம் கொடுக்கும் சூழல் உருவாகின்றது. அப்படி கொடுப்பது எதிர்கால புஷ்பாகரன் மனதில் அரசியல் ஆசையையும் குழப்பத்தையும் உண்டாக்கும் என்று அரசியல் அறம் இன்று அவர்கள் இடையில் கோடுகிழிக்கும்போது நளன் புஷ்கரன் இடத்தில் தன்னைவைத்துப்பார்த்து அரசியல் அறத்தைத்தாண்டி, மானிட உள்ளத்தின் கீழ்மையை வென்று அவன் எனக்கு லட்சுமணன் என்றால் நான் அவனுக்கு ராமன் என்று தனது மெய்மையின் வடிவத்தைக்காட்டுகின்றான். புஷ்பாரனின் புறவடிவாகிய அறத்தைதான் நளனால் பார்க்கமுடிகின்றது அதன் மூலமே தனது உள்ளத்தின் மெய்மையின் வடிவத்தை நளன் உலகுக்கு காட்டுகின்றான். அதன் மூலமாக மெய் தாங்கும் உள்ளங்கள் ராமனாகின்றது என்பதை அறிகின்றோம். இப்படிப்பட்ட. மெய்மையின் உயிரே அறத்தின் உடலையும் பெற்று மண்ணில் காலத்தை வென்று வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது.

இன்றை அத்தியாத்தின் மூலம் பேரறத்தான் என்பது பெரும்மெய்மையின் அகத்தான் என்றும் ராமன் மூலம் நளனையும், நளன் மூலம் ராமனையும் அறியமுடிகின்றது.   

அறம் தன்னை  ஒளியூட்டிக்கொள்ள நினைக்கும்போதெல்லாம், மெய்மையின் கனலில் மனிதனை தீமிக்க வைக்கிறது. 

இலர்பலர் ஆகியகாரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். 


அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.