அன்புடன் ஆசிரியருக்கு
வண்ணக்கடலை
மிருதுவான பட்டில் பொதிந்து கொடுப்பது இளநாகன் வழியே விரியும் சூதர்களின்
சொற்கள். வெண்முகில் நகரத்தில் ஒரு பெருங்களத்தில் நிகழும் ஆடலை பூரிசிரவஸ்
மற்றும் சாத்யகியின் பார்வைகள் வழியே தரிசிக்கும் போது மட்டுமே அதன்
பிரம்மாண்டத்தை உணர முடிகிறது. கிராதத்தின் உக்கிரத்தை நிலைப்படுத்துவது
சண்டனின் சொற்களே. அவன் ஒருபோதும் உக்கிரசிரஸுடன் இணைய முடியாது. அவன் வழி
தனிதான். மாமலரின் முண்டன். எல்லாவற்றின் மீதும் கசப்பு கொண்ட ஒருவன்
தலைமேல் எழ முண்டனால் மட்டுமே முடிகிறது.
பிருகந்நளைக்கு முன்னரே முக்தன் அறிமுகம் கொள்கிறான்.
"ஊதி பஞ்சென தன்னை அவள் விலக்குவதாக உணர்ந்தான். எடையின்றி பறந்து சென்று அறைச்சுவர் அருகே மெல்ல படிந்தான்."
இவ்வரிகள் உண்மையில் ஒரு பெருநிலை தான்.
பல
இடங்களில் மகாபாரதத்தின் மையப்பாத்திரங்களை விட இவர்கள் வலுவாக எழுந்து
விடுகிறார்கள். முக்தனுடனும் பூரிசிரவஸுடனும் பொருத்திக் கொள்ளும் போது
இவ்வாடலில் நானில்லை, இதை பார்த்து நிற்கும் பேறு பெற்றவன் என்று எண்ணிக்
கொள்ளும் போதும் இன்னும் தீவிரமாக அணுக முடிகிறது வெண்முரசை.
அன்புடன்
சுரேஷ் பிரதீப்