Friday, June 30, 2017

வெண்முரசும் ஆரிய திராவிட பிரிவினையும்




இது பெரும்பாலும் மொழியியலாளர்களின் கூற்றாகவே வந்துள்ளது. முதன் முதலில் திருவிடம் என்பதன் மரூவு தான் திராவிடம் என்ற கருத்தை மூ.சி. பூரணலிங்கம்பிள்ளை (A Primer of Tamil Literature) சொன்னதாக இணையத்தில் உள்ளது. அதுவும் கூட மொழி சார்ந்த ஒரு மாற்றமே. ஜெ வும் கூட திராவிடம் என்பதன் தமிழாக்கமாகவே திருவிடம் எனப் பயன்படுத்தியிருக்கிறார். இனங்களும், மரபணுவும் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.


வெண்முரசில் திருவிடம் என்று வருகின்ற நிலம் மேற்கூறிய வரையரைக்குள்ளாகவே வருகிறது. காஞ்சிக்குக் கீழ் அமைந்த நிலமே தமிழ் நிலம் என வெண்முரசில் குறிப்பிடப் படுகிறது. கிராதம் திருவிடம் என்பதை “அன்னையும் கன்னியும் என்றன்றி இங்கு நிலம் வேறுமுகம் கொள்வதில்லை. பொன்றா பெருந்திருவென அன்னை கோயில்கொண்டிருப்பதனால்தான் இந்நிலம் திருவிடம் என்று அழைக்கப்படுகிறது” என வரையறுக்கிறது. வண்ணக்கடலில் திரு வாழும் நிலம் என்ற பொருள் என்றால், இங்கே திரு – தெய்வம் இருக்கும் இடம், கோவில் என்ற சிற்ப சாஸ்திரப் பொருளில் வருகிறது.

திரு M. ஸ்ரீநிவாச ஐயங்கார் தனது 1914 ஆம் வருடத்திய “Tamil studies or Essays on the history of the Tamil people, language, religion and literature என்ற நூலில் ஜெ கூறிய வாதங்களுக்கு மூலம் உள்ளது. மேலும் இந்நூலில் மேலும் ஒரு ஆர்வமூட்டும் செய்தி உள்ளது. அது திராவிட பிராமணர்களைப் பற்றியது. மராத்திய, கன்னட, தெலுங்கு, குஜராத்தி, துளு பிராமணர்களில் தென்னகத்தைச் சார்ந்த ஒரு பிரிவினர் இவர்கள். (பஞ்ச கௌடா – பஞ்ச திராவிடர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்!!) தங்கள் பெயரின் பின்னொட்டாக ‘திராவிடர்’ என்பதை இணைத்துக் கொள்வர். மிகப் புகழ்பெற்ற ஒரு திராவிடர் – ராகுல் டிராவிட். இன்றும் தொடரும் ஒரு வழக்கம் இது. வந்தேறிகள் ஆரியர்கள் என்றால், இவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை!!

இந்த பஞ்ச திராவிடர்களை முன்வைத்தே கால்டுவெல் கண்டடைந்த ‘வேறு நிலம் நோக்கித் துரத்தப்பட்ட சிறுமைகொள் ஷத்ரியர்களே’ திராவிடர்கள் என்ற வாதத்தை மறுக்கிறார் அய்யங்கார் அவர்கள். சமஸ்கிரதத்தில் ‘திரா’ – துரத்தப்பட்ட, ‘விட்’ – துண்டு (நிலம்) என்ற இரு சொற்களின் இணைவே திராவிடம் என ஒரு சொல்லியல் ஆய்வு இருந்திருக்கிறது. ஆயினும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றே அவர் தெரிவிக்கிறார். திராவிடம் என்பது ஒரு பகுப்பு, ஒரு நிலம் சார் குடி அடையாளம் அவ்வளவு  மட்டுமே. சங்கரர் கூட திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்றே அழைத்திருக்கிறார். மொத்தத்தில் திராவிடர்கள் என்பதற்கு இன ரீதியான ஒரு முக்கியத்துவம் இல்லை. அவையெல்லாம் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் ‘ரூம்’ போட்டு யோசித்ததால் வந்தவையே.




அருணாச்சலம் மகராஜன்



ஆரியவர்த்தம் 4

 

ஆரியவர்த்தம் 2