Tuesday, July 17, 2018

கற்றலின்பம்



அன்புள்ள ஐயா
செந்நா வேங்கை 44 படிக்கையில்  ‘கற்றுச் சொல்லி’ என்ற சொல்  மனதை நிறுத்தியது. பாஞ்சாலியின் மணத்தன்னேற்பில் கேட்டுச்சொல்லி என்ற சொல்லாக்கத்தை நினைவுறுத்தியது
தங்கள் தளத்தால் உந்தப்பட்டு ‘என் சரித்திரம்’ (டாக்டர் உ வே சா) படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களிடத்தே ஏடுகளைக் கற்றுச் சொல்லி பணி ஆற்றியது குறித்து எழுதுகிறார். ஒரு அரிய சொல் இரு நூல்களில் பழகி வந்துள்ளது ஒரே நாளில் எதிர்கொள்ளப்படுவது , அச்சொல் நம்மிடம் எதோ சொல்லவருவதாகத் தெரிந்தது.  வெண்முரசு மகாகாவியத்தின் விரிவும் புலப்பட்டது.

இதுவரை அறிவுத்துறையில் நிகழ்ந்த காலம் கடந்த ஒளித்துளிகள் எல்லாம் உங்கள் தளம் மூலம் வெளிப்படுவது போல உள்ளது.

ஒரு சொல் அல்லது எண்ணம் தானாக எதிர்ப்படும் அதே நேரத்தில் அது தொடர்புடைய வேறு செய்திகள் நிகழ்வது சாமானியம் கடந்த, தற்செயல் தாண்டிய ஒரு உயர்குறிப்பு என நம்புகிறேன். டாக்டர் உ வே சா அவர்கள் சீவக சிந்தாமணியை தேடி ஒரு ஜைனர் வீட்டிற்கு செல்லும்போது அங்கே விழாக்கோலம். அப்போது தான் சிந்தாமணி ‘பாராயணம்’ முடிந்துள்ளது. அற்புத தற்செயல்! (செட்டியாராகவும் ஜைனராகவும் 150 ஆண்டுகள் முன் வரை இருந்துள்ளனர் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. இது குறித்து அருகர்களின் பாதையில் சொல்லி இருக்கிறீர்களா?)

இந்த குறிப்புணர்த்தும் செய்திகளை நமக்கு வழங்குவதற்காக காத்துக்கொண்டிருப்பது எது? சமூக மொத்த நனவிலி, முன்னோர்களின் நினைவுடல் அல்லது ‘அது’ விசும்பில் நம்முடன் பேச விரும்பி விசும்பலுடன் காத்துக்கொண்டிருக்கிறதா?

கம்ப ராமாயண புத்தகம் வாங்க ஏழு ரூபாய்க்காக 20 மைல் மாயூரத்திலிருந்து ஓடிய உ வே சா அவர்களையும் மொத்த சம்பளமாகிய ஏழு ரூபாயை அப்படியே தந்த அவர் சிறிய தந்தையாரையும் எண்ணி வியப்புற்றேன். உ வே சா நீலி அம்மனை பாடி அருளியுள்ளார். காடு நிழலாடியது. கூடவே ‘காட்’டில் குடும்பத்தால் வெறுக்கப் பட்டு திண்ணையில் கம்ப ராமயணத்தில் திளைத்த நாடாரும்.  
மாபெரும் வரலாற்றுப் பரப்பில் முன்னோர்கள் வாழ்வின் சிறு துளைகளை மட்டுமே நமக்கு அருளி உள்ளனரா? கீழடிக்கடியிலும் புகார்க்கடலின் ஆழத்திலும் புதைந்துள்ளவர்கள் நம்மிடம் சொல்ல விரும்புவதென்ன?
உதரவிதானத்திற்குக் கீழே மட்டும் வாழ்வதிலிருந்து உதறிவிட்டெழுவது எங்ஙனம்?
இவ்வெல்லாக் கேள்விகளையும் ‘கற்றுச் சொல்லி’ என்ற சொல் கிளர்த்திவிட்டது. 
கம்பராமாயணம், சிவஞான போதம் போன்ற நூல்களில் பாடம் கேட்க வேண்டும். அதற்கு முன் பொருளியலில் ஆகாறு அளவும் போகாறு அகலாமையும் பழகிட வேண்டும். இதற்கும் தங்கள் தளமே வழிகாட்டியுள்ளது.
வழிவழி வரும் துறைபோகிய நல்லாசான்களின் ஆசி , பெற்றோரையும் விடுத்து கற்றலை நோக்கி உ வே சா அவர்களை உந்திய ஞானத்தேடல் உலகெங்குமுள்ள ஆர்வலர்களுக்குக் கிட்ட வேண்டும்.  தீவிர இலக்கிய கற்றலுக்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
ஆர் ராகவேந்திரன்