Thursday, June 15, 2017

நீர்க்கோலம் - காய்ந்த வாகை நெற்றுகள்



 



நகுலனும், சகதேவனும்  ஒருவரை ஒருவர் பிரியும் பகுதியில் நகுலனின் உணர்வுகள் மிகத் தெளிவாக வந்துள்ளன . சகதேவன் எவ்வாறு உணர்ந்தான்? துறந்து விடுவது என முடிவெடுத்து விட்டான், ஆனால் அவனால் அது எளிதாக இயன்றதா? இல்லை. அவன் உள்ளூர எரிந்திருக்கிறான். நகுலனைப் பிரிதல் என்னும் எண்ணம் அவனுள் இருந்திருந்தாலும் அவன் அதை எதிர்கொள்ளும் சமயம் மிகவும் துயருற்றிருக்கிறான். வெண்முரசு இதை உவமைகள் மூலம் சொல்கிறது. முழு முடி களைய நாவிதன் முன் அமர்ந்திருக்கும் அவனது களையப்பட்ட முடிகளை "காட்டுத்தீயில் எரிந்த சருகின் கரிச்சுருள் போலகாய்ந்த வாகைநெற்றுக்கள்" எனக் கூறுகிறது வெண்முரசு


காய்ந்த வாகை நெற்றுகள் காற்றில் ஒலியெழுப்பிக்கொண்டே இருப்பவை. நகுலனின் நினைவுகள்.... அப்படித்தான் அவனில் இருந்திருக்கக் கூடும். அவர்கள் பேசிக்கொண்டே, ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டே இருப்பவர்கள். அப்பேச்சு, அந்தத் தொடுகை அவர்களின் உடலின் ஒரு பகுதி போல. அதைத் துறக்கிறான். துறக்க வேண்டும் என்ற விழைவு இருந்த காரணத்தால் அது அவனுக்கு இயல்கிறது. அவன் துறந்ததை "தேவையே அற்ற இத்தனை எடையை தன்னுணர்வே இல்லாமல் தலையில் தாங்கியிருக்கிறோம் என்று எண்ணியபோது புன்னகை வந்தது.", எனச் சொல்கிறது வெண்முரசு. அவன் நகுலனின் மரணத்தைச் சொல்வது இன்னும் நுட்பமானது. தன்னுடனான போரில் நகுலன் மரித்ததாகச் சொல்கிறான். என்றென்றைக்குமாக அவன் அறிந்த நகுலன் இறந்து விடுகிறான். அதேபோன்று தான் நகுலன் அறிந்த சகதேவனும் இறக்கிறான். இனி இருவரும் இரு வேறு மனிதர்கள்.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

அருணாச்சலம் மகராஜன்